2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நடமாடும் சேவையை குழப்ப முயற்சி:ப.சத்தியலிங்கம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 17 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வடமாகாணசபையால், வவுனியா வடக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவையை குழப்புவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சரின் வழிகாட்டலின் கீழ்,  வடமாகாணசபை நடத்தும் மக்கள் குறை நிவர்த்தி நடமாடும் சேவை வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் புளியங்குளத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'இந்த நடமாடும் சேவை தொடர்பாக அரசாங்க அதிபருடன் நேரடியாக பேசியிருந்தோம். ஆனால், மாகாணசபையால் நடத்தப்படும் இந்த நடமாடும் சேவையை எப்படியாவது குழப்பிவிட வேண்டும் என்ற செயற்பாடுகள் இன்று காலைவரை இடம்பெற்றுக்கொண்டிருந்தது.

அத்துடன், பிரதேச செயலாளர்களுக்கும் கிராம சேவகர்கள் உட்பட திணைக்கள தலைவர்களுக்கும் அரசாங்க அதிபர் கடும் தொனியில் இந்நடமாடும் சேவையில் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்வரும் 20 ஆம் திகதி திவிநெகும மரம் நடும் நிகழ்ச்சி திட்டத்திற்காக அரச அதிகாரிகளுக்கு வேலைப்பழு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எமது மக்களையும் மரங்களையும் ஒரே நிலையில் அவர் எண்ணியுள்ளதாகவே நான் எண்ணுகின்றேன். எனினும்,  எமது வடமாகாண மக்களின் வாழ்வுக்காக அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் செயற்பாட்டை நிறைவேற்றிக்கொள்ள நாம் என்றும் பாடுபடுவோம் என்ற வகையிலேயே வடமாகாணசபையின் இயங்கும் அமைச்சுக்களின் அதிகாரிகளை கொண்டு இந்நடமாடும் சேவையை நாம் நடத்திவருகின்றோம்' என்றார்.

இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண அமைச்சாகளான பொ.ஐங்கரநேசன், குருகுலராஜா, பா.டெனிஸ்வரன், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகதாரலிங்கம், மாகாணசபை உறுப்பினர்கள் ஆர்.இந்திரராஜா, எம்.தியாகராசா உட்பட பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .