2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

நாயின் மரணத்திற்கு நீதி தேடி வேலையைத் துறந்து சட்டம் பயின்ற பெண்

Editorial   / 2026 ஏப்ரல் 05 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 விஷம் கலந்த இறைச்சியை உட்கொண்டதால் உயிரிழந்த தனது செல்லப் பிராணிக்காக, வேலையைத் துறந்து சட்டம் பயின்று மூன்று ஆண்டுகள் போராடிய சீனப் பெண் ஒருவரின் செய்தி தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.

  சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்பவர் 'பப்பி' என்ற பெயருடைய 'வெஸ்ட் ஹைலேண்ட் டெரியர்' (West Highland Terrier) வகை நாய் ஒன்றை வளர்த்து வந்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு, லீ வசித்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் கிடந்த விஷம் கலந்த கோழி இறைச்சித் துண்டுகளைச் சாப்பிட்டதால் பாப்பி உயிரிழந்தது.

அன்றைய தினமே அந்தப் பூங்காவில் வீசப்பட்டிருந்த விஷ இறைச்சியைச் சாப்பிட்ட மேலும் 11 நாய்களில் 9 நாய்கள் பரிதாபமாக உயிரிழந்தன. 13 ஆண்டுகளாகத் தனது குழந்தையைப் போல வளர்த்த பாப்பியின் மரணம் லீயைத் தீராத துயரத்தில் ஆழ்த்தியது.

  விசாரணையில் 65 வயதுடைய நபர் ஒருவர், 'சோடியம் புளோரோஅசிடேட்' (Sodium Fluoroacetate) என்ற மிகக் கொடிய நச்சைக் கோழி இறைச்சியில் கலந்து பூங்காவில் வீசியது தெரியவந்தது. இருப்பினும், சீனாவில் விலங்கு வதைக்கு எதிராகப் பலமான சட்டங்கள் இல்லாததால், அந்த நபருக்கு எதிராகத் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது லீயிற்குப் பெரும் சவாலாக அமைந்தது.

பப்பியின் மரணத்திற்கு எப்படியாவது நீதி கிடைக்க வேண்டும் என்ற உறுதியோடு, லீ தனது வேலையை ராஜினாமா செய்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக அந்நாட்டின் சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களைத் தாமாகவே முன்வந்து ஆழமாகக் கற்றார்.

இறுதியில், அந்த முதியவருக்கு எதிராகத் தனிப்பட்ட முறையில் குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகளைத் தொடர்ந்தார். ஏனைய பாதிக்கப்பட்ட நாய் உரிமையாளர்களால் சட்டத்தரணிகளை (வக்கீல்களை) அமர்த்த முடியாத சூழல் நிலவியதால், மற்ற 10 பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் லீயே நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

"பப்பி இறக்கும் போது அனுபவித்த வேதனையை என்னால் மறக்க முடியாது. அவனது மரணத்திற்கு நீதி தேடித்தருவதே எனது ஒரே நோக்கமாக இருந்தது" என லீ உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, நாய் உரிமையாளர்களின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், விஷம் வைத்த முதியவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. தனது செல்லப் பிராணிக்காக ஒரு பெண் சட்டத்தையே கற்றுப் போராடி வெற்றி பெற்றுள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .