2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

அடுப்படிக்குச் செல்ல மக்கள் அஞ்சுகின்றனர்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 01 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்தமை மற்றும் அவற்றின் கலவை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம், நேற்று (30) முறைப்பாடு செய்தது.

கட்சியின் எம்.பிக்களான ஜே. சி. அலவத்துவல, முஜிபூர் ரகுமான், ஹெக்டர்
அப்புஹாமி, திலிப் வெதராச்சி, சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் பலர் முறைப்பாடு வழங்குவதற்குச் சென்றிருந்தனர்.

தேசிய பாதுகாப்பை வழங்குவதாக பெருமை கூறிக் கொண்டு பதவிக்கு வந்த
அரசாங்கத்தின் கீழ், இன்று சமையலறை வேலைகளை மேற்கொள்ள மக்கள் அச்சப்படுகின்றனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்ததாவது, எரிவாயு பற்றாக்குறையை நிவர்த்தி செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குப் பதிலாக இன்று எரிவாயு தாங்கிகளின் கலவை தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

விரைவில் எரிவாயு சிலிண்டர்கள் தீருகின்றன என்று மக்கள் குற்றம்
சாட்டுகின்றனர். மறுபுறம், நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கின்றன என்று
குறிப்பிட்டார்.நாட்டில் 40 சதவீத மக்கள் எரிவாயுவை பயன்படுத்துகின்றனர் என்றும் இதனால் அந்த மக்கள் அனைவரும் இன்று பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.எரிவாயு சிலிண்டர்கள் வெடித்தமை மற்றும் அவற்றின் கலவை தொடர்பான நிலைமைகள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம், எமது கட்சியின் எம்.பிக்கள் கேட்டறிந்தனர்.

கலவை மற்றும் தரம் குறித்து விசாரணை நடத்துமாறு அங்கு கோரிக்கை
விடுத்தோம். தரமற்ற எரிவாயு சிலிண்டர்களை சந்தையில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம் என்றார்.இது தொடர்பில் இன்று (01) நடைபெறவுள்ள விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில், அறிவிக்கவுள்ளதாகவும் அலவத்துவல எம்.பி
குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .