Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 08 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடகிழக்கு அமெரிக்காவின் ஹாட்-டாக் மற்றும் டோனட்ஸ் மீதான அன்பைத் தாண்டி, நியூயோர்க் நகர மக்கள் இப்போது பருப்பு மற்றும் பிற காய்கறிகளுடன் கூடிய சூடான, சீஸ் தோசைகளை விரும்பி சாப்பிட தொடங்கி இருக்கின்றனர். அதற்கு காரணம் நியூயோர்க் நகரின் புகழ்பெற்ற தோசை மனிதர் என்று அழைக்கப்படும் திருக்குமார் கந்தசாமிதான்.
காலை 9 மணியளவில், வாஷிங்டன் ஸ்கொயர் பார்க் தெருக்களில் தனது தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டு நரைத்த மீசை கொண்ட மனிதர் தான் திருக்குமார் கந்தசாமி. இவர் தள்ளு வண்டிக் கடையின் அடுப்பிலிருந்து ஆவி பறக்கத் தொடங்கினாலே, மக்கள் தோசையை சுவைக்க கூடிவிடுவார்கள். இந்தியர்களை கடந்து அதிகளவில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களே இவரின் ரெகுலர் கஸ்டமர்கள்.
21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏராளமான கனவுகளுடன் நியூயோர்க்கிற்கு குடிபெயர்ந்த இலங்கைத் தமிழர் தான் திருக்குமார் கந்தசாமி. இன்று நியூயோர்க் தெருவோர தோசை கடைகளின் அடையாளமாக மாறி இருக்கிறார். திருக்குமார் கந்தசாமி என்ற பெயரை சுருக்கி அனைவரும் திரு என்று அன்புடன் அழைப்பதை அவரின் இன்ஸ்டா வீடியோக்களில் பார்க்க முடியும்.
பத்மலட்சுமி என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நாங்களும் வீட்டில் தோசை செய்கிறோம். ஆனால் ஒருநாளும் திருவின் கடையில் தோசை சாப்பிடாமல் கடக்க முடிவதில்லை. வாஷிங்டன் ஸ்கொயர் பார்க்கிற்கு சென்றால், நீங்கள் நிச்சயம் தவறவிடக் கூடாத ஒன்று திருவின் தோசையை தான் என்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவிலேயே திருவிடம் இருந்து தோசையை வாங்கி சுவைக்கும் போது நமக்கும் தோசை சாப்பிடும் எண்ணம் உருவாகிவிடும்.
திருக்குமார் கந்தசாமி யாழ்ப்பாணத்தில் ஒரு நீச்சல் பயிற்சியாளராக இருந்தவர். அவர் தனது காதலி ரஜினியை 'காதல் திருமணம்' செய்து கொண்டவர். இவர்களுக்கு சஜினி என்ற மகள் இருக்கிறாள். நியூயோர்க்கிற்கு வந்த புதிதில் பல்வேறு பணிகளை செய்திருக்கிறார். ஆனால் தனது அம்மா மற்றும் பாட்டியிடம் இருந்து கற்றுக்கொண்ட காரம் நிறைந்த சீஸ் மசாலா தோசை தான் கடைசியில் அவரின் அடையாளமாக மாறியது.
திருவின் தோசைக்கு கனடா, ஜப்பான் மற்றும் கலிஃபோர்னியாவில் கூட ரசிகர்கள் இருக்கிறார்கள். தோசை மனிதன், NYDOSAS உள்ளிட்ட பக்கங்களே அதற்கு சாட்சி. திருவின் தோசை வண்டியின் சுவர்கள் உலகெங்கிலும் இருந்து அவருக்கு கிடைத்த செய்தித்தாள் வெட்டுக்கள் மற்றும் சான்றிதழ்களால் நிரம்பி காணப்படும்.
அதேபோல் மசாலா தோசைகளுடன் காரம் நிறைந்த தேங்காய் சட்னி மற்றும் 11 வெவ்வேறு காய்கறிகளுடன் கூடிய பருப்பு சூப் வழங்கப்படுகின்றன. இதனை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தாலும், நியூயோர்க் நகரில் எங்காவது ஒரு நிலையான உணவகத்தைத் திறக்கும் எண்ணம் அச்சம் கொள்ள வைப்பதாக சொல்கிறார்.
ஏனென்றால் அவர் முதலீட்டாளர்களின் நலன்களுக்கு தனது சுதந்திரத்தையும் யோசனைகளையும் இழக்க நேரிடும் என்று திரு அச்சம் தெரிவிக்கிறார். அதேபோல் சமோசா தோசை என்ற புதிய உணவையும் விற்பனை செய்து வருகிறார். அது வட இந்திய மற்றும் தென் இந்திய சுவைகளின் கலவையாக இருப்பதாக சாப்பிட்டவர்கள் கூறுகின்றனர்.
இவரின் தோசையை சாப்பிட்ட நியூயோர்க்வாசி ஒருவர், இது நியூயோர்க்கின் பல்துறை சமையலறைகளில் இல்லாத ஒரு மந்திரம் என்று பாராட்டுகிறார். அடையாளம் தேடி அமெரிக்கா சென்றவருக்கு, தோசை மனிதன் என்ற அடையாளத்தை அங்குள்ள மக்கள் கொடுத்துள்ளார்கள்.
5 minute ago
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
24 minute ago
2 hours ago