2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பழைய முறிகண்டிக் கிராமத்தில் தொடரும் மணல் அகழ்வு

Princiya Dixci   / 2016 மே 22 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு துணுக்காய் பழைய முறிகண்டிக் கிராமத்தில் கடந்த ஆறாண்டுகளாக தொடரும் மணல் அகழ்வினால் கிராமத்தின் வளம் அழிக்கப்பட்டு வருவதாக இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கிராமத்தின் ஆற்றுப்படுக்கைகளில் பெருமளவு காடு அழிக்கப்பட்டு மணல் கொண்டு செல்லப்படுவதாக இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மீள்குடியேற்றம் தொடங்கிய 2009ஆம் ஆண்டிலிருந்தே இக்கிராமத்திலிருந்து மணல் டிப்பர்களில் கொண்டுசெல்லப்படுகின்றது. கிராமத்திலிருந்து மணல் கொண்டு செல்லப்படுவது தொடர்பாக துணுக்காய் பிரதேச செயலர், முல்லைத்தீவு மாவட்டச் செயலர், வடமாகாண விவசாய அமைச்சர், வடமாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு மக்கள் நேரடியாகவும் கடிதமூலமாகவும் தங்களுடைய கிராமத்தில் தொடரும் மணல் அகழ்வு தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளனர்.

பழைய முறிகண்டிக்குளத்தின் கீழான மணல் அகழ்வினால் குளத்தின் கட்டுமானங்களுக்கு அழிவும் வளமான காடு அழிக்கப்படுவதால் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுகின்றது. தொடர்ச்சியாக டிப்பர்கள் மணலுடன் பயணிப்பதனால் கிராமத்தின் வீதி பாதிக்கப்படுகின்றது.

மீள்குடியேற்றத் தொடக்கத்தில் துணுக்காய் பிரதேச செயலகத்திலும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திலும் நடைபெற்ற கூட்டங்களில் மாவட்டத்தின் மணல் மாவட்டச் செயலர், பிரதேச செயலர்களின் ஆளுகைக்கப்பால் தென்னிலங்கை அரசியல்வாதிகளினாலும் பணப்பலம் படைத்தவர்களினாலும் ஏதோவொரு முறையில் பெற்றுக்கொள்ளப்படுகின்ற அனுமதிகள் மூலம் தொடர்ச்சியாக தற்போதும் முல்லைத்தீவு பழையமுறிகண்டி போன்ற கிராமங்களிலிருந்து மணல் வெளியில் கொண்டுசெல்லப்படுகின்றது.

இவை படைமுகாம்கள், பொலிஸ் நிலையங்கள் என்பவற்றைத் தாண்டியே கொண்டுசெல்லப்படுகின்றது. பழையமுறிகண்டிக் கிராம மக்கள் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக தங்களுடைய கிராமத்திலிருந்து தொடர்ச்சியாக மணல் கொண்டு செல்லப்படுகின்றது என அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்தும் தங்களுடைய கிராமத்திலிருந்து மணல் கொண்டு செல்வதைத் தடுக்கமுடியவில்லையென கவலை தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .