2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அரசே மதுபானசாலைகளுக்கும் அனுமதி வழங்குகின்றது: த.தே.மு

Kogilavani   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வறுமை ஒழிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தும் அரசே மதுபானசாலைகளுக்கும் அனுமதி வழங்குகின்றது என தமிழ் தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

அக் கட்சியினால் மே தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசு எத்தனை வறுமை ஓழிப்பு திட்டங்களை அமுல்படுத்தினாலும் அதே அரசுதான் கிராமப்புரங்களில் மதுபான சாலைகளை நடத்துவதற்கும் அனுமதிப்பத்திரங்களை முதலாளிவர்கத்துக்கு வழங்கிவருகின்றது.

இது வறுமையை கூட்டுகின்றதே தவிர வறுமையை தணிக்க முடியாதுள்ளது. இவ்வாறக மதுபானசாலைகளை நடாத்துவதற்கும் அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை நிறுத்தக்கோரி நாம் ஒன்றுசேர்ந்து இம் மே தினத்தில் குரல் கொடுப்போம்.

மேதினத்தை  நினைவுகூறும் தொழிலாளர்கள் அவ்வுரிமையை விட்டுக் கொடுத்துவிட்டு பல மணித்தியாலங்கள் ஓய்வின்றி உழைக்கின்ற நிலை இன்று மேலோங்கி காணப்படுகிறது. ஆனால் எமது அடிப்படை தேவைகளான உணவு, உடை, வீடு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்றவற்றைக்கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தொழிலாளர்கள்  இன்றும் சிரமப்படுகின்றார்கள்.

வடக்கு, கிழக்கில் தென்னிலங்கையிலிருந்து வரும் தொழிலாளர்களால்  தமிழ் தெழிலாளர்களின் தொழில்களும்  மீனவர்களின்  தொழில்களும்  வேலைவாய்ப்புக்களும் சுரண்டப்படுகின்றது.  இதற்கு நிரந்திர  தீர்வு காணப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மேதின நாளில் நாம் ஓங்கிக் குரல் கொடுப்போம்.

வடக்கு, கிழக்கில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பெரிதும் காணப்படுகிறது. இவர்களின் நிலை இன்று மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. யுத்தம் அவர்களுக்கு பல்வேறு புதிய சுமைகளை கொடுத்துள்ளதோடு ஒடுக்குமுறைகளையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்நிலையில் எமது பெண்களை பாதுகாக்கும் முயற்சியில் நாமும் ஈடுபடுவோம். அவர்களின் துயரங்களை சமூகத்தின் துயரங்களாக ஏற்று அவற்றிலிருந்து விலக ஒத்துழைப்புக்களை வழங்குவோம்

நடைபாதை தொழிலாளர்களுக்கு தொழில் புரிவதற்;காக நிரந்தரமான இடங்களை ஒதுக்கிகொடுப்பதோடு இடங்கள் வழங்கலின்போது முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.

வடக்கு கிழக்கில் இராணுவத்தால் நலன்புரி நிலையம் என்கின்ற பெயரில் பிரதான வீதிகளிலும் சந்தைகளிலும் தேனீர் கடை தொடக்கம் சிகை அலங்கரிப்பு நிலையம் வரை  இராணுவம் முன்னெடுப்பதால் வாழ்வாதர தொழில்புரியும் தொழிலாளர்களின் தொழில்கள் பாதிப்படைகின்றன இதற்காக நாம் ஒன்றுசேர்ந்து குரல் கொடுப்போம்.

சில சுயநல நாடாளுமன்ற அரசியல்வாதிகளினாலும் தொழிற்சங்கவாதிகளினாலும் இலங்கையின் உழைக்கும் மக்களாகிய தொழிலாளர்கள் இன,மத,சாதி ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் முதலாளித்துவத்திற்கு அடிமையாக்கப்பட்டுள்ளார்கள்.

மீள்குடியேற்றப்பட்ட வடக்கு கிழக்கு கூலி தொழிலாளர்களுக்கு இன்னமும் சரியாக நிவாரணம் வழங்கப்படவில்லை. இன்றைய பெண் தொழிலாளர்களின்; உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாவதும் பால் ரீதியான ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகின்றனர்.

தனியார் துறை தொழிலாளர்கள் தொழில் தருநரின் தயவில் வாழ்பவர்களாக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் இந்நாட்டின் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள்  சுரண்டப்பட்டும் அடக்கப்படுகின்ற தேசிய இனங்களும் ஒடுக்கப்படுகின்ற பெண்கள் உட்பட ஏனைய பிரிவினரும் உரிமை மறுக்கப்பட்டவர்கள் என்ற பொதுவான அடிப்படையில் ஐக்கியப்பட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்காய் ஓரணிதிரள்வோம்' என தமிழ்த் தேசிய  முன்னணி தனது மேதின செய்தியில் தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X