2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

‘சமுர்த்தி கொடுப்பனவு தேர்தல் இலஞ்சம்’

Editorial   / 2019 மார்ச் 22 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கடன் சுமை இல்லையென, அரசாங்கமும் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தெரிவித்துவரும் நிலையில், இந்த வருடம் புதிதாக மேலும் 6 இலட்சம் சமுர்த்தி பயனாளிகள் உள்வாங்கப்படுவதன் காரணமென்னவென, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா கேள்வி எழுப்பினார்.  

நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற, அமைச்சுக்களுக்கான குழுநிலை  விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறுத்  தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், குறைந்த வருமானம் பெறுபவர்களின் குடும்பங்களுக்கே, இந்த சமுர்த்தி நிவாரணங்கள் வழங்கப்படவேண்டுமென சுட்டிக்காட்டியதுடன், அப்படியாயின் நாட்டின் வறுமை நிலை அதிகரித்துள்ளமையாலேயே, இவ்வருடம் புதிதாக 6 இலட்சம் சமுர்த்தி பயனாளிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்றார்.  

அத்துடன், சமுர்த்தி, திவிநெகும ​ஆகிய வேலைத்திட்டங்கள் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தச் சபையின் பொறுப்பு வாய்ந்த அமைச்சரொருவர், தமது கட்சி ஆதரவாளர்களுக்கு மாத்திரமே சமுர்த்தி வழங்கப்படுமென வெளிப்படையாகத் தெரிவித்தார். எனவே, கட்சி பேதங்களின்றி சமுர்த்தி கொடுப்பனவை வழங்குமாறும் தான் வேண்டுகோள் விடுப்பதாக, ரஞ்சித் சொய்சா தெரிவித்தார்.  

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில், சமுர்த்திக்கு பொறுப்பாகவிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, சமுர்த்தி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ. 10,000 வழங்க முன்வந்ததுடன்,இதன் முதற்கட்டமாக 2,500 ரூபாயை வழங்கி சமுர்த்தி பயனாளிகளின் வீடுகளை புனரமைப்பு செய்யத்திட்டமிட்ட சந்தர்ப்பத்திலேயே ஆட்சி கவிழ்ந்தது. இன்றும் சமுர்த்தி கொடுப்பனவு மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் பஷிலுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற என்றார்.  

இந் நிலையில், இன்று மீண்டும் நல்லாட்சியில் 30,000 ரூபாய் கடனை சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்க முன்வந்துள்ளனர். தேர்தல் காலம் நெருங்கி வருவதால், இந்த சமுர்த்தி கொடுப்பனவை நாம் தேர்தல் இலஞ்சமாகவே கருதுகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.  

இலங்கைக்கு, 21கோடி கிலோ கிராம் மிளகு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய 1 கிலோகிராம் மிளகுக்கு 3 டொலர் இலாபம் கிடைப்பதாகவும், இதன்மூலம் 11,340 கோடி ரூபாய் இலங்கையின் தேசிய பொருளாதாரம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

மத்திய வங்கி பிணைமுறி மோசடி, மிளகு இறக்குமதி கொள்ளை, மஹாபொல நிதியக் கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சரியான தண்டனையைப் பெற்றுக்கொடுக்க, முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .