2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கற்பூரவள்ளியை இப்படி பயன்படுத்தி பயனடையுங்கள்

Piriyadharshini   / 2018 ஜூன் 03 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

Dr.நி.தர்ஷனோதயன்

MD (S) (Reading)  

கற்பூரவள்ளி, ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூரவள்ளியும் வைத்து வளர்த்தனர். இரண்டுமே விஷக்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை.

கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு. இதனால்தான் இதன் பெயரும் கூட கற்பூரவள்ளி என்று அழைக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருந்தாகும்.

இதன் இலைகள் வட்ட வடிவமாக பஞ்சு போன்று காணப்படும். இதில் காரத்தன்மை கொண்ட நீர்ச்சத்து நிறைந்திருக்கும்.

கற்புரவள்ளி இலையையும் துளசி இலையையும் நன்றாக காயவைத்து பொடி செய்து, தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு இரண்டிலும் சமனளவு எடுத்து ஒரு தேக்கரண்டி அளவு தேனில் கலந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், சளிதொல்லை குணமடையும்.

கற்பூரவள்ளி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை, தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், கொத்தமல்லி பொடி கலந்து ஒரு போத்தலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து நீரில் இட்டு கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு அருந்தி வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், மூச்சுக் குழாய்களைத் தொற்றுநோய்கள் தாக்காமல் பாதுகாக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி நீங்கவும், அடிக்கடி மூச்சு விட முடியாமல் சிரமப்படுபவர்களுக்கும் சில சமயங்களில் இது ஆஸ்துமா, காசநோயாக கூட மாறநேரிடும். இவர்களுக்கு கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து, லேசாக வதக்கி சாறு எடுத்து, 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால், மார்புச்சளி குணமடையும்.

கற்பூரவள்ளி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும். மூச்சுக்குழல் அடைப்பு சீராகும் .

கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமடையும்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .