2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்தில் பசுமாடுகள் வளர்ப்புத் திட்டம்

George   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தின்கீழ், கிளிநொச்சியில் பசுமாடுகள் வளர்ப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட 28 பயனாளிகளுக்கு, வடக்கு விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கலப்பினப் பசுமாடுகளை வெள்ளிக்கிழமை (28) வழங்கி வைத்து இத்திட்டத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.   

இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம், விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதி நிறுவனத்தின் இலகு கடன் வசதியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரணைமடுக்குள நீர் வழங்கும் பிரதேசத்தின் கட்டுமானங்களைப் புனரமைத்து, நீர் விநியோகப் பொறிமுறையை சீர் செய்வதன் மூலம் நெல் உற்பத்தியையும், அதனுடன் இணைந்ததாக மறுவயல் பயிர்ச் செய்கையையும் கால்நடை உற்பத்தியையும் ஊக்குவிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.   

இதன் அடிப்படையிலே இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்ததாக, இப்பிரதேசத்துக்குப் பொருத்தமான கலப்பினப் பசுக்களை வழங்கும் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு, இரண்டுக்கு மேல் தங்கிவாழ்வோரைக் கொண்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 208 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.   

இவர்களில் இருந்து முதற்கட்டமாக 28 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு தென்னிலங்கையில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட கலப்பினப் பசுமாடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஏனையவர்களுக்கும் கட்டம் கட்டமாக பசுமாடுகள் வழங்கப்படவுள்ளன.   

இந்நிகழ்ச்சியில், வடமாகாணசபை உறுப்பினர்கள் அ.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம், வை.தவநாதன், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் சி.வசீகரன், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி ந.சுதாகரன் ஆகியோரும் கலந்துக் கெண்டிருந்தார்கள்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .