2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பாரதிபுரம் கிராம மக்களை வெளியேறுமாறு உத்திரவிடப்பட்டமைக்கு கண்டனம்

Kogilavani   / 2014 மே 29 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வவுனியா பாரதிபுரம் கிராமத்தில் வாழும் மக்களை உடனடியாக வெளியேற்றுமாறு புதன்கிழமை (28) சிலரால் உத்திரவிடப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

'மிகவும் வறிய நிலையில் உள்ள ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாரதிபுரம் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். குறித்த கிராமத்திலுள்ள தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் அமைச்சர் றிசாட் பதியுதீனும் அவருடைய கையாட்களும் கடந்தகாலங்களிலும் செயற்பட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினரின் துணையுடன் பாகிஸ்தான் நாட்டவர்களுடன் பாரதிபுரம் கிராமத்துக்குச் சென்ற றிசாட் பதியுதீன் அந்த மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறும் தாம் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

அதற்கு பதிலளித்த பாரதிபுரம் மக்கள் தமக்கு இருப்பதற்கு மாற்றிடம் இல்லை என்றும் தாம் அங்கிருந்து வேறு எங்கும் செல்ல முடியாது என்றும் உறுதியாகத் தெரிவித்திருக்கின்றனர்.

அதன்போது, குறித்த காணி, வன இலாகாவுக்குச் சொந்தமானது என்றும் எனவே இந்தக் காணியில் யாரையும்; குடியிருக்க அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்த அமைச்சர் அந்த மக்களுடைய பெயர் விபரங்களை பெற்றுக்கொண்டதுடன், அவர்களை புகைப்படமும் எடுத்துச் சென்றிருப்பதாக மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் வன இலாவுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்து தமக்கு விருப்பமானவர்களை இதே அமைச்சர் குடியேற்றியுள்ளார்.

அந்த மக்களுக்கு அவ்வாறான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்த அவர் ஒரு அமைச்சர் என்ற வகையில் பாரதிபுரம் மக்களுக்கும் அவ்வாறான ஒரு ஏற்பாட்டினை செய்து கொடுப்பதே தன்னுடைய கடமையாகும் என்பதை உணர்ந்து நடக்க வேண்டும்.

இன்னமும் பெருமளவான மக்கள் மீள்குடியேறாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்களை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பிலான ஆரோக்கியமான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாத நிலையில் அரச அமைச்சர் ஒருவர் தொழிற்சாலை அமைப்பதற்காக மக்களை நடுத்தெருவிற்கு விரட்டும் நடவடிக்கையினை வண்மையாகக் கண்டிக்கிறோம்.

மக்கள் பிரதிநிதிகளாகச் சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வந்தவர்கள் மக்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கும் அநாகரிகமான நடவடிக்கைகளைக் கைவிட்டு அந்த மக்கள் நிம்;மதியாக வாழ்வதற்கு வழிவிடவேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X