2025 மே 03, சனிக்கிழமை

முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளைக் கண்டித்து, இம்மாதம் 15ஆம் திகதி முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து மீனவர்களால் ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு பேரணி, முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் வரை சென்று, அங்கு கொட்டகை அமைத்து போராட்டமாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த முல்லைத்தீவு மீனவர்களை, இன்று (20) சந்தித்த கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தீர்வுகளைப் பெற்றுத்தர முடியாவிட்டால் தாம் பதவி விலகுவதாக தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முன்பாக ஆறாவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்று வந்த நிலையில், நேற்றுக் காலை 8 மணிளவில் போராட்ட இடத்துக்கு அமைச்சர் டக்ளஸ், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தான், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதன், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட  உதவிப் பணிப்பாளர், அதிகாரிகள் உள்ளிட்டவர்கள், மீனவப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளால் தமக்கு ஏற்படுத் பாதிப்புகள் தொடர்பில் மீனவர்கள் அதிகாரிகளுக்கு இதன்போது எடுத்துரைத்தனர். இதனையடுத்து, தன் மீது நம்பிக்கை கொள்ளுமாறும்  தான் குறித்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன் எனவும் கடற்படையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பட்சத்தில், அத்துமீறி வருகின்ற இந்திய மீன்பிடிப் படகுகளை இலங்கை மீனவர்கள் கரைக்குக் கொண்டு வந்து உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தால், அதற்கும் தான்  நடவடிக்கை எடுப்பதாகவும்  அமைச்சர் டக்ளஸ் வாக்குறுதியளித்தார்.

அத்தோடு, மீனவர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் தனக்கு பூரண ஆதரவு வழங்குவதாகவும் இவ்வாறான விடயங்களை செய்ய முடியாவிட்டால் தான் பதவி விலகுவதற்கும் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X