2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மன்னாரில் பெண் கொலை: சகோதரி உட்பட இரு பெண்கள் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், என்.ராஜ்

மன்னார் உப்பளம் பகுதியில், ஓகஸ்ட் 13ஆம் திகதியன்று, பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், உயிரிழந்தப் பெண்ணின் சகோதரி உள்ளிட்ட 2 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரனான இளம் பெண்ணின் மாமனார், தலைமறைவாகியுள்ள நிலையில், தேடப்பட்டு வருகிறார். 

கைதுசெய்யப்பட்ட பெண்கள் நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்தவர்களெனவும், தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்  செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நெடுந்தீவைச் சேர்ந்த டொறிக்கா ஜூயின் (வயது 21 ) என்ற இளம் பெண், கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, மன்னார் உப்பளத்தில் வீசப்பட்டிருந்தார்.

சி.சி.டிவி பதிவில், கொலை செய்யப்பட்ட இளம் பெண், இரு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரும் சென்று மன்னாரில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு உட்கொண்ட காட்சியைப் வைத்து, மன்னார் தலைமையகப் பொலிஸார், மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

ஆரம்பத்தில் அந்தப் பெண்கள் நாவற்குழி என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு அவர்கள் இல்லை. தொடர்ச்சியாக முன்னெடுத்த விசாரணைகளில் கொலை செய்யப்பட்ட பெண் நெடுந்தீவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், கொல்லப்பட்ட இளம் பெண்ணின் சகோதரி (வயது 30), அவரது பெரியதாயின் மகனின் மனைவி ஆகிய இருவரும் நெடுந்தீவில் வைத்து, நேற்று (22) கைது செய்யப்பட்டனர்.

அவர்கள்   மன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. விசாரணைகளின் பின்னர் இருவரும் மன்னார் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.

அத்துடன், தலை மறைவாகியுள்ள 50 வயதுடைய பிரதான சந்தேக நபரான கொலை செய்யப்பட்ட பெண்ணின் மாமனார் தேடப்பட்டு வருகின்றார்.

சகோதரியின் கணவருக்கும் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக, அவரது சகோதரி சந்தேகம் கொண்டுள்ளார்.  இந்தச் சந்தேகத்தால் சகோதரிகள் இடையே முரண்பாடு நீடித்துள்ளது.

இளம் பெண்ணின் தந்தை காலமாகிய நிலையில் தாயார் வெளிநாட்டில் உள்ளார். 

அவரது தாயின் சகோதரன், செட்டிக்குளத்தில் உள்ளார். அவர் வெளிநாட்டு முகவர் நிலையத்துடன் தொடர்புடையவர்.  அதனால் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணை, வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறியுள்ளார்.

அதனால் கொழும்பில் சில ஆவணங்கள் கையளிக்க வேண்டும் என்று தெரிவித்து, சகோதரிகள் இருவரையும் அவர்களது பெரிய தாயின் மகனின் மனைவியையும் அழைத்துக் கொண்டு மன்னார் பயணித்துள்ளார். 

அங்கு நகரில் நடமாடிவிட்டு, உப்பளத்தில் எவரும் இல்லை என அறிந்து இளம் பெண்ணை மூவரையும் அங்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு மாமன் கழுத்தை நெரிக்க மற்றைய இரு பெண்களும் கால்களையும் கைகளையும் பிடித்து வைத்திருந்துள்ளனர். உயிர் பிரிந்ததும் அங்கிருந்து தப்பித்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .