2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

படையினரின் அத்துமீறலால் 300 ஏக்கர் வயல் நிலம் பாதிப்பு: வடமாகாணசபை உறுப்பினர் சி. சிவமோகன்

Kanagaraj   / 2013 நவம்பர் 16 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தின் இயங்கங்குளம், வாவட்டி, பண்டாரவயல் போன்ற பிரதேசங்களுக்கு விமானப் படையினர் செல்லவிடாமல் தடுப்பதன் காரணமாக 300 ஏக்கர் வயல் நிலங்கள் கைவிடப்பட்டுள்ள நிலையில் அதனை நம்பி தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ளும் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லை மாவட்ட வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் தெரிவித்துள்ளார்.

அப் பகுதி மக்களுடனான சந்திப்பு தொடர்பாக அவரிடம் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இயங்கங்குளம், வாவட்டி, பண்டாரவயல் போன்ற பிரதேச மக்கள் தமது வயலின் மூலமே வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தி வந்தனர். ஆனால் யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இப் பகுதியில் உள்ள 300 ஏக்கர் வயல் நிலங்களுக்கு செல்ல முடியாதவாறு அப் பகுதியில் நிலை கொண்டுள்ள விமானப் படையினர் தடுத்து வருவதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தமது சீவியத்தையே கொண்டு நடத்த முடியாத நிலையில் அப் பகுதி மக்கள் உள்ளனர்.

இது தவிர, முல்லைத்தீவு கொண்டமடு வயல் நிலங்களுக்கு செல்லுகின்ற பிரதான கேப்பாபுலவு- கொண்டமடுப் பாதை இராணுவத்தால் பயன்படுத்த தடைவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொண்டமடுவில் விவசாயம் செய்யும் விவசாயிகள் முள்ளியவளை- ஒட்டிசுட்டான் காட்டுப் பாதை ஊடாகவே நீண்ட தூரம் சென்றே தமது வயல் நிலங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் அங்கு விவசாயம் செய்யும் மீள்குடியேறிய மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இவ்வாறு இராணுவ தலையீட்டினால் மக்கள் விவசாயம் செய்து தமது வாழ்வாதரத்தை கொண்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் எமது மாகாணசபையின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி மீள்குடியேறி மெல்ல மெல்ல எழுந்து வரும் எமது மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ முன்வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X