Editorial / 2025 ஒக்டோபர் 30 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

குருகிராம் நகரைச் சேர்ந்த 'நாட் டேட்டிங்' (Knot Dating) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, தனது ஊழியர் ஒருவர் காதல் தோல்வி காரணமாக விடுப்புக் கேட்ட நிலையில், உடனே அவருக்கு விடுப்பு வழங்கியுள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வெளிப்படையான விடுப்புக் கடிதம், Gen Z எனப்படும் இளைய தலைமுறை ஊழியர்கள் பணிச்சூழலில் கொண்டு வரும் மாற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜஸ்வீர் சிங், தனக்கு வந்த மின்னஞ்சலைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இந்த விண்ணப்பம்தான் தான் பெற்றதிலேயே மிகவும் நேர்மையான விடுப்புக் கடிதம் என்று குறிப்பிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட ஊழியர், அக்டோபர் 28 முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை விடுப்பு கோரி அனுப்பிய மின்னஞ்சலில், எந்தவித வழக்கமான தனிப்பட்ட அவசரம் அல்லது உடல்நலக் குறைவு போன்ற காரணங்களையும் குறிப்பிடவில்லை.
அந்த மின்னஞ்சலில், "எனக்குச் சமீபத்தில் காதல் தோல்வி ஏற்பட்டது. அதனால் வேலையில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. எனக்கு சிறிய இடைவெளி தேவை. இன்று வீட்டில் இருந்து வேலை செய்கிறேன்" என்று வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார். ஊழியரின் இந்த நேரடியான விண்ணப்பத்தைப் பார்த்த சிஇஓ ஜஸ்வீர் சிங், மறுப்பு தெரிவிக்காமல் விடுப்பை உடனடியாக அனுமதித்தார். அந்த மின்னஞ்சலின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்து அவர், "Gen Z தலைமுறையினர் எதிலும் ஒளிவு மறைவு வைப்பதில்லை என பாராட்டி உள்ளார். மேலும், நான் பெற்றதிலேயே இதுதான் மிக நேர்மையான விடுப்புக் கடிதம்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவு பல லட்சம் பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் கமெண்ட்களையும் குவித்துள்ளது. பலரும் ஊழியரின் வெளிப்படைத்தன்மையையும், சிஇஓ-வின் மனிதநேய அணுகுமுறையையும் பாராட்டியுள்ளனர்.
தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் இந்த சம்பவம், இன்றைய பணிச்சூழல் கலாச்சாரம் எவ்வாறு மாறி வருகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
கடந்த காலங்களில் வேலை என்பது முழுக்க தொழில்முறை செயல்பாடுகளுக்காக மட்டுமே கருதப்பட்டாலும், இப்போது பணியாளர்களின் உணர்ச்சி நலன் கூட வேலையின் ஒரு முக்கிய அங்கமாக கருதப்பட வேண்டும் என்ற புரிதல் உருவாகி வருகிறது. இந்த நிகழ்வு, பணியிடத்தில் வெளிப்படைத்தன்மை, உணர்ச்சி வெளிப்பாடு மற்றும் மனிதநேயமான மேலாண்மை ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
ஒருவரின் தனிப்பட்ட அனுபவங்கள் அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடும் என்பதால், அவற்றை புறக்கணிக்க முடியாது எனும் கருத்தையும் நெட்டிசன்கள் முன்வைத்து வருகின்றனர். அதே நேரத்தில், சிலர் அலுவலக மின்னஞ்சல் போன்ற தொழில்முறை தளங்களில் தனிப்பட்ட விவரங்களை பகிர்வது சரியா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர். இது தொழில்முறை எல்லைகள் மற்றும் தனியுரிமை குறித்த புதிய விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .