2025 மே 09, வெள்ளிக்கிழமை

’சீனர்களை சுகபோகமாக வேலை செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளது’

Niroshini   / 2021 ஜூன் 29 , பி.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

நாட்டை பிரிக்க முனைவதாக பல தமிழ் மக்களைப் பிடித்து சிறையில் அடைக்கும் இந்த அரசங்கம், மிதக்கும் கொட்டகை அமைத்து, அங்கே சுகபோகமாக வேலை செய்ய அனுமதித்துள்ளதென,  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

கிளிநொச்சி - பூநகரி, கௌதாரிமுனையில் உள்ள  சீன நிறுவனத்தினால் அனுமதியற்ற முறையில் அனுமதிக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணை தொடர்பில், இன்று (29) பார்வையிட்டப்  பின்னர் ஊடகங்களுக்ககு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், குறித்த பகுதியில் மக்கள் காலாகாலமாக தொழில் செய்து வருகின்ற இடமாக இருக்கின்றதெனவும் அவ்வாறு கடல் தொழிலில் ஈடுபடுகின்ற மக்களின் சம்மதம் எதுவும் பெறப்படாமல், கடலட்டை வளர்ப்பதற்கும் அவர்கள் தங்குவதற்கான மிதக்கும் கொட்டகையும் அமைத்துள்ளார்கள் என்றும் சகல வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

அரியாலையில் இருக்கின்ற தேசிய நீரியல் அபிவிருத்தி திணைக்களத்தின்  ஓர் அலுவலகத்தில் இதற்கான அனுமதி பெற்ப்பட்டிருப்பதாக தகவல் இருக்கின்றது. ஆனால் எந்தவிதமான ஆவணமும் அவர்களால் இன்றைய தினமும் காட்டப்படவில்லை என்றும், அவர் கூறினார். 

"ஒரு வெளிநாட்டவர் எவ்வாறு இலகுவாக வந்த இந்த இடத்திலே இடத்தை பிடித்து கடலலட்டை வளர்க்கின்ற செயற்பாடு இடம்பெறுகின்றது என்பது ஒரு கேள்வியாகின்றது. இதனை சட்டவிரோதமான நடவடிக்கையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

"இது தொடர்பான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். திஸ்ஸமகரகமவில்,  இராணுவத்தினரின்  ஒப்பான உடையுடன் சீனர்கள் சிலர் நின்று வேலைகளில் ஈடுபடுகின்றமை தொடர்பில முறைப்பாடுகள் எழுந்ததை அடுத்து அது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது. அது தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

"ஆனால், இங்கே அது தொடர்பாக ஆட்சேபனைகள் எழுந்திருக்கின்றபோதிலும் கூட, அந்தச் செயற்பாடுகளை நிறுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழர்களின் பிரதேசத்தில் அந்நியர்கள் வந்து, இந்த பிரதேச மக்களின் அனுமதியில்லாமல் உள்நுழைந்திருப்பது என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

"இந்தப் பிரதேசத்தில், வீணாக ஒரு பதட்டத்தை  ஏற்படுத்தவதற்கு இந்த அரசாங்கம் அனுமதித்திருக்கின்றதா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. அல்லது சீனர்கள் என்றதும் அரசங்கம் நடவடிக்கை எடுக்க அஞ்சுகின்றதா என்ற கேள்வியும் இருக்கின்றது.

"தமிழர்கள் சில காரியங்களை செய்கின்றபொழுது, சம்மந்தம் இல்லாமல் அவர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக எத்தனையோ பேரை பிடித்து சிறையில் அடைத்துள்ளார்கள். ஆனால் எங்கிருந்தோ வந்த சீனர்கள் மிதக்கும் கொட்டகை அமைத்து,  சுகபோகமாக  வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள்," எனவும் எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X