2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

தமிழ்த் தலைவர்கள் பல தவறுகள் இழைத்தனர்

Freelancer   / 2023 பெப்ரவரி 06 , பி.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

சிங்கள தேசத்தின் சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னரும் தமிழ்த் தலைவர்கள் எதிர்கால நோக்கம் இல்லாமல் பல தவறுகளை இழைத்தனர். அவர்கள், கொழும்பு ஆடம்பர வாழ்க்கையை விரும்பினர். சுதந்திரக் போராட்ட காலத்தில் தமிழ்த் தலைவர்கள் தமிழ் இறையாமையையோ சமஷ்டியையோ
கேட்காததற்கு கொழும்பு ஆடம்பர வாழ்க்கையே காரணம் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வவுனியா பிரதான தபாலகத்துக்கு அருகாமையில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, வடக்கு - கிழக்கு தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

75 வருடங்களுக்கு முன்னர், 50/50 அரசியல் அதிகாரம் என்று தமிழர்கள் பேசினர். பின்னர் சமஷ்டி பற்றி தொடர்ந்து பேசினார்கள். ஆனால், சமஷ்டி பற்றி பேசுவதன் மூலம் ஒவ்வொரு குடிமகனின் சுயநிர்ணய உரிமையை மறந்துவிட்டார்கள்.

தமிழர்கள் பல தவறுகளை இழைத்தார்கள். சி. சுந்தரலிங்கம் தான் முதலில் சிங்கள ஆட்சியை ஏற்று, டி.எஸ் சேனநாயக்கா அமைச்சரவையில் அமைச்சர் பதவியை ஏற்றார். சில வருடங்களின் பின்னர் தமிழீழத்துக்கு அழைப்பு விடுத்தார்.

பல தமிழர்கள் சுந்தரலிங்கத்தைப் பின்பற்றி சிங்கள அமைச்சரவையில் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டனர். இதன் காரணமாக தமிழ் அரசியல்வாதிகள், தமிழர்களின் எதிர்காலம், அவர்களின் இருப்பை மறந்துவிட்டனர்.

தந்தை செல்வா மூன்று தசாப்தங்களாக சமஷ்டிக்காக குரல் கொடுத்தார். பின்னர் தமிழீழம் வேண்டும் என்று குரல் கொடுத்தார் . அதன்பின்னர் வந்த சம்பந்தன்-சுமந்திரன் குழு, எமக்கிருக்கும் 75 வருட அரசியல் அனுபவம், சிங்கள அரசுக்கு எதிரான 35 ஆண்டுகால போர் மற்றும் அதன் வலி, போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, சர்வதேச நீதி உள்ளிட்ட அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, எமது உரிமைகளை ‘எக்கிய ராஜ்ஜா’ மூலம் எப்படிப் பெறுவது என்பது தெரியும் என்று கூறினர்.

13ஆவது திருத்தம், ஏற்கெனவே இலங்கையின் நீதித்துறையால் நிர்வாணமாக்கப்பட்டு பிண்டமாகிவிட்டது . மேலும் 13ஆவது திருத்தம், ஒற்றையாட்சி - சிங்கள ஆட்சியின் கீழ் உள்ளது. இந்தக் காரணத்துக்காக, 13ஆவது திருத்தம் தமிழர்களின் விருப்பமல்ல. தயவு செய்து 13ஆவது
திருத்தத்தையோ சமஷ்டியையோ கோராதீர்கள்; தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை கோருங்கள்.

தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் தமிழ் இறையாமையை பெற முடியும். தாயகத்தில் உள்ள தமிழர்களாகிய நாமும், புலம்பெயர் தமிழர்களும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறோம் என்றார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .