2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

'மீள்குடியேற்றத் திட்டத்தின் அடிப்படையிலேயே சிங்கள குடியேற்றம்'

Menaka Mookandi   / 2014 மே 29 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மீள்குடியேற்றத் திட்டத்தின் அடிப்படையிலேயே மன்னார் மாவட்டத்தில் சிங்கள மக்களின் மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் சிங்கள மக்களை மன்னார் அரச அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

அதேவேளை முசலி பிரதேசத்தில் சிங்கள குடியேற்றம் ஒன்றிற்கான விரிவான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த செய்தி தொடர்பில் உண்மைத் தன்மையினை அறியும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சிங்கள மக்களின் மீள்குடியேற்றத்திற்கான ஏற்பாடுகள் தொடர்பில் அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் யுத்த சூழ்நிலை ஏற்பட்ட போது மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்து வந்த சிங்கள மக்கள் வெளியேறியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் தாம் வாழ்ந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதனால் அவர்களையும் மீள்குடியேற்றம் செய்ய வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலையின் காரணமாக தமிழ்,முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியிருந்தனர். ஆயினும் யுத்தம் நிறைவடைந்ததன் பிற்பாடு இடம்பெயர்ந்தவர்கள் கட்டங்கட்டமாக அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக மெனிக்பாம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகாம்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் அவர்களது சொந்த இடங்களில் அரசாங்கத்தினால் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களும் கட்டங்கட்டமாக அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது அவர்களுக்கு அரசாங்கத்தினால் அடிப்படை உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் அரசாங்கத்தின் மீள்குடியேற்றத் திட்டத்தின் அடிப்படையிலேயே மன்னார் மாவட்டத்திலும் தற்போது சிங்கள மக்களின் மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகளும்  முன்னெடுக்கப்படுகின்றது.

இதில் எந்தவிதமான அரசியல் நிகழ்ச்சி நிரலும் இல்லை அதற்கு அவசியமும் இல்லை. நாம் அரசாங்க அதிகாரிகள் மட்டுமே. இடம்பெயர்ந்த மக்கள் தாம் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறப் போவதாக விருப்பம் தெரிவித்தால் அதன் சாதகத் தன்மையினை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரச அதிகாரிகளாகிய எமது கடமையாக இருக்கின்றது.

இதனடிப்படையிலேயே மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பிரிவிலும் தற்போது சிங்கள மக்களின் மீள்குடியேற்றத்திற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. யுத்தத்தின் காரணமாக மடு பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட மடுச்சந்தியிலிருந்து வெளியேறிய சிங்கள மக்கள் அப்பகுதிகளில் மீளவும் மீள்குடியேறி தமது இயல்பு வாழ்க்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார், சௌவுத்பார், முசலி, மடு என பல பகுதிகளிலும் யுத்தத்தின் முன்னரான காலப்பகுதிகளில் சிங்கள மக்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களோடு இணைந்து வாழ்ந்திருக்கின்றார்கள்.

ஆகவே, யுத்தத்தின் காரணமாக நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறி வாழ்வதற்கு விருப்பம் தெரிவிக்கும் போது அதனை செய்து கொடுக்கும் கடமையில் இருந்து விலக முடியாது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.  

  Comments - 0

  • amr Friday, 30 May 2014 06:33 AM

    என்னையா புருடா விடுகறீர்கள் - இவையெல்லாம் திட்டங்களில் ஒன்று என்றால் நீங்கள் என்ன ஆம் என்றா சொல்லப்போகிறீர்கள்???????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X