2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சி.வி.யின் கருத்து சந்தேகத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது: வினோ எம்.பி

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 19 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அண்மைக்கால கருத்துக்கள் எமக்கு சந்தேகங்களையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றது. இது போன்ற கருத்துக்களுக்கு கையைக் கட்டிக்கொண்டிருந்தாலும் வாயைப் பொத்திக்கொண்டிருக்க முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளை வன்முறையாளர்கள், விரும்பத்தகாதவர்கள் என பொதுமக்கள் மத்தியில் குற்றஞ்சாட்டுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (19) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அரசாங்கத்தின் கருத்திற்கும் முதலமைச்சரின் கருத்திற்கும் இடையில் என்ன வேறுபாடுகள் இருக்கின்றது. முதலமைச்சர் இதுபோன்ற கருத்துக்களை பொது இடங்களில் தொடர்ந்தும் முன்வைப்பார். ஆனால், அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களிலும் நிகழ்வுகளிலும் எதிர்காலத்தில் புறக்கணிப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

இது தொடர்பில் எதிர்வரும் மாதம் இடம்பெறும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் எமது கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவிக்க இருக்கின்றோம்.

இரு வாரங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் அங்கத்துவக் கட்சிகளான இயக்கங்களுடன் தான் இணைந்து செயற்பட முடியாது என விடுதலைக்கு போராடி ஜனநாயக வழிக்கு திரும்பிய கட்சிகளை பார்த்து கூறிய முதலமைச்சர், கடந்த வெள்ளிக்கிழமை புளியங்குளத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவை நிகழ்விலும் இயக்கங்கள் சுயநலத்துக்காகவே போராடியதாகவும் தனது நீதிமன்றத்தை அவர்களே எறித்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்களையும் அடுக்கிச்சென்றார்.

எந்த ஒரு விடுதலை இயக்கமும் போராளிகளும்,தமது சொந்த நலனை முன் நிறுத்தி போராடவில்லை. தனது இனத்தின் விடுதலைக்காக ஒரு உயர்ந்த இலட்சியத்துக்காக போராடியவர்களை கொச்சைப்படுத்தி அற்பத்தனமாக உரையாற்றியுள்ளார். ஆயுதப் போராட்டத்தில் சிந்திய இரத்தத்தாலும் தியாகங்களாலுமே இந்திய இலங்கை ஒப்பந்தமும் 13ஆவது திருத்தச்சட்டமும் அதனூடாக மாகாண சபை முறைமையும் கொண்டுவரப்பட்டது.

அதன் மூலமே முதலமைச்சர் என்ற உயரிய அந்தஸ்தும் கௌரவமும் திரு விக்னேஸ்வரன் ஐயா அவர்களுக்கு கிடைத்தது. முதலமைச்சரின் கருத்துக்கள் 'பரமசிவன் கழுத்தில் இருந்து கொண்டு கருடா சௌக்கியமா'? என பாம்பு கேட்பது போல் இருக்கின்றது. வன்முறையாளர்களுடன் சுயநலமிகளுடன் ஆட்சியில் பாங்கு கொள்வது முரண்பாட்டு  நிலையை தோற்றுவிக்கவில்லையா?

இதன் உள்ளார்ந்த அர்த்தம் தான் என்ன?. ஒரு இனத்தின் விடுதலைக்காக உயிரை துச்சமென நினைத்து உண்மையான விடுதலைக்கு இலட்சியத்தோடு போராடியவர்கள் வண்முறையாளர்கலோ அல்லது சுயநலவாதிகலோ இல்லை. ஆயுதப் போராட்டம் தோற்றுப்போனதற்காக போராட்டத்தை முதலமைச்சர் நலினப்படுத்தக்கூடாது.

வடமாகாண சபையின் முதன்மை அமைச்சர் யார் என்பதனை ஆயுதம் தரித்து போராடிய தமிழ் இயக்கங்களும் மக்களுமே தீர்மானித்தனர் என்பதனை எதிர்காலத்திலும் தீர்மானிப்பார்கள் என்பதையும் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதுபோன்ற உரைகளினால் பொது எதிரிக்கான எமது எதிர்ப்பு போராட்டங்கள் வலு இழந்து செல்லும் ஆபத்தும் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .