2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பனங்கட்டுக்கோட்டுக் கிராம மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 08 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


தென்பகுதி மீனவர்களின் வருகையை கண்டித்து மன்னார், பனங்கட்டுக்கோட்டுக் கிராம மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார், சௌத்பார் தென்பகுதிக் கடற்கரையில் தங்கியிருந்து கடற்றொழிலில் ஈடுபடுவதற்காக வருகை தரவுள்ள தென்பகுதி மீனவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே மன்னார், பனங்கட்டுக்கோட்டுக் கிராம மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

மன்னார், பனங்கட்டுக்கோட்டு கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோகங்களை ஏந்தியிருந்ததுடன், பனங்கட்டுக்கோட்டுக் கிராம பிரதான வீதியை மறித்தும்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்த மன்னார் பிரதேச செயலாளர் எஸ்.தயானந்தா, மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் எம்.மெரான்டா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன்  கலந்துரையாடினர்.

இதன்போது  கடற்றொழில்  மற்றும் நீரியல்வளத்துறை அமைச்ச ராஜித சேனாரத்தினவுக்கான மகஐர் ஒன்றை மேற்படி  அதிகாரிகளிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கையளித்தனர்.

மேலும், இந்த மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா, ஆயூப் அஸ்மிம், மன்னார் நகரசபை முதல்வர் எஸ்.ஞானப்பிரகாசம், நகரசபை உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மேற்படி விடயம் தொடர்பாக பனங்கட்டுக்கோட்டு மீனவர்கள் தென்னிலங்கை மீனவர்களினால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பதனையும் இவர்களை உடனடியாக இவ்விடத்தில் இருந்து அகற்றக்கோரியும் இன்று கிராம மட்டத்தில் முதற்கட்டமாக கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

எமது கிராம மீனவர்கள்  தென்னிலங்கை மீனவர்களின் வருகையினால் எவ்வகையில் பாதிக்கப்படுக்கின்றார்கள் என பார்க்கும்போது,

1.எமது பகுதி மீனவர்களில் 60 சதவீதமானோர் 6 மாத பருவகால தொழிலையே நம்பி வாழ்பவர்கள். இக்காலப்பகுதியில் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறிய வருகையால் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைகின்றது.

2.யுத்தத்தில் இருந்து மீண்ட எமது மக்கள் இன்னும் பொருளாதார முன்னேற்றங்கள் அற்ற நிலையிலேயே வாழ்வாதாரத்தை மேற்கொண்டு போகின்ற நிலையில் தென்பகுதி மீனவர்களின் வருகையால் எமது வாழ்வாதாரம் நலிவடைகின்றது.

3.6 மாதகால தொழிலின்றி கடன்பட்டு நகைகளை அடகு வைத்து வாழ்வாதாரத்துடன் பிள்ளைகளின் கல்விச் செலவு, மருத்துவச் செலவு போன்ற செலவுகளைக் கூட இந்த வேளையில் தான் தொழில் செய்து மீட்டுக்கொள்கின்ற காலமாகும். இவ்வேளையில் நாம் எதிர்பார்க்கின்ற எதிர்பார்ப்பை அடைய முடியாமல் எம்மை தென்பகுதி மீனவர்களின் வருகையும் அவர்களது மிரட்டலும் எமது கட்டுவலைத் தொழிலை எமது கடற்பகுதியில் செய்யவிடாமல் கடற்படை ஊடாக தடுப்பதும் எம்மை வேதனைப்படுத்தும் செயலாகும்.

4.கடந்த ஓரிரு வருடங்களாக எமது பகுதி மீனவர்களுக்கும் தென்பகுதி மீனவர்களுக்குமிடையே ஓர் முறுகல் நிலை தொடர்ந்து கொண்டேயுள்ளது. இந்நிலையானது எங்களுக்குள் இருக்கும் நல்லுறவை பாதிப்படையச் செய்யும் நிலையாக உள்ளது. அத்தோடு சமாதானத்திற்கான குந்தக நிலை ஏற்படுமோ என்ற அச்சமும் தோன்றுகின்றது.

5.ஒவ்வொரு வருடமும் இவர்களது வருகை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலிருந்து அதிகரித்துக்கொண்டே படகுகளின் எண்ணிக்கை போவதனால் எம்முடைய மீனவர்களின் அன்றாட மீன்பிடியில் பாரிய வீழ்ச்சி அடைகின்ற நிலையும் பட்டினி வாழ்வும் காணப்படுக்கின்றது.

6.தென்பகுதி மீனவர்களின் அத்துமீறிய வருகையும் அனுமதியின்றி கடற்கரையோரங்களில் கொட்டகைகள் அமைத்தலும் பருவகாலம் முடிந்த பின் அவற்றை அகற்றாமல் அப்படியே விட்டுச் செல்லுகின்ற நிலைமையும் எமது கரைவலைத் தொழிலைக் கூட செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துகின்றது.

7.கௌரவ கடற்றொழில் அமைச்சரின் மகா சம்மேளனக் கூட்டத்தின்போது தென்பகுதி மீனவர்களின் வடபகுதிக்கான தொழில் நடவடிக்கையானது அப்பகுதி மீனவர்களின் அனுமதியுடன் எந்தவிதமான பாதிப்புமில்லாமல்  தொழில் செய்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதிலும் அந்நடைமுறையினை பின்பற்றாமல் அத்துமீறி வருகின்ற நிலை தடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மீனவப் பிரதிநிதிகளுடன் தொடர்புகொண்டு கலந்துரையாடி பாதிப்பில்லாத தீர்வினைப் பெற்றுத்தரல்.

எனவே எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் நல்லுறவையும் பாதிக்கின்ற இவ்வாறான செயற்பாடுகள் உடன்நிறுத்தப்பட்டு தென்பகுதி மீனவர்களின் வருகையைக் கட்டுப்படுத்தி   ஜனாதிபதியின் கொள்கைக்கேற்பவும் கடற்றொழில் அமைச்சரின் திட்டத்திற்கேற்பவும்  எமது வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து தரும்படியும்  எந்தவித அச்சுறுத்தலுக்கும் உள்ளாகாவண்ணம் எமது எதிர்கால வாழ்கையை தொடர்வதற்கும் சுதந்திரத்துடன் தொழில் செய்வதற்கும் ஆவண செய்யும் படி எல்லம் வல்ல இறைவனை பிரார்த்தித்து எமது கிராமத்தின் சார்பாக இக்கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X