2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

அறுபத்தாறு வருடங்களாக நிரந்தரப் புனரமைப்புச் செய்யப்படாத வன்னேரிக்குளம் வீதியை நிரந்தரப் புனரமைப்புச் செய்யுமாறு ஜனநாயக ரீதியிலான போராட்டம் ஒன்றினை முன்னெடுப்பது என, வன்னேரிக்குளம் பொது அமைப்புகள் தீர்மானித்துள்ளன. 

நேற்று முன்தினம் (11) ஒன்றுகூடிய பொது அமைப்புகள். இத்தீர்மானத்தை எடுத்துள்ளன. 

1953ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வன்னேரிக்குளம் குடியேற்றத் திட்டத்துக்கு, தொடக்கத்தில் வீதி அமைக்கப்பட்ட போதிலும் இதுவரை குறித்த வீதி புனரமைக்கப்படவில்லை.

வீதி புனரமைக்கப்படாததன் காரணமாக இக்கிராம மக்கள் அக்கராயன் பிரதேச மருத்துவமனைக்குச் செல்வதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். 

இக்கிராமத்தில் காலபோகத்தில் மட்டும் 363 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், நெல்லை கிளிநொச்சி நகரத்துக்கு எடுத்துச் சென்று சந்தைப்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது. 

குறித்த குன்றுங்குழியுமான வீதி வழியாக வருகைதரும் நெல் வியாபாரிகளும் மிகக் குறைந்த விலையில் நெல்லைக் கொள்வனவு செய்வதாகவும் இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், கடந்த பத்தாண்டுகளில் வன்னேரிக்குளம் கிராமத்திற்கு வருகைதந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் வன்னேரிக்குளம் வீதி புனரமைக்கப்படும் என பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும், அவ்வாக்குறுதிகளை நிறைவேற்றாது கிராம மக்களை ஏமாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனநாயக ரீதியிலான போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து ஜனாதிபதிக்கும் வடமாகாண ஆளுநருக்கும் மனுக்களைக் கையளிப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .