2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

’இரட்டை நிலைப்பாடால் முஸ்லிம்கள் ஏமாற்றம்’

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இந்திய - இலங்கை ஒப்பந்த காலம்தொட்டு, முஸ்லிம்களின் அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு மற்றும்  அபிலாஷைகள் தொடர்பான  விடயங்களில் இந்தியா தொடர்ந்தும் இரட்டை முகத்துடன் செயற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று (12) கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் அரசியல் பிரச்சினையில் தமிழர்களுக்குச் சம அளவிலான இழப்புக்கள் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. உயிரிழப்பு, இடப்பெயர்வு மற்றும் உடமைகள் சேதம் எல்லாம் முஸ்லிம் சமூகத்துக்கும் ஏற்பட்டுள்ளது.

“எனினும், தமிழர்களுக்கு தீர்வு கிடைப்பதற்கு மட்டுமே இந்தியா அதிக அக்கறையுடன் செயற்படுகிறது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தினூடாக மாகாண சபை முறைமைகளை அறிமுகப்படுத்தியதும் இந்தியாதான்.

“வடக்கு, கிழக்கு மாகாணங்களும் இந்தியாவின் அழுத்தத்துடன்தான் இணைக்கப்பட்டன. இந்த நிலைமைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்துக்கள் பற்றி எந்தக் கரிசனையும் இந்தியாவுக்கு இருக்கவில்லை.

“மேலும், இவ்விடயங்களில் முஸ்லிம்களின் அபிலாஷைகள் ஆதங்கங்கள் பற்றி இதுவரை எந்தக் கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டதும் கிடையாது.

“இவை மட்டுமல்ல இலங்கைக்கு வரும் இந்திய உயரதிகாரிகள் எவரும் முஸ்லிம் அரசியல் தலைவர்களையோ அல்லது முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகளையோ சந்திப்பதும் இல்லை.

“அண்மையில் கூட இலங்கைக்கு  வந்த இந்திய வெளிவிவகார செயலாளர்  ஸ்ரீஹர்ஸ் வர்தன் ஷ்ரிங்லா கூட எந்த இலங்கையின் எந்தவொரு முஸ்லிம் அரசியல் வாதியையும் சந்திக்கவில்லை.

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமை கூட  சந்திப்பதில் இவர் நாட்டம் காட்டவில்லை. இதனால் இந்தியா குறித்த நம்பிக்கையை முஸ்லிம்கள் இழந்து வருகின்றனர்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .