2025 மே 12, திங்கட்கிழமை

ஐரோப்பியக் கிண்ணம் 2012; காலிறுதிப் போட்டிகளும் களைகட்டப் போகும் அரையிறுதிகளும்

A.P.Mathan   / 2012 ஜூன் 25 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பியக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் கால் இறுதிப் போட்டிகளும் நிறைவடைந்து மிகச் சிறந்த நான்கு அணிகள் அரையிறுதிகளுக்குத் தேர்வாகியுள்ளன. இதிலே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் இந்தத் தொடர் ஆரம்பிக்கமுதல் அங்கீகாரம் பெற்ற பந்தயக்காரர்களான லட்ப்ரோக்ஸ் (Ladbrokes) என்ற நிறுவனம் இம்முறை ஐரோப்பியக் கிண்ணத்தைக் கைப்பற்ற வாய்ப்புள்ள அணிகளாகப் பட்டியல் படுத்தியிருந்த முதல் ஐந்து அணிகளில் நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளன. விடுபட்ட ஒரே அணி ரஷ்யா.

இறுதியாக நடைபெற்ற இங்கிலாந்து - இத்தாலி அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டி தவிர, ஏனைய மூன்று போட்டிகளுமே எதிர்பார்த்த, பலம் வாய்ந்த அணிகளுக்கு வெற்றியை வழங்கியதோடு, ஓரளவுக்கு ஒரு பக்க சார்பான போட்டிகளாகவே அமைந்திருந்தன.


ரொனால்டோ - போர்த்துக்கலின் தலைவன் - ஹீரோ

முதலாவது காலிறுதிப் போட்டியில் செக் அணியின் கடுமையான தடுப்பாட்டம், போராட்டம் என்பவற்றை முறியடித்து “ரொக்கெட்” என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடைசி நேர கோல் ஒன்றைப் பெற்றுக் கொடுத்தார். போர்த்துக்கலின் இத் தொடரில் பெறப்பட்ட இரு முக்கிய வெற்றிகளுமே ரொனால்டோவின் கோல்களால் பெறப்பட்டவை என்பது தலைவராகவும் வீரராகவும் ரொனால்டோவுக்கும் அவரது அணிக்கும் உற்சாகம் தரக்கூடிய விடயங்கள்.

ஜேர்மனி - அனைவரதும் எதிர்பார்ப்பு & ஸ்பெய்னுக்கு சரியான சவால்

இதுவரைக்கும் ஐரோப்பியக் கிண்ணம் வெல்லாத போர்த்துக்கல் - இம்முறை ரொனால்டோவைப் பிரதானமாக நம்பி அரையிறுதிக்குள் நம்பிக்கையோடு நுழைகிறது. ஆனால் அரையிறுதியில் போர்த்துக்கல் சந்திக்கும் அணி அவர்களது அண்டை நாடான, நடப்பு ஐரோப்பிய மற்றும் உலக சாம்பியன் ஸ்பெய்ன்.  இப்படி ஒரு பலமான எதிரியையே (ஜேர்மனி) பிரிவு ரீதியிலான போட்டிகளில் சந்தித்திருந்த போர்த்துக்கலுக்கு மீண்டும் ஒரு பலமான சவால்.

இரண்டாவது காலிறுதிப் போட்டியில் ஜெர்மனி - கிறீஸ் அணிகள் மோதியிருந்தன...

பலம் வாய்ந்த ஜேர்மனி அணி இலகுவில் தவறுகள் விடாத ஓர் அணி. அதன் பலவீனமான தருணங்களை கிறீஸ் பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டதன் வினை, ஜேர்மனி நான்கு கோல்களை அடித்து பெரிய வெற்றி ஒன்றைப் பெற்றது.

இடைவேளையின் போது ஒரேயொரு கோலை மட்டுமே பெற்றிருந்த ஜேர்மனிக்கு ஈடு கொடுத்து ஆடிய கிறீஸ் 55ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற்று சமப்படுத்தியது.

அதைத் தொடர்ந்து 61, 68, 74 ஆகிய நிமிடங்களில் தொடர்ச்சியாக ஜேர்மனி தனது கோல்களை செலுத்தி ஆதிக்கத்தை நிலைநாட்டியது. கிடைத்த வாய்ப்புக்களைப் பயன்படுத்த முடியாமல் போன கிறீஸ் அணியினால் அவர்களது வழமையான தடுப்பாட்டத்தையும் வேகமான ஜேர்மனிக்கு எதிராகப் பிரயோகிக்க முடியாமல் போனது.

கிறீஸ் கடைசி நேரத்தில் ஒரு கோலைப் பெற்று ஆறுதலை மாத்திரம் அடைந்தது. 

ஜேர்மனி 4, கிறீஸ் 2.

முதல் போட்டிகளில் ஜேர்மனிக்கு கோல்களைப் பெற்றுக்கொடுத்த கோமேஸ் மூலமாக இல்லாமல் லாம், க்லோசே, க்ஹெடிரா, ரெயுஸ் மூலமாக கோல்களைப் பெற்றது இன்னும் நம்பிக்கையை அதிகரித்திருக்கும்.

மூன்றாவது போட்டியில் ஸ்பெய்ன் அணி வெல்லும் என்பது அநேகரின் எதிர்பார்ப்பு. நினைத்தது போலவே ஸ்பெய்ன் வென்றது.

ஸ்பெய்ன் - ஒற்றுமை + வேகம்

பிரான்ஸ் இதற்கு முந்தைய முதலாவது சுற்றின் இறுதி ஆட்டத்தில் சுவீடனிடம் கண்ட தோல்வியை அடுத்து அணிக்குள் முறுகல்கள் இருந்ததாக சொல்லப்பட்டது. ஒற்றுமை இல்லாத அந்த அணி ஸ்பெய்ன் போன்ற அசுர பலம் கொண்ட அணியிடம் இப்படித் தான் வாங்கிக்கட்டும் என்பது தெரிந்ததே.

ஆனால் ஸ்பெய்னின் வழமையான நட்சத்திரங்களால் இந்த வெற்றி பெறப்படாமல் பொதுவாக மற்றவர்கள் கோல் அடிப்பதற்கு ஒத்தாசையாக இருக்கும் சபி அலோன்சொவினால் இரு கோல்களும் பெறப்பட்டமை சிறப்பு.

போர்த்துக்கல் அணியை ஸ்பெய்ன் சந்திக்கும்போது தான் ஒரு விறு விறு திருவிழா இருக்கும் என நம்பி இருக்கலாம். அதில் ஸ்பெய்னின் வியூகம் எப்படி இருக்கும் என்பது இன்னொரு எதிர்பார்ப்பு.

நான்காவதும் இறுதியுமான காலிறுதி மற்றப் போட்டிகள் எல்லாவற்றையும் விட அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது... காரணம் இரு அணிகளுமே ஒன்றுக்கொன்று சமபலமான அணிகளாகக் கருதப்பட்டன.

இத்தாலி - இந்த முறையாவது கிண்ணம் கிடைக்குமா?

ரூனியின் இரு போட்டித் தடைக்குப் பிறகான மீள்வருகை இங்கிலாந்தை மிகப் பலம் வாய்ந்த அணியாகக் காட்டியது. அத்துடன் இத்தாலியும் தங்கள் பலத்தை இறுதி முதல் சுற்றுப் போட்டிக்குப் பிறகு முழுக்க உணர்ந்துகொண்ட ஓர் அணியாக மாறியிருந்தது.

ஆனால் இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியானது உலகின் மிகச் சிறந்த கோல் காப்பாளர்கள் இருவருக்கிடையிலான மோதலாகவே வர்ணிக்கப்பட்டது. ஹார்ட் (இங்கிலாந்து)- புப்போன் (இத்தாலி) என்ற இவ்விருவரும் விட்டுக்கொடுக்காமல் விளையாடியது போட்டியின் நிமிடங்கள் தாண்டியும் இருதரப்பாலும் கோல்களைப் பெறமுடியாமல் செய்திருந்தது.

இறுதியாக பெனால்டி உதைகள் தீர்மானித்த போட்டியில் இங்கிலாந்தை மீண்டும் துரதிர்ஷ்டம் வெளியே அனுப்ப, அதிர்ஷ்டக்கார இத்தாலி அரையிறுதியில் ஜேர்மனியை சந்திக்கப்போகிறது.

இங்கிலாந்தின் துரதிர்ஷ்டம் தொடர்கிறது...

இங்கிலாந்து இப்படி எத்தனை முக்கியமான தொடர்களின் முக்கிய போட்டிகளில் பெனால்டிகள் மூலமாக வெளியேறி இருக்கிறது.

இப்போது ஒரு சுவாரஸ்யமான தருணம்.

அரையிறுதிகளுக்குத் தெரிவாகியுள்ள நான்கு அணிகளில் போர்த்துக்கல் தவிர ஏனைய மூன்று அணிகளுமே முன்பு ஐரோப்பிய சாம்பியனாக இருந்தவை தாம்.

ஜேர்மனி மூன்று தடவைகள்... இறுதியாக 1996இல்.
ஸ்பெய்ன் இரு தடவைகள் (இப்போதைய நடப்பு சாம்பியன்)
இத்தாலி 1968ஆம் ஆண்டு வென்ற பின் மிக நீண்ட காத்திருப்புடன் இருக்கிறது.


இரு அரையிறுதிகளிலும் வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளாகக் கருதப்படும் ஸ்பெய்னும் ஜேர்மனியும் இறுதிப் போட்டியில் சந்தித்தால், அது நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஐரோப்பியக் கிண்ண இறுதிப் போட்டியை ஒத்ததாக அமையும். அந்த இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன் 0 இற்கு 1 என்ற கணக்கில் வெற்றியீட்டி கிண்ணத்தை வசப்படுத்தியிருந்தது.

அலோன்சோவின் அபாரம்....

அந்தப் போட்டியில் விளையாடி இருந்த பலர் இரு அணிகளிலும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவான பெர்னாண்டோ டொரெஸ்.

மீண்டும் ஸ்பெய்ன் - ஜேர்மனி மோதலா?

அல்லது வேறு விதமான கணக்குகள் அரையிறுதிகளில் நடக்குமா என்பதை நாளை நள்ளிரவுப் பொழுது & நாளை மறுதினம் தெரிந்து கொள்வோம்.

2008ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னதாக.. ஜேர்மனிய, ஸ்பானிய அணிகளின் கொடிகளைப் பிரதிபலிக்கும் சப்பாத்துக்கள்...

You May Also Like

  Comments - 0

  • sinthujan Tuesday, 26 June 2012 02:40 AM

    மிகவும் நன்றாக உள்ளது லோசன் அண்ணா.................

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X