2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘வைத்தியர் சிவரூபனின் கைது கண்டிக்கத்தக்கது’

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாக, அதன் பொதுச் செயலாளர்  செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  வைத்தியர் சிவரூபன் அவர்கள் சட்ட வைத்திய அதிகாரியாக பணியாற்றிய காலப்பகுதியில் அரச படைகளின் துன்புறுத்தல்களினால்  ஏற்பட்ட பதிப்புக்களை மூடிமறைப்பதற்கு இடமளிக்காது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாகவும் நேர்மையாகவும் துணிச்சலுடனும் செயற்பட்டிருந்தாரெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பளை ஆதார வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாகப் பொறுப்பேற்ற பின்னர் வைத்தியசாலையில் பொது மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்பதற்காக வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்துடனும், பிரதேச மக்களுடனும் இணைந்து சிறப்பாகப் பணியாற்றியவர்.

“அவர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை சுமத்தி, கைது செய்திருப்பதானது அவரைப் பழிவாங்கும் நோக்கம் கொண்ட செயலாகும்” எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டமானது, உலகிலுள்ள மிகக் கொடிய சட்டங்களில் ஒன்றாக உள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது அச்சட்டத்தை நீக்க வேண்டுமென 2015ஆம் ஆண்டிலேயே வலியுறுத்தியிருந்தது. இலங்கை அரசாங்கம் அதற்கு இணங்கியிருந்தது.

“எனினும் இன்று வரை அச்சட்டம் நீக்கப்படவில்லை என்பதுடன், அதன் கீழ் கைதுகளும் சித்திரவதைகளும் தொடர்ந்த வண்ணமேயுள்ளது.

“எனவே, கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டுமென நாம் வலியுறுத்துவதுடன், வைத்திய கலாநிதி சிவரூபனையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றோம்” எனவும், அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .