2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’நீராவியடி விவகாரம்; சட்டத்தை மீறி நடக்க வேண்டாம்’

Editorial   / 2019 ஜூன் 11 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - செம்மலை, நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரத்தில், சட்டத்தை மீறி எவரும் செயற்படக் கூடாதென அறிவுறுத்திய தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன், இந்த விவகாரத்துடன் தொடர்புடைய பௌத்த மதத் தேரர், பாதுகாப்புத் தரப்பினர் என அனைவரும், சட்டத்தை மதித்துச் செயற்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

நேற்றைய தினம் (10) முல்லைத்தீவுக்கு விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் உள்ளிட்ட குழுவினர், நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் விகாரை அமைத்துள்ள பௌத்த மதத் தேரர், கோவில் நிர்வாகத்தினர், இராணுவம், பொலிஸார் எனப் பாதுகாப்புத் தரப்பினர் அனைவரையும், முல்லைத்தீவு கச்சேரியில் சந்​தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே, மேற்கண்டவாறு அவர் கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அமைச்சர், இங்கு வாழும் மக்கள்,​ சொந்தபந்தங்கள், சொத்துக்கள் என அனைத்தையும் இழந்துள்ளனர் என்றும், இனியும் அவர்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்றும் கூறியதோடு, இப்படிப்பட்ட மக்களை அடக்கி, ஒடுக்க நினைப்பது தவறென்றும், அது ஏற்கத்தக்கதல்ல என்றும், நீராவிடிய கோவில் விவகாரத்தில் பிரச்சினையை ஏற்படுத்திவரும் பௌத்த தேரரிடம் கூறினார்.

அத்துடன், மதம் என்பது, மக்கள் அனைவரும் அன்பு வழியில் செய்வதற்கான ஒரு மார்க்கமே என்றும் எடுத்துக்காட்டிய அமைச்சர், இவ்வாறான மதங்களை வைத்துக்கொண்டு, மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாதென்றும் கூறினார்.

இதேவேளை, இந்த விடயத்தில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டிய பொலிஸால் தாம் அணிந்திருக்கும் காக்கிச் சட்டைக்கு மதிப்பளித்து நடந்துகொள்ள வேண்டுமென்றும் நீதிமன்றக் கட்டளையை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு, பொலிஸாருக்கே உள்ளதென்றும், பொலிஸாரிடம் கூறினார்.

இந்தச் சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன், வேலு குமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .