2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

ஒருதலை காதல் கத்திக்குத்தில் முடிந்தது

Niroshini   / 2021 ஜூலை 29 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

ஒரு தலை காதல் விவகாரத்தால் சக பெண் உத்தியோகஸ்தரை கத்தியால் குத்திய நபர், தானும் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்ட சம்பவம் ஒன்று, யாழ்ப்பாணத்தில், நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும், யாழ். போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அரச திணைக்களம் ஒன்றில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

திணைக்களத்தில் பணியாற்றி வரும் ஆண் உத்தியோகஸ்தர், அங்கு கடமை புரியும் சக பெண் உத்தியோகஸ்தர் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.  அவரின் காதலை பெண் உத்தியோகஸ்தர் ஏற்க மறுத்து வந்த நிலையில், அவர் அப்பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

தொந்தரவு தாங்க முடியாத அப்பெண் ஒரு கட்டத்தில்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், ஆண் உத்தியோகஸ்தரை அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று அலுவலகத்தில் இருவரும் கடமையில் இருந்துள்ளனர். திடீரென ஆண் உத்தியோகஸ்தர், பெண் உத்தியோகஸ்தர் மீது சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு, அலுவலக மலசல கூடத்துக்குள் சென்று தாழிட்டுள்ளார்.

சம்பவத்தை அடுத்து இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் உத்தியோகஸ்தரை, அங்கு கடமையில் இருந்த சக உத்தியோகஸ்தர்கள் மீட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

அதேவேளை, அப்பகுதியால் சிவில் உடையில் சென்ற பொலிஸார் சம்பவம் தொடர்பில் அறிந்து அலுவலகத்துக்குள் சென்று பார்த்த போது, கத்தியால் வெட்டிய நபர் மலசல கூடத்துக்குள் தாழிட்டு,; தன்னை தானே கத்தியால் குத்திக்கொண்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரையும் அங்கிருந்து மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கத்தியால் குத்திய நபரின் அலுவலக மேசை இலாச்சுக்குள் இருந்து வேறொரு கத்தியும் மற்றுமொரு கூரிய ஆயுதமும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .