2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

பாதிப்பை ஏற்படுத்தும் ஈ-கோலிகள்

Kogilavani   / 2016 மே 13 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித உயிர்களை ஆட்டிப்படைப்பதில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும் அதில் பிரதான பங்கு வகிப்பது நோய் நிலைமைகளே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. உணவு, உடை, உறையுளுக்காக தனது வாழ்நாளை செலவிடும் மனிதன் வாழ்வின் பாதி நாட்களை நோய்களிலே கழித்துவிடுகின்றான். இன்று ஒருவர்; 60ஐ கடப்பதென்பதே பெரிய சாதனையாகத்தான் பார்க்கப்படுகின்றது. அந்தளவுக்கு மனிதர்களின் வாழ்க்கை நிலையென்பது மாற்றம் கண்டுள்ளது. இந்த மாற்றமானது வாழ்வின் ஆயுள் காலத்தை நீடிப்பதற்கு பதிலாக மனிதனின் ஆயுள்காலத்தை குறைப்பதையே தனது இலக்காகக் கொண்டுள்ளது.

அந்த இலக்குகளில் ஒன்றாக உருவாக்கம்பெற்றதே ஈ-கோலி என்ற பக்டீரியாவாகும். எஷ்சரிச்சியா கோலை (Escherichia coli)  என்பது  ஈ-கோலி என அழைக்கப்படுகின்றது. இந்த ஈ-கோலி பக்டீரியாவானது உணவு, நீர் முதல் அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாகக் காணப்படுகின்றது. உணவு ஒவ்வாமை, வாந்தி, வயிற்றோற்றம், காய்ச்சல் என அனைத்துக்குமான காரணியாக ஈ-கோலி விளங்குகின்றது.

ஈ-கோலிகள் பல வகையுள்ளன. அதில் சில ஈ-கோலிகளின் தாக்கம் குறைவாக காணப்பட்டாலும் பல ஈ-கோலிகளானது மனிதரின் ஆரோக்கியத்தில் பாரிய தாக்கம் செலுத்துகின்றன.

இவை, வயிற்றோற்றம், சிறுநீரக தொற்று, சுவாச நோய், இரத்த ஓட்டத்தில் தொற்று உள்ளிட்ட பல நோய்களை ஏற்படுத்துகின்றன.
 ஈ-கோலிகள் பரவும் வழிமுறைகள்

சில வகையான ஈ-கோலிகள், உணவு, நீர், விலங்குகள் மற்றும் மனிதரிலிருந்து தொற்றுக்களை பரப்புகின்றன. ஈ-கோலிகளில் 6 வகையான ஈ-கோலிகளானது வயிற்றோட்டம் ஏற்படுவதற்கு காரணிகளாக உள்ளன.

சில ஈ-கோலிகளானது ஷிகா என்றழைக்கபடும் நச்சுப் பதார்த்தத்தினூடாக பரவுகின்றது. இதனால் ஷிகா நச்சு ஈ-கோலை உருவாக்குகின்றது என கூறுகின்றனர். அல்லது இதனை STEC என சுருக்கமாக அழைக்கின்றனர்.

இதனால் உருவாகும் O157:H7 பக்டீரியா வட அமெரிக்காவில் அதிகமாக காணப்படுதவதாக கூறப்படுகின்றது.  

 STEC இனால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள்

இப்பக்டீரியா அனைத்து வயதினரையும் வெகுவாக பாதிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் தொற்றுக்கு வயதெல்லை இல்லையென்றப் போதிலும் அதிகமாக இளம் பராயித்தினரே விரைவான தொற்றுக்கு  உள்ளாகின்றனர். இதேவேளை, ஆரோக்கியமான சிறுவர்களும் வயது வந்தோர்களும் ஈ-கோலி தொற்றுக்கு இலகுவில் உள்வாங்கப்படுகின்றனர்.

STEC தொற்றின் அறிகுறிகள்

ஈ-கோலி தொற்றானது ஒவ்வொருவருக்கும்    வித்தியசாமான அறிகுறிகளைக் காட்டும். குறிப்பாக

வயிறு இழுத்துப் பிடித்தல்

குருதி வெளியேற்றத்துடன் வயிற்றோட்டம்

வாந்தி

காய்ச்சல் (ஈ-கோலி தொற்றுக்குள்ளானவருக்கு காய்ச்சல் ஏற்படுவது வழமை. ஆனால், இக்காய்ச்சலானது 101˚F இருப்பின் அது தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை.  ஈ-கோலி தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் 5-7 நாட்களில் குணமாகிவிடுவர். சில தொற்றுக்களானது மிக மிதமானதாக காணப்படும். ஆனால், பலருக்கு இது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

உலகில் 5-10%மானவர்கள் ஈ-கோலி - O157 தொற்றுக்குள்ளானவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். ஈ-கோலி O157 தொற்று அதிகரிப்பதுடன் அது ஹீலோலெடிக் யுரேமிக் நோய் என அழைக்கப்படும் தொற்றையும்  (HUS) உருவாக்குகின்றது. இத்தொற்றுக்குள்ளானவர் அதிக சோர்வாக இருப்பர். இதேவேளை, அடிக்கடி சிறுநீர் வெளியேறல், களைப்பாக உணர்தல், கன்னம் மற்றும் கண் இமைகளினுள்ளே இளஞ்சிவப்பு நிறமாக காணப்படல் போன்ற அறிகுறிகளை HUS  தொற்றுக்குள்ளானவர்களிடத்தில் காணலாம்.

HUSதொற்றுக்கு உள்ளானவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பது சிறந்தது. ஏனெனில், இத்தொற்றுக்கு உள்ளான ஒருவரது சிறுநீரகங்களானது செயலிழப்பதற்கும் சாத்தியம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதேவேளை, இத்தொற்றானது உயிராபத்துக்களையும் ஏற்படுத்தலாமென கூறப்படுகின்றது.

HUS இற்கு உள்ளானவர்களில் அநேகமானவர் ஒரு சில வாரங்களில் வழமைக்குத் திரும்பிடுவர். ஆனால், சிலர் நிரந்தர நோயாளியாக மாறவும் அல்லது உயிரிழக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

3 நாட்களுக்கு மேல் வயிற்றோட்டம், காய்ச்சல் அதிகரித்த நிலை, மலத்தில் குருதி வெளியேறல், அதிகமான வாந்தி ஆகிய அறிகுறிகள் இருப்பின் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்வது சிறந்தது என கூறப்படுகின்றது.

STEC  தொற்றை தவிர்க்கும் வழிமுறைகள்

உணவுகளில் தொற்று

முறையான பழக்கவழக்கங்களின்றி உணவுகளைக் கையாளும்போது ஈ-கோலி தொற்றுக்கு உள்ளாக நேருகின்றது. மரக்கறிகளை நன்கு கழுவியபின் சமைப்பதற்குப் பயன்படுத்துங்கள், அறுவடை செய்யப்படும் காய்கறிகள் சுத்தம் செய்யப்படாமலேயே சந்தைக்கு வருகின்றன. இவற்றைக் கொள்வனவு செய்யும் நாம், அதனைக்கழுவி நன்கு சுத்தம் செய்யாமல் சமைக்கும்போது அதில் தொற்றியிருக்கும் ஈ-கோலி போன்ற பக்டீரியாக்கள் வெகுவிரைவில் எமது உடலுக்குள் சென்றுவிடுகின்றன.

இவை பின்பு எமது உடலில் பரவி, பல நோய்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக கர்ப்பிணிகள், சிசுக்கள், குழந்தைகள், வயது வந்தோர் வெகுவிரைவில் இந்நோயத்; தொற்றுக்கு உள்ளாகின்றனர்.

கைகளை கழுவுதல்

ஒவ்வொரு வருடமும் உலக கைகழுவுதல் தினம் ஒக்டோபர் 15ஆம் திகதி கொண்டாப்படுகின்றது. கைகளில் தொற்றியிருக்கும் கிருமிகள் எமது உடலுக்குள் செல்வதை தவிர்ப்பதற்காகவும் அதனால் ஏற்படும் விளைவுகளிலிருந்து எம்மை பாதுகாப்பதற்காகவுமே இத்தினத்தை ஐ.நா. அங்கிகரித்துள்ளது. ஆனால், இதனை மறந்த நாம், அன்றைய தினத்தை ஏளனப்படுத்துவதிலும் „கைழுவுவதற்கெல்லாம் ஒரு தினம் தேவையா?... என்று கேள்விக் கேட்பதிலும் செலவழிக்கின்றோம்.

பொதுவாக எம்மை அறியாமலேயே எமது கைகளானது அசுத்தமான இடங்களை தொடுகின்றது. உதாரணமாக பஸ்களில் ஏறும்போது, பயணிகள் இருக்கைகள் இன்றேல் நின்றவாறு பயணிப்பது வழமை. இவ்வாறு நின்று பயணிக்கும்போது பஸ்ஸில் இருக்கும் கம்பிகளை பாதுகாப்புக்காக நாம் பிடிக்கின்றோம். இந்தக் கம்பிகளில் இருக்கும் ஈ-கோலி போன்ற பக்டீரியாக்கள் வெகுவாக எமது கைகளுக்குள் வந்துவிடுகின்றன. பின்னர் நாம்  வீட்டுக்குச் சென்ற பிறகு கைகளை சவர்க்காரம் இட்டுக் கழுவாமல் அப்படியே உணவை உட்கொள்ளுகிறோம். எமது கைகளில் தொற்றியிருக்கும் ஈ-கோலிகள் வெகுவாக எமது வயிற்றுக்குள் சென்றுவிடுகின்றன. எனவே,  ஈ-கோலிகளிலிருந்து பரவும் நோய்களை நாமே தேடிக் கொள்கிறோம்.  
குழந்தைகளுக்கு பாலூட்டும் முன்பு, வளர்ப்பு பிராணிகளை தொட்ட பின்பு, பாதிணிகளை அணிதல், சந்தை மற்றும் வெளியிடங்களுக்குக்குச் சென்று வந்த பின்பு உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் நாம் கைகளை சவர்க்காரமிட்டு கழுவுதல் அவசியம்.

இறைச்சிகளை பதப்படுத்திய பின் சமைத்தல்

சமைப்பதற்காகக் கொள்வனவு செய்யப்படும் இறைச்சிகளில் ஈ-கோலி போன்ற பக்டீரியாக்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. எனவே, அவற்றை பதப்படுத்திய பின்பு சமைப்பதற்கு எடுப்பது சிறந்தது. மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் மட்டுமன்றி  நாம் சுத்தம் பேணுவதற்கு இன்னும் பல வழிமுறைகள் காணப்படுகின்றன. அவற்றை வாழ்நாளில் கடைபிடிப்போமாயின் நாம் எதிர்கொள்ளப்போகும் பின்விளைவுகளிலிருந்து எம்மை தற்பாதுகாத்துகொள்ளலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X