2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வழக்குத்தொடர்ந்த பெண்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல்!

George   / 2016 நவம்பர் 04 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, கேப்பாபுலவில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி, நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள பெண்களை, இராணுவம் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாக கேப்பாப்புலவு கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.   

கேப்பாபுலவு மக்கள், எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில், நேற்று முன்தினம் மாலை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கேப்பாப்புலவுக்கு நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடிய போதே, அவர்கள் இந்தத் தகவலைத் தெரிவித்தனர்.   

அதேவேளை, இராணுவத்தினர் வசம்மிருக்கும் காணிகளை மீளப்பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு, வடமாகாண முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கையையும், மக்கள் நிராகரித்தனர்.   

முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடலை அண்மித்த காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கேப்பாபுலவு மாதிரிக் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோவிலடியில், கேப்பாப்புலவு மக்களுக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.  

இதன்போது, யுத்தத்துக்குப் பின்னர், இராணுவத்தினர் தொடர்ந்தும் கையகப்படுத்தி வைத்திருக்கும் 600 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை விடுவிக்காததால், தாம் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.  

போரினால் பேரழிவை சந்தித்த தாம், தமது காணிகள் விடுவிக்கப்படாததால் பொருளாதார ரீதியாக மாத்திரமன்றி, சமூக, கலாசார சீரழிவுகளுக்கும் முகம்கொடுத்துள்ளதாகவும் கேப்பாப்புலவு மக்கள் முறையிட்டனர்.   

இதன்போது பதிலளித்த முதலமைச்சர், கோப்பாப்புலவு கிராமத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களிடம் தெரியப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.  

எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இந்தப் பிரச்சினையை, சர்வதேசத்துக்கு தெரியப்படுத்துவதற்காக, நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்வதே சிறந்தது என ஆலோசனை வழங்கினார்.   

எனினும், இதற்கு முன்னர் இராணுவத்தினர் வசம் இருக்கும் காணிகளை விடுவிக்குமாறு கோரி நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்த ஆறு பெண்களுக்கு, இராணுவம் தொடர்ச்சியாக அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் பிரயோகித்து வந்ததால், வழக்கு தொடர்ந்த பெண்களில் பலர் ஒதுங்கிக்கொண்டதாக, சந்திப்பில் கலந்துகொண்ட பெண்ணொருவர் குறிப்பிட்டார்.   

எனினும், இராணுவத்தினரின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் ஒருவர் மாத்திரம் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர், நீதிமன்றத்துக்குச் செல்வதால், தமக்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த வழக்கு தொடர்வதால் அதன் பிரதிகளை அனுப்பி சர்வதேச ரீதியாக அழுத்தங்களை பிரயோகிக்கலாம் என்பதனையே முதலமைச்சர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .