Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 15 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,வா.கிருஸ்ணா
மன்னார், முசலி பிரதேச முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை. இவ்விடயத்தை இனவாத கண்ணோட்டத்துடன் நோக்குவதை தவிர்த்து மனிதாபிமான கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டும் என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்தது.
முசலி பிரதேச முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றி கடந்த சில நாட்களாக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று வியாழக்கிழமை கொழும்;பில் நடைபெற்றது.
இதன்போது பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்ததாவது,
'முசலி பிரதேசத்தில் மீள்குடியேறும் முஸ்லிம்கள் தொடர்பாக சில ஊடகங்களும் சில தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை கடந்த சில நாட்களாக முன்வைத்துவருகின்றனர். இது தேசிய அளவில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்த விடயமாக மாறியிருக்கிறது.
பின்வரும் மூன்று விடயங்கள் குற்றச்சாட்டுக்களாக முன்வைக்கப்படுகின்றன.
வில்பத்து வனவிலங்கு சரணாலயப்பகுதி மீள்குடியேற்றத்துக்காக அழிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பிரதானமான ஒன்றாகும். அடுத்ததாக, சட்டவிரோதமாக மீள்குடியேற்றங்கள் செய்யப்படுகின்றன என்றும் அத்தோடு மீள்குடியேற்றத்துக்கு உரித்தில்லாத பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் மீள்குடியேற்றப்படுகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பிலான உண்மை நிலவரங்களை கண்டறியும் பொருட்டு முசலிப் பிரதேசத்துக்கு நாம் கடந்த திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டோம். அதன்போது திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் அவதானிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம்.
மோதறகம ஆறு, வில்பத்து சரணாலயத்தின் வடக்கு எல்லையாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி வில்பத்து எல்லைப்பகுதிக்குள் முஸ்லிம்களின் எந்தவொரு குடியேற்றமும் காணப்படவில்லை. மோதறகம ஆற்றின் வடக்குக்கரையை எல்லையாகக்கொண்டு முசலிப் பிரதேச செயலகப்பிரிவின் தெற்கு நிர்வாக எல்லை அமைந்திருக்கிறது.
இந்தப் பிரதேசத்தில் மரைக்கார் தீவு, பாலக்குழி, மறுச்சிக்கட்டி, கரடிக்குழி, கொண்டச்சி ஆகிய கிராமங்களில் முஸ்லிம்கள் நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் இவர்களும் அடங்குகின்றனர்.
இவ்வாறு வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களே தமது பூர்வீக இடங்களில் தற்போது மீண்டும் மீள்குடியேற்றப்படுகின்றனர்.
25 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டபோது ஒரு குடும்பமாக இருந்தவர்கள் இன்று ஏறத்தாழ ஐந்து குடும்பங்களாக இயற்கையாக அதிகரித்திருக்கின்றனர். 1990களில் வெளியேற்றப்பட்ட குடும்பங்களின் நேரடி சந்ததிகளான இவர்களுக்கும் தமது பரம்பரை பூர்வீக இடங்களில் மீளக்குடியேறுவதற்;கும் அங்கு வாழ்வதற்குமான அனைத்து உரிமைகளும் இருக்கின்றன. கடந்த வடமாகாணசபைத் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துகொள்ளக்கூடிய வாய்ப்பு எமக்கு கிடைத்தபோது, இதனை ஒரு முக்கிய அம்சமாக அந்த ஒப்பந்தத்தில் நாம் உள்ளடக்கியிருந்தோம் என்பது இங்கு நினைவுபடுத்த தக்கதாகும்.
இந்தக் குடும்ப எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக முசலி பிரதேசத்தில் காணப்பட்ட அரச காணிகள் மீளக் குடியேறுவதற்கு காணிகளில்லாத குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 தொடக்கம் 80 வரையிலான பேர்ச் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
பிரதேச செயலகத்தின் ஊடாகவும் அதன் மேற்பார்வையிலுமே காணிக் கச்சேரிகள் நடத்தப்பட்டு முறையான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்பட்டே இந்தக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்தக் காணிப்பகிர்வுக்கு வன இலாகா திணைக்களத்தின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியை நோக்கும்போது முசலி பிரதேச மீள்குடியேற்றம் தொடர்பாக சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை பொய்யானவை என்பது தெளிவாகின்றது.
மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்திருக்கும் மக்களில் இன்னும் ஏராளமானவர்கள் காணிகள் வழங்கப்படாமல் காத்திருக்கிறார்கள். அந்த வகையில் மரைக்கார்தீவு மக்களின் பிரச்சினை இங்கு முக்கியமாக சொல்லப்பட வேண்டும்.
பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த, இவர்களுக்குச் சொந்தமான பாரிய நிலப்பரப்பு கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இதனை மீளத்தருமாறு கோரி மரைக்கார்தீவு மக்கள் நீண்ட நாட்கள் போராட்டங்களை நடாத்தினார்கள். ஆனால், இதுவரை அந்த மக்களுக்கான தீர்வுகள் எதுவும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக ஏறத்தாழ 150 குடும்பங்கள் தீர்வுகள் எதுவுமின்றி மீளக்குடியேற முடியாமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
இக்குடியேற்றம் தொடர்பில் தற்போது முன்வைக்கப்படும் போலியான குற்றச்சாட்டுக்களின் அமர்க்களத்தில் இம்மக்களின் உண்மையான பிரச்சினைகளும்; அவலங்களும் மூடி மறைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஏற்கனவே வீடுகளை பெற்றுக்கொண்ட மக்களும் கூட நீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிக் குறைவுகள் காரணமாக தமது இயல்பு வாழ்க்கையை நிறுவிக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதை நாம் நேரில் கண்டோம். இதற்கான தீர்வுகளும் இம்மக்களுக்கு விரைவாக பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
யுத்த காலத்தின்போது இன, மத மொழி வேறுபாடின்றி அனைத்து சமூகங்களுமே பாதிக்கப்பட்டன. கொல்லப்பட்ட, அகதிகளாக்கப்பட்ட சம்பவங்களை எல்லா சமூகங்களுமே சந்தித்திருக்கின்றன. விசேடமாக இன சுத்திகரிப்பு என்ற அவலத்தை வடக்கு முஸ்லிம்கள் சந்தித்தனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் இந்த சமூகங்கள் அனைத்துமே மீள்குடியேற்றத்தையும் புனர்வாழ்வையும் நஷ்டஈட்டையும் எதிர்பார்த்திருக்கிறார்கள். இதனை அரசாங்கம் ஒரு தேசியக் கடமையாகக் கருதி நிறைவு செய்ய வேண்டும்.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பது இனவாத கண்ணோட்டத்தோடு நோக்கப்படுவதனைத் தவிர்த்து ஒரு மனிதபிமான பிரச்சினையாக நோக்கப்பட வேண்டும். இந்த மீள்குடியேற்ற விடயங்கள் தொடர்பில் அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோகங்களோ அல்லது ஏனைய முறைகேடுகளோ இருக்கும் என சந்தேகிக்கப்பட்டால் அது வேறாகக் கையாளப்பட வேண்டும். முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முடக்குவதற்கான ஒரு நியாயமாக இது மாற்றப்படக்கூடாது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago