2022 ஜூலை 06, புதன்கிழமை

பறப்பிழந்த வண்ணத்துப்பூச்சி – நெடுநாடகம்

Editorial   / 2020 பெப்ரவரி 23 , பி.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூவின் மீதமர்ந்தும் அமராமலும் மெல்லப் படபடக்கும் வண்ணத்துப் பூச்சியின் மெதுமை போன்றது, ‘பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சிகள்’ நாடகம், செவ்வாய்க்கிழமை (25) மாலை 6.30 மணிக்கு மருதானை எல்பின்ஸ்ட்டன் அரங்கில் நடைபெறும் அரச நாடகவிழா – 2020 இல் அரங்கேறவுள்ளது.

பயங்கரமாகவே வெளித்தெரியும்  போர்க்கால வாழ்வும், வெளித்தோற்றப்பாட்டில் பெருமிதமாகவும், உள்ளார்ந்தமாகப் பயங்கரமும் வன்முறையான சமூக வாழ்வில் சற்று விலகிச் சிந்திக்க முனையும் யதார்த்தத்தை நோக்கி நகர முனையும் சிறிசொன்றின் துயர வாழ்வும் அதனை விளங்கமுனையாத சமூக இருப்பின் மீதான எதிர்வினைதான் பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சிகள் நாடகம்.

நடைமுறையிலுள்ள சமூக வாழ்க்கை முறையும், நடைமுறைக் கல்வி முறையும் மேலதிகமாக குரூரமான போர்க்கால வாழ்க்கைச் சூழலில் துளிர்களாகவும், மொட்டுகளாகவும் அரும்பும் சிறார்களின் கற்பனையை, சிந்தனையை, படைப்பாற்றலை, மதிப்பீட்டுத் திறனைச் சிதைத்து, சின்னாபின்னமாக்கி இருக்கும் வகையை அம்பி என்னும் பாத்திரத்தைச் சுற்றிச் சுழன்று வெளிப்படுத்துகின்றது.

பாதிக்கப்பட்டவர்களை உளநலக் காப்பகங்களுக்கும், சிறைச்சாலைகளுக்கும் அனுப்பி வைத்துவிட்டு, குற்றத்தை எங்கேயோ எதிலேயோ வாய்ப்பான இடத்தில் போட்டுவிட்டுத் தொடர்ந்தும் கேள்விக்கிடமற்ற அதே ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருப்பதே வாழ்க்கையாகிறது, வரலாறாகிறது, பண்பாடாகிறது, அரசியலாகிறது.

'நீ அழைத்ததாக......... ஒரு ஞாபகம்.........' என்ற வி.கௌரிபாலனின் சிறுகதையே இந்நாடகத்தின் மூலம். கிழக்குப் பல்கலைக்கழக ஆங்கில மன்றத்தால் அனைத்துப் பல்கலைக்கழக நாடக விழாவில் 2000 ஆம் ஆண்டு கொழும்பில் Flightless   Butteflies  என்ற பெயரில் ஆங்கிலத்தில் அரங்கேற்றப்பட்டு, மிகச் சிறந்த விமர்சனங்களைப் பெற்றுக் கொண்ட நாடகம் ஆகும்.

சி. ஜெயசங்கரின் இணைப்பாக்கத்தில் களப்பயிற்சி அரங்கின் ஊடாக புதிதளித்தல் முறையில் ஆங்கிலத்திலும் தமிழிலும் உருவாக்கப்பட்ட இந் நாடகத்தின் ஆங்கில எழுத்துப் பனுவலை எல்.எம்.பீலிக்ஸ் உம் தமிழ் எழுத்துப் பனுவலை வி.கௌரிபாலனும் ஆக்கியிருந்தார்கள்.

இந்த நாடக அரங்க உருவாக்கத்தில் கிழக்குப் பல்கலைக்கழக அனைத்துப் பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும் பிரதிநிதித்துவம் செய்திருந்தார்கள்.

2020 இல் அ.விமலராஜின் நெறியாள்கையில் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள் பங்கெடுக்கிறார்கள்.

2000ஆம் ஆண்டில் பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சிகள் நாடகம் மக்கள் நீதித்துறை மீது கொண்டிருந்த கணிசமான நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக இருந்தது. இன்றைய யதார்த்த நிலை, எந்தளவுக்க இருக்கின்றது என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கவும் இந் நாடகம் வாய்ப்பளிக்கும் என்று நம்பப்படுகின்றது.

2020இன் பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சிகள் புதிய அனுபவத்தையும் புதிய சிந்தனையையும் தருவதாக இருக்கும்.

-கலாநிதி சி. ஜெயசங்கர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .