2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

முதுகு வலியால் அவதிப்படுகின்றீர்களா?

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


முதுகு வலி என்பது இன்று பரவலாக எல்லோருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினையாகும். இது ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும். பெரும்பாலும் 99 சதவீதமான முதுகு வலிகள் உங்களுக்கு பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் அவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்ற முதுகு வலிகளும் இருக்கின்றன. இந்தப்பகுதியில் நாம் முதுகு வலி எதனால் ஏற்படுகின்றது? அதனை எப்படி குணப்படுத்திக் கொள்ளலாம்? பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்துகின்ற முதுகு வலியை எப்படி கண்டறிந்து கொள்ளலாம்? போன்ற அத்தனை கேள்விகளுக்குமான விடைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
 
முதுகு வலியின் பாதிப்பானது ஆளுக்கு ஆள் வேறுபடும். சிலர் தன்னால் எந்த வேலையும் இதனால் செய்ய முடியாது என்பர், சிலர் அவ்வலியினை தாங்கி கொண்டு சில வேலைகளை செய்து முடிப்பார்கள். அத்துடன் சிலர் முதுகு வலி குறித்த பல்வேறு அச்சங்களையும் எண்ணப்பாடுகளை கொண்டவர்களாகவும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
முதுகு வலியானது முள்ளந்தண்டு எலும்புகளுக்கிடையே காணப்படும் நரம்புகளில் ஏற்படும் பாதிப்புக்களினாலும், எலும்புகளுக்கிடையிலான மூட்டுக்கள் அல்லது அவ்வெலும்புகளை சுற்றியிருக்கின்ற தசைகளில் இடம்பெறுகின்ற பாதிப்புகளாலும் தான் ஏற்படுகின்றது. அது மட்டுமன்றி சிறு நீரகம், சதையி போன்ற எமது உடல் உறுப்புகளில் ஏற்படுகின்ற பாதிப்புகளினாலும் முதுகு வலி ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன. 
 
ஆனால், பெரும்பாலான வலிகள் முள்ளந்தண்டு எலும்புகளுக்கிடையில் காணப்படும் நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மூட்டுக்களைச் சுற்றியிருக்கின்ற தசைகளில் ஏற்படுகின்ற பாதிப்பினால் தான் அதிகம் ஏற்படுகின்றன. இவற்றினால் ஏற்படும் பாதிப்புகளும் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. 
 
சரி, இனி எப்படி எமது முள்ளந்தண்டு மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றது? என்பதை பற்றிப் பார்ப்போம். 
 
அதற்கு எமது அன்றாடச் செயற்பாடுகள் தான் பிரதான காரணங்களாக அமைகின்றன. ஆமாம் நாங்கள் அமரும் மற்றும் படுக்கும் விதமும் அலுவலகங்கள் மற்றும் கடமை புரியும் இடங்களில் நாங்கள் கடமையாற்றும் விதம் என்பனவும் முதுகு வலியை ஏற்படுத்தும் காரணிகளாக அமைகின்றன.
 
எனவே, நாம் உட்காரும் போது முதுகை நேராக வைத்த வண்ணம் உட்கார்ந்து பழக வேண்டும். அதாவது நாற்காலியில் எமது முதுகுப் பகுதி நன்றாக சாய்ந்திருக்குமாறு அமர வேண்டும். அதே போல படுக்கும் போது சம தரையில் படுக்க வேண்டும். கூடுதலான அளவு சமமான மெத்தைகளில் படுப்பதால் முதுகு வலியை முடிந்த அளவுக்கு தவிர்த்துக் கொள்ள முடியும். 
 
வேலை செய்பவர்கள் முதுகை சௌகரிமான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக கணனியில் வேலை செய்பவர்கள் கணனிப்பலகையை தங்களுடைய முதுகை நேராக வைத்துக் கொண்டு அதற்கேற்றவாறு அதனை சரி செய்து கொண்ட பின்னரே வேலைகளை செய்ய வேண்டும். பாரமான பொருட்களை தூக்குபவர்கள் அதனை அமர்ந்த நிலையில் இருந்தே தூக்க வேண்டும். அப்போது முதுகில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்துக் கொள்ள முடியும்.
 
சரி இனி எவ்வாறான முதுகுவலிகள் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டவை என்பதை பற்றி பார்ப்போம். 
 
தொடர்ச்சியாக பாரம் தூக்கும் போது முதுகில் வலி இருந்தாலும், அல்லது முதுகு வலியுடன் சேர்த்து கை, கால்கள் விரைப்புக்குள்ளானதைப் போல இருந்தாலும், முதுகு வலியுடன் சேர்த்து சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் பிரச்சினைகள், அல்லது முதுகு வலியுடன் தன்னை அறியாமலேயே சிறுநீர், மலம் என்பன வெளியேறுதல் போன்ற பிரச்சினைகள் இருக்குமாயின் அது தொடர்பிலும் நீங்கள் அதிகம் கவனம் எடுப்பதுடன், உடனடியாக ஒரு வைத்தியரை நாடுவதும் மிகவும் முக்கியமாகும். 
 
எனவே, எமது பெரும்பாலான முதுகு வலிகள் நாம் நமது அன்றாட வேலைகளை முறையாக செய்யாததாள் தான் ஏற்படுகின்றது. எனவே நாம் நமது அன்றாட பழக்க வழக்கங்களை சரியான முறையில் செய்வோமானால் முதுகு வலியிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.
 
-தம்பி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .