2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பிரதேச செயலகம் உருவாகுவதில் எம்.பி தடை

Editorial   / 2019 ஜூன் 15 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - அக்கராயனில் பிரதேச செயலகம் உருவாகுவதில், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே தடையாகச் செயற்படுவதாக பொதுமக்களால் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், அக்கராயன் கிராம அலுவலர் பிரிவுக்கு வருகின்றபோது விரைவில், அக்கராயனில் பிரதேச செயலகம் உருவாகும். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிப்பார்.

வன்னேரிக்குளத்துக்குச் சென்று மக்கள் மத்தியில் உரையாற்றும்போது விரைவில் அக்கராயனில் பிரதேச செயலகம் உருவாகும். அதன் மூலம் வன்னேரிக்குளம் வளம் பெறும் என தெரிவிப்பார். உருத்திரபுரத்துக்குச் சென்று அக்கராயன் பிரதேச செயலகம் உருவாகப் போகின்றது.

அதன்போது உருத்திரபுரம் வடக்கு, கிழக்கு, மேற்கு, சிவநகர் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளின் மக்களை அக்கராயனுடன் இணைய வேண்டாம். கரைச்சி பிரதேச செயலகத்துடன் இணைந்து இருங்கள் எனத் தெரிவிப்பார்.

அக்கராயன் பிரதேச செயலக உருவாக்கத்திற்கு எதிராக உருத்திரபுரம் மக்களை தூண்டிவிட்டு பிரதேச செயலகம் உருவாகுவதை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தனது வாக்கு வேட்டைகளுக்காக பல்வேறு ஆதாரவாகவும் எதிராகவும் மக்களிடம் கருத்துத் தெரிவித்து வருகின்றார்.

2010ஆம் ஆண்டில் இருந்து அக்கராயனுக்கு வருகைதரும் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அக்கராயனில் பிரதேச செயலகம் விரைவில் உருவாகும் எனத் தெரிவித்து பத்தாண்டுகள் நெருங்கும் நிலையிலும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகள் அக்கராயன் பிரதேச செயலக உருவாக்கத்திற்கு எதிரானதாகவே உள்ளது.

வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான்குளம், அக்கராயன், கண்ணகைபுரம், கோணாவில், ஊற்றுப்புலம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுடன் முல்லைத்தீவு துணுக்காயின் அமதிபுரம் கிராம அலுவலர் பிரிவினையும் உள்ளடக்கி அக்கராயனில் பிரதேச செயலகம் உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உருத்திரபுரத்தின் வடக்கு, கிழக்கு, மேற்கு, சிவநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை அக்கராயன் பிரதேச செயலகத்துடன் இணையக் கூடாது என்ற நிலைப்பாட்டில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் 2010ஆம் ஆண்டில் இருந்தே இயங்கி வருகின்றார்.

இதேவேளை வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் கிராம அலுவலர் பிரிவுகளில் 1,000 குடும்பங்களும் ஸ்கந்தபுரம், அக்கராயன் கிராம அலுவலர் பிரிவுகளில் 1,800 குடும்பங்களும், கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் 1,100 குடும்பங்களும், கண்ணகைபுரம் கிராம அலுவலர் பிரிவில் 350 குடும்பங்களும் ஊற்றுப்புலம் கிராம அலுவலர் பிரிவில் 450 குடும்பங்களும் அமதிபுரம் கிராம அலுவலர் பிரிவில் 125 குடும்பங்களும் தற்போது வாழ்கின்றனர்.

1,150 குடும்பங்களுக்கு நெடுந்தீவில் தனிப் பிரதேச செயலகம். இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள் உள்ள வெலிஓயாவில் தனிப் பிரதேச செயலகம் இயங்குகின்ற நிலையில் அக்கராயன் பிரதேசத்தில் 5,000 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்ற நிலையில் தனிப் பிரதேச செயலகத்தினை அக்கராயனில் உருவாக்குங்கள் என கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

உருத்திரபுரம் வடக்கு, கிழக்கு, மேற்கு, சிவநகர் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள 1,600 குடும்பங்கள், அக்கராயன் பிரதேச செயலகத்துடன் இணைவதன் மூலம் பல நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

தனது அரசியல் இலாபத்தினை இலக்காகக் கொண்டு உருத்திரபுரம் நான்கு கிராம அலுவலர் பிரிவுகளின் மக்களையும் அக்கராயன் பிரதேச செயலகத்துடன் இணைய விடாமல் குறித்த மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எதிராகச் செயற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .