2025 மே 16, வெள்ளிக்கிழமை

தீ அணைப்பு இயந்திரத்துக்குத் தவறான காப்புறுதி

Editorial   / 2020 ஓகஸ்ட் 16 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

யாழ். மாநகர சபையின் தீ அணைப்பு இயந்திரத்துக்குத் தவறான காப்புறுதி செய்தமை தொடர்பிலும் அதனால் தற்போதுள்ள நிலைமை தொடர்பாகவும் உரிய விசாரணைகள் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் பணிப்புரை விடுத்துள்ளாரென, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாநகர சபை  உறுப்பினர் ந.லோகதயாளன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு, 2014ஆம் ஆண்டு 380 இலட்சம் ரூபாய் பெறுமதிக்கு புதிதாக  கிடைத்த தீ அணைப்பு வாகனத்துக்கு வெறும்   68 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியிடப்பட்டு வருடாத்தம் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் காப்புறுதி செலுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், தற்போது குறித்த  வாகனம் 2020-06-16 அன்று  விபத்துக்குள்ளாகி முழுமையான சேதம் அடைந்துள்ள நிலையில், இதனை திருத்த கணிப்பிடும் பெறுமதி ஒரு  கோடியை தாண்டும் என கருதப்படுகின்றது. 

இதனால் ஒரு தொகை நிதி சபையின் பொறுப்பிலேயே செலவிடப்பட வேண்டிய அவலம் அதிகாரிகளின் தவறினால் ஏற்பட்டுள்ளதாகவே கருதுகின்றது. இந்த நிலையில் கடந்த 2020-06-16அன்று விபத்துக்குள்ளான வாகனமும் இழுத்து வரப்பட்டு சபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் குறித்த வாகனம் சபைக்கு கிடைத்து காப்புறுதி செய்யப்பட்ட காலத்தில் சபை இயங்கியுள்ளது. இவ்வாறு தவறான காப்புறுதி செய்யப்பட்ட காலத்தில் மூன்று ஆணையாளர்கள் பதவி வகித்த அதேநேரம் 5 ஆண்டுகள் புதிய வாகனத்துக்கு அதே பெறுமதியிலும், அதன் பின்னர் பெறுமதி மதிப்பிடப்பட வேண்டும் என்ற விதிமுறையும் 2019 முதல் மீறப்பட்டமையாலேயே இதனை கண்டுகொள்ள முடியவில்லை.

எனவே, இந்த விடயம் தொடர்பில் உடன் ஆராய்ந்து உரிய நிர்வாக, நிதி நடைமுகளுக்கமைய நடவடிக்கை மேற்கொண்டு, இதற்கான உரிய தீர்வை முன்வைக்குமாறு கோரி, மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளன் வடக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.

இவற்றின் அடிப்படையிலேயே பிரதம செயலாளர் தற்போது மேற்படி பணிப்புரையை விடுத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .