2025 ஜூலை 16, புதன்கிழமை

ஆனையிறவிலும் காணி அளவீடு கைவிடப்பட்டது

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா


கிளிநொச்சி, ஆனையிறவு பகுதியில் 4 குடும்பங்களுக்கு சொந்தமான 1 ஏக்கர் காணியை இராணுவம் முகாமின் தேவைக்காக சுவீகரிக்கும் பொருட்டு நிலஅளவையாளர்களால் காணி அளவீடு செய்வதற்கு செவ்வாய்க்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

மேற்படி காணிகளை அளவீடு செய்வதற்கு நில அளவையாளர்கள் பொலிஸாரின் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை (23) காலை அங்கு சென்றிருந்தனர்.

இதன்போது, காணிகளின் உரிமையாளர்களுடன், வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் நா.வை.குகராசா, உபதவிசாளர் எஸ்.நகுலேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் செயலாளரும் கட்சியின் மாவட்டத்தின் உபதலைவருமான பொன்.காந்தன் ஆகியோரும் அங்கு கூடியிருந்தனர்.

காணிகளை அளவீடு செய்யவிடாமல் பொதுமக்கள், நிலஅளவையாளர்களின் உபகரணங்களை முற்றுகையிட்டு வைத்திருந்தனர்.

இதன்போது, தொலைபேசியில் நிலஅளவையாளர்களை தொடர்புகொண்ட கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், தான் தற்போது மாவட்டத்தில் இல்லையெனவும், தான் வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடும் வரையிலும் காணி அளவீட்டு நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் எனவும் கூறினார்.

இதனையடுத்து, காணி அளவீடு செய்ய வந்த நிலஅளவையாளர்கள் நிலஅளவை பணிகளை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.

இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார், 'கிளிநொச்சி மாவட்ட நிலம் சுவீகரித்தல் அதிகாரியின் வேண்டுகோளிற்கு இணங்க நில அளவையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க அங்கு சென்றதாகவும், இருந்தும் பொதுமக்கள் நிலஅளவை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் நிலஅளவை மேற்கொள்ளப்படவில்லை' எனவும் கூறினார்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .