Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 12 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ச. விமல்
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் கிரிக்கெட் போட்டிகள் மீதான மோகம் கொஞ்சம் குறைவடைந்துதான் காணப்paடுகிறது. ஆனாலும் இலங்கையில் தென்னாபிரிக்கா அணி விளையாடும் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கிறது என்ற காரணத்தால் அது முக்கியத்துவம் பிடித்து விடுகிறது. இலங்கை, தென்னாபிரிக்கா அணிகள் பங்குபற்றும் இரண்டு போட்டிகளடங்கிய டெஸ்ட் தொடர் இன்று காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.
தென்னாபிரிக்கா அணி கிட்டத்தட்ட 4 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு டெஸ்ட் தொடர் ஒன்றுக்காக வருகை தந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரை 1-0 என வெற்றி பெற்று நாடு திரும்பினார்கள். இரு அணிகளுக்கமான டெஸ்ட் தொடர்கள் என வரும்போது தென்னாபிரிக்கா அணி பலமான அணியாகவே காணப்படுகிறது. இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் 1993 ஆம் ஆண்டு மொரட்டுவ ரினான் பெர்னாண்டோ மைதானத்தில் ஆரம்பமானது. 3 போட்டிகளடங்கிய தொடரை தென்னாபிரிக்கா அணி 1-0 என வெற்றி பெற்றது. இலங்கை அணி 1998 ஆம் ஆண்டே தென்னாபிரிக்காவுக்கான டெஸ்ட் பயணத்தினை முதலில் மேற்கொண்டது. இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் 10 டெஸ்ட் தொடர்கள் இதுவரையில் நடைபெற்றுள்ளன. இவற்றுள் ஐந்து தொடர்கள் இலங்கையில் நடைபெற்றுள்ளன. இந்த ஐந்து தொடர்கள் என பார்க்கும் போது சமநிலை காணப்படுகிறது. இலங்கை அணி இரண்டு தொடர்களிலும், தென்னாபிரிக்கா அணி இரண்டு தொடர்களிலும் வெற்றி, ஒரு தொடர் சமநிலையில் நிறைவடைந்துள்ளது. தென்னாபிரிக்காவில் வைத்து இலங்கை அணி ஒரு தொடரை தானும் சமன் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளும் இதுவரையில் 25 போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். இந்தப்போட்டிகளில் தென்னாபிரிக்கா அணி 14 போட்டிகளிலும் இலங்கை அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 06 போட்டிகள் சமநிலையில் நிறைவைடந்துள்ளன. இலங்கையில் விளையாடப்பட்டுள்ள 12 போட்டிகளில் இலங்கை அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள அதேவேளை, தென்னாபிரிக்கா அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.
இலங்கை அணி பலமாக காணபட்ட காலங்களில் கூட தென்னாபிரிக்கா அணி இலங்கை அணிக்கு பலத்த சவாலாக இருந்து வந்துள்ளது. இலங்கை அணி தற்போதுள்ள நிலையில் இலங்கை அணியினை தென்னாபிரிக்கா அணி என்ன செய்யப்போகிறது என்ற பயமிருந்தாலும் ஒரு துணிவும் உள்ளது. இலங்கை அணியின் அண்மைய டெஸ்ட் போட்டிகளின் பெறுபேறுகள் மிக மோசமாக அமையவில்லை. இலங்கை அணியினை கணித்துக் கொள்வது கடினமாக உள்ளது என்ற நிலையில் தென்னாபிரிக்கா அணியினருக்கும் அதே சிக்கல் உள்ளது. இலங்கை அணியின் பலமான சுழற் பந்துவீச்சு தென்னாபிரிக்கா அணியினை தடுமாற வைக்கும். ஆனால் இலங்கை அணியினருக்கும் அதே நிலை காணப்படுகிறது. தென்னாபிரிக்கா அணியினரின் வேகப்பந்து வீச்சு இலங்கை அணி வீரர்களை எந்தளவுக்கு தடுமாற வைக்கும் என்பதும் மிகப் பெரிய கேள்வியாகவே உள்ளது.
கடந்த வருடம் இலங்கையில் வைத்து இலங்கை அணி இந்தியா அணியிடம் மோசமான தோல்விகளை சந்தித்த பின்னர் இலங்கை அணியின் நிலை மோசமாக இல்லை. முன்னேற்றம் காணப்படுகிறது. பாகிஸ்தான் அணியுடன் ஐக்கிய அரபு ராட்சியத்தில் வைத்து இரண்டு போட்டிகளையும் வென்று தொடர் வெற்றி. இந்தியாவில் வைத்து இந்தியா அணியுடன் இரண்டு போட்டிகளில் சமநிலை முடிவு. அதன் பின்னர் இந்த வருட ஆரம்பத்தில் பங்களாதேஷுல் வைத்து 1-1 என்ற தொடர் சமநிலை முடிவு. இறுதியாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3 போட்டிகள் அடங்கிய தொடரில் 1-1 என்ற முடிவு. வெற்றிகளை இலங்கை அணி பெற ஆரம்பித்து விட்டது என்பது இங்கே பலம். இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க சொன்னது போல இங்கே ஒரே நாளில் மாற்றங்கள் வந்துவிடாது. அதற்கு உரிய நேரம் தேவை. அதே போலவே இந்த தொடர் இலங்கை அணியின் அடுத்த கட்ட முன்னேற்றம் எந்தளவுக்கு ஏற்பட்டுள்ளது என்பதனை கணிக்க நல்ல ஒரு தொடர். இந்த தொடரில் சிறப்பாக விளையாடி குறைந்தது ஒரு வெற்றியுடன் தொடரை இலங்கை அணி கைப்பற்றுமானால் "ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்" கதைதான். இலங்கை அணியினால் அது முடியும்.
தென்னாபிரிக்கா அணியின் துடுப்பாட்ட வரிசையினையும், வேகப்பந்து வீச்சு வரிசையினையும் பார்க்கும் போது எதனை வைத்து இலங்கை அணி இந்த அணியினை வெற்றி பெறும் என கூற முடிந்தது என்ற கேள்வி மனதுக்குள் எழாமல் இல்லை. எல்லாம் ஒரு நம்பிக்கை என கூறத்தான் முடிகிறது. , டீன் அல்கர், எய்டன் மார்க்கம், ஹாசிம் அம்லா, பப் டு பிளேஸிஸ், டெம்பா பவுமா, குயின்டன் டி கொக் ஆகியோர் துடுப்பாட்ட வரிசையினை நிரப்பப்போகிற வீரர்கள். இவர்கள் பற்றி அதிகம் அலசி ஆராய தேவைகள் இல்லை. ஆனால் இலங்கை ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் இல்லை என்பதும், இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சு ஆடுகளங்களின் பரீட்சயம் இல்லை என்பதும் கூற முடிந்தாலும், அம்லா, பப் டு பிளேஸிஸ், குயின்டன் டி கொக் ஆகியோருக்கு இந்த விடயங்களை கூற முடியாது.
இந்தப் பலமான துடுப்பாட்ட வரிசையினை இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களினால் மாத்திரமே தகர்க்க முடியும். ரங்கன ஹேரத் மற்றும் டில்ருவான் பெரேரா ஆகியோர் கைவரிசையை காட்ட வேண்டும். தவறினால் இலங்கை அணிக்கு வேறு வழிகள் கிடையாது. துடுப்பாட்ட வரிசை இப்படி என்று பார்த்தால் டேல் ஸ்டைன், வெர்னோன் பிளாண்டார், கஜிஸ்க்கோ ரபடா என வேகப்பந்து வீச்சு உச்ச நிலையில் காணப்படுகிறது. இவர்களை இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் எவ்வாறு சமாளிக்கப் போகிறார்கள் என்பது இலங்கை அணிக்கு பெரிய சிக்கல். 2017 ஆரம்ப பகுதியில் இலங்கை தென்னாபிரிக்கா அணியினை சந்தித்தமையே பலமான வேகப்பந்து வீச்சாளர்களை இலங்கை அணி சந்தித்த போட்டி. அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் இலங்கை அணியில் உள்ளனர். ஆனாலும் சிலர் புதியவர்களே. தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சமாளித்து விட்டால்,இந்த தொடர் இலங்கை அணிக்கு சாதகமாக அமையும்.
தென்னாபிரிக்கா அணியின் சந்தேகமான இடத்தில் உள்ள விடயம் அவர்களின் சுழற் பந்துவீச்சு. கேஷவ் மஹாராஜ் அவர்களின் முக்கிய சுழற் பந்துவீச்சாளர். நல்ல முறையில் பந்துவீசி வருகிறார். ஆசிய ஆடுகளங்களில் பந்துவீசியது இல்லை. இம்முறை அவரின் பந்துவீச்சை கணிப்பிட நல்ல வாய்ப்புள்ளது. இவரது பந்துவீச்சு நல்ல முறையில் அமைந்தால் இலங்கை அணியின் நிலை சிக்கலாக மாறிவிடும். இன்னுமொரு சுழற் பந்து வீச்சாளர் புதியவர் டைப்ரைஸ் ஷம்சி. இவருக்கும் அதே நிலைதான். தென்னாபிரிக்கா அணியின் வீரர்களை பார்க்கும் போது பலமான, ஸ்திரமான அணியாக காணப்படுகிறார்கள். விளையாடும் 11 வீரர்கள் இவர்கள்தான் என கூறுவது கூட இலகுவானது.
இலங்கை அணியின் தொடரும் நிரந்தரமற்ற நிலை இந்த தொடரிலும் சிக்கல்களை தரலாம். இந்த நிலையில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் அணியின் தலைவர் டினேஷ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோரை போட்டியில் பங்கெடுக்க வேண்டாம் என சர்வதேசக் கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. இலங்கை அணிக்கு மேலும் இந்த தொடரில் இந்த விடயம் பாரிய சிக்கலையும் பின்னடைவையும் தரும். டினேஷ் சந்திமால் இலங்கை அணியின் போட்டிகளில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் இல்லாவிட்டாலும் மற்றைய வீரர்களை பயிற்றுவிப்பாளர் நடத்திச் செல்வார் என்று நம்பலாம். அவரும் அணியில் இல்லை. இலங்கை அணி பாரிய பிரச்சினையை எதிர்கொள்ளவுள்ளது. புதிய வீரர்கள். அனுபவம் குறைவானவர்கள் இதனை எவ்வாறு சமாளிப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாத விடயம். அதுவும் போட்டி இன்று காலையில் ஆரம்பிக்கின்ற வேளையில் இந்த செய்தி இலங்கை அணியின் தயார் படுத்தல்களை முழுமையாக சிதைத்து விட்டது.
இலங்கை அணியின் பலம் சுழற் பந்துவீச்சு. துடுப்பாட்ட வீரர்களுக்கு பழக்கப்பட்ட மைதானங்கள். இவை இரண்டையும் தாண்டி வேறு எதனையும் கூற முடியாது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் யார் என்பது குழப்பமாக உள்ளது. மேற்கிந்திய தீவுகள் தொடரில் நடைபெற்ற குழப்பமே இந்த நிலைக்கு காரணம். அணிக்குள் சேர்க்கபப்ட்ட மஹேல உடவத்த நேரடியாக அறிமுகத்தை மேற்கொண்டார். நான்கு இன்னிங்சில் இரண்டில் ஓட்டங்கள் இல்லை. தற்போது அணியிலுமில்லை. உபாதையிலிருந்து டிமுத் கருணாரட்ன அணிக்குள் மீள திரும்புவதனால் ஆரம்ப இடத்துக்கான பிரச்சினை தீரலாம். அவருடன் தனுஷ்க குணதிலக துடுப்படுவார். குசல் மென்டிஸின் இடம் நிச்சயமான உறுதியான இடம். அஞ்சலோ மத்தியூஸ் அணிக்குள் வருவதனால் யாரின் இடம் பறிபோகிறது என்று நிலையுண்டு. குசல் பெரேரா தனது இடத்தை இழக்க நேரிடலாம். அதுபோல டினேஷ் சந்ததிமால் பந்தினை சேதபப்டுத்திய சர்ச்சைகளினால் விளையட முடியாது நிலை ஏற்பட்டுள்ளமையினால் நிரோஷன் டிக்வெல்லவிக்கெட் காப்பாளராக விளையாடுவர். அதேவேளை தனஞ்சய டி சில்வா டினேஷ் சந்திமாலின் இடத்தில் துடுப்பாடும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. ரொஷேன் சில்வா அணியின் மத்திய வரிசையில் முக்கிய வீரராக காணப்படுவதனால் அவரின் இடம் நிச்சயமாக இருக்கும் என நம்பலாம். இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் நிச்சயமற்ற நிலையில் பலமான வேகப்பந்து வீச்சாளர்களை எவ்வாறு சமாளிப்பார்கள் என்பது சந்தேகமான விடயம். குசல் மென்டிஸ் மற்றும் ரொஷேன் சில்வா ஆகியரே துடுப்பாட்ட வரிசையில் நிரந்தரமாக விளையாடி வருகிறார்கள்.
வேகப்பந்து வீச்சு இலங்கை அணிக்கு போதுமான பலமாக இல்லை. அது எப்போதுதான் இலங்கை அணிக்கு பலமாக இருந்துள்ளது. ஒரு வேகப்பந்து வீச்சாளரை வைத்துக்கொண்டு ஓட்டுவதே இலங்கை அணியின் வழமை. சுரங்க லக்மால் அந்த பொறுப்பினை எடுத்துக்கொள்வார். இலங்கை அணி இரண்டு வேகப்பந்துவீச்சாளர், இரண்டு சுழற் பந்துவீச்சாளர் என்ற நிலையில் களமிறங்கும். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் கஸூன் ராஜித, லஹிரு குமார இருவரும் சிறப்பாக பந்துவீசியுள்ள நிலையில் யாரை அணியில் சேர்க்கப்போகிறார்கள் என்பது அணி நிர்வாகத்தின் முடிவு. அல்லது முதற்போட்டியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் இலங்கை அணி களமிறங்கும் வாய்ப்புகளும் உள்ளன. இலங்கை அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.
இரண்டு அணிகளது ஒப்பீடு என வரும் போது தென்னாபிரிக்கா அணி பலமாக காணப்படுகிறது. இலங்கையில் போட்டி நடைபெறுகிற காரணத்தினாலும், இலங்கை அணியின் அண்மைக்கால பெறுபேறுகளை எதிர்வு கூற முடியாத நிலையிலும் காணப்படுவதனால், இந்த தொடரில் இலங்கை அணி மோசமாக தோற்றுவிடும் என கூறிவிட முடியாது. ஆனாலும் இலங்கை வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்ற முடிவுக்கும் வர இயலாது. தென்னாபிரிக்கா அணிக்கு சார்பான இந்த தொடரை இலங்கை அணி எவ்வாறு தமக்கானதாக மாற்றப்போகிறது என்பதே இங்கே கேள்வி. இதற்கான விடை இலங்கை அணிக்கு கிடைத்தால் இலங்கை அணிக்கு தொடர் வெற்றி கிடைக்கும்.
18 minute ago
23 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
23 minute ago
4 hours ago
6 hours ago