- செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் 841 ஆவது நாளாக தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி கவனயீர்ப்பபு போராட்டம் ஒன்றை நிகழத்தவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்தார்.
இன்று முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார், அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இந்த நேரத்தில் 41 ஆவது ஜக்கிய நாடுகள் சபையின் அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது கடந்த 40 ஆவது அமர்விலும் காணாமல் போனவர்கள் தொடர்பில் சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை நாங்கள் இந்த போராட்டத்தினை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை காட்ட வேண்டும்.
நாங்கள் இன்று பத்து ஆண்டுகளாக காணாமல் போனவர்களை தேடி வருகின்றோம் எங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகளும் உண்ணாவிரம் இருக்கவும் இல்லை போராட்டத்தில் கலந்துகொள்ளவும் இல்லை எங்களைப்பற்றி எடுத்து கதைப்பதற்கு கூட நாதியற்றவர்களாக இருக்கின்றோம்.
இன்னிலையில் அண்மையில் கல்முனை பிரதேசத்தில் பிரதேச செயலக உயர்வுக்காக யாராரோ போராடி இருக்கின்றார்கள் இந்த நிலையில் எங்கள் அரசியல் பிரமுகர்கள் அந்த பிரச்சனையினை கையில் எடுத்து பேசினார்கள் ஏன் எங்கள் பத்து ஆண்டுகளாக காணாமல் போனவர்கள் மற்றும் போராட்டத்திற்கான நீதியினை அரசிடம் இருந்து ஒரு சின்ன பதிலாவது கொண்டுவரவில்லை வெள்ளைவானில் கடத்தப்பட்டுள்ளார்கள், படையினரிடம் ஒப்படைக்கப்பட்வர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று பலதரப்பட்ட பிரச்சினைகளுடன் எங்கள் உறவுகள் காணப்படுகின்றார்கள்.
இவை அனைத்தும் எங்கள் அரசியல் பிரமுகர்களுக்கு தெரியும், அவர்கள் ஒரு சின்ன ஆறுதல் கூட எங்களுக்கு கூறவில்லை ஆனால் அவர்கள் சொல்கின்றார்கள் அதற்காகத்தான் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் கொண்டுவந்துள்ளோம் என்று, அரசின் நிகழ்ச்சி நிரலில் வந்த அலுவலகம் அதற்குள் எங்களை கொண்டுசென்று திணிக்ககூடாது. இவர்களை எந்த ஒரு கோபத்துடனும் நாங்கள் பார்கவில்லை எங்கள் வலியுடனும், வேதனையுடனும் இதனை தெரியப்படுத்துகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.