2025 மே 16, வெள்ளிக்கிழமை

மன்னார் புதிய பஸ் நிலையத்தில் முரண்பாடு

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் புதிய பஸ் நிலையத்தில் தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில், தனியார் போக்குவரத்துத்  சேவையுடன் இணைந்து சேவையை மேற்கொள்வதற்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் நகர திட்டமிடல் அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் நகர பகுதியில் பநிர்மாணிக்கப்பட்ட இந்தப் புதிய பஸ் நிலையம், கடந்த மாதம் திறந்துவைக்கப்பட்டு, மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டு, பொது போக்குவரத்துக்கென திறந்து விடப்பட்டிருந்தது.

குறித்த பஸ் நிலையம் அரச மற்றும் தனியார் பஸ்கள் இணைந்து போக்குவரத்து சேவையை வழங்கும் முகமாக அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தனியார் போக்குவரத்து சேவையானது  புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடந்த மாதம் தொடக்கதில் இருந்தே போக்குவரத்து பணிகளை ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் அரச போக்குவரத்து சேவையானது இது வரை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேவையினை ஆரம்பிக்காது,  தற்காலிக பஸ்  நிலையத்தில் சேவையை மேற்கொண்டு  வந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் காலை  அரச போக்குவரத்து சேவைக்கான பஸ்கள், புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேவையை ஆரம்பித்தனர்.

எனினும், அரச பஸ் ஊழியர்கள், தனியார் பஸ் சேவை மற்றும் இணைந்த போக்குவரத்து சேவைக்கு இடையூரை ஏற்படுத்தும் முகமாக அரச பஸ்களை நிறுத்தியதுடன், தனியார் போக்குவரத்து ஊழியர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

இதை தொடர்து,  இன்று காலை  மன்னார் புதிய பஸ் நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

இந்த நிலையில், இரு பஸ் சேவைகளையும் சமரசப்படுத்தும் முகமாக மன்னார் நகரசபையில் மன்னார் நகர சபை தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், பொலிஸார், அரச தனியார் போக்குவரத்து ஊழியர்களை ஒன்றிணைத்து பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

இதன்போது முரண்பாடுகளை கலைந்து, மக்களின் நன்மைக்காக இரு சாராரும் இணைந்து ஒரே தரிப்பிடத்தில் தரித்து இணைந்த  மக்களுக்கான இலகுவான சேவையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடப்பட்டது. 

இருப்பினும், தாங்கள் ஒருபோதும் தனியார் போக்குவரத்து சேவையுடன் இணைந்து செயற்படப்போவதில்லை எனவும் இணைந்து செயற்படும் பட்சத்தில், காலப்போக்கில் முரண்பாடுகள் தோற்றம் பெறலாம் எனவும், தங்களுக்கு தனியான இடத்தை ஒதுக்கி தரவேண்டும் எனவும் அப்படியில்லாவிட்டால், புதிய தரிப்பிடத்தில் தங்களுக்கு என தனி தரிப்பிடத்தை ஒதுக்கி தரவேண்டும் என, இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஊழியர்கள் கோரிக்கை முன் வைத்தனர்.

இல்லாவிட்டால் வடக்கு, கிழக்கு முழுவதும் உள்ள அரச போக்குவரத்து ஊழியர் சங்கத்தினருடன் இணைந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக தெரிவித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஊழியர்கள்,  கலந்துரையாடலில் இருந்து வெளியேறினர்.

அதே நேரத்தில், “நாங்கள் இணைந்த சேவை அட்டவணைக்கு அமைவாக செயற்பட உள்ளோம்.  அரச சேவைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் விட்டு கொடுப்புடன் மக்களுக்கான சேவையை வழங்கி அரச பஸ் சேவையுடன் இணைந்து பயணிக்க தயார்” என, மன்னார்  தனியார் போக்குவரத்து சேவையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், குறித்த கூட்டத்தில் எந்த ஒரு சமரசமும் எட்டப்படாத நிலையில், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இணைந்த சேவையை வழங்காத முடியாத நிலையில் தனியார் பஸ் சேவைக்கு இடையூரை ஏற்படுத்த வேண்டாம் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

குறித்த பிரச்சினை காரணமாக, மன்னார் புதிய  பஸ் நிலையத்துக்கு போக்குவரத்துக்கு என வந்த மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதுடன்,  தொடர்ச்சியாக அரச மற்றும் தனியார் போக்குவரத்து ஊழியர்களுக்கு இடையில் சுமூகமற்ற நிலை காணப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .