2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

‘11 மாதங்களில் விடுதலை; நேற்று பொது மன்னிப்பு’

Freelancer   / 2021 ஜூன் 25 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

“11 மாத காலத்தில் தண்டனைக் காலம் முடிவடைந்து விடுதலையாக இருந்தவருக்கே ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுத்துள்ளார்” என குரலற்றவரின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார். 16 தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேற்று (24) ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சூரியகாந்தி ஜெயச்சந்திரன் விடுவிக்கப்பட்ட நிலையில் அவரை நேரில் சந்தித்து  முருகையா கோமகன் நலம் விசாரித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “இன்றைய தினம் (நேற்று) விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளில் பலருக்கு தண்டனைக் காலங்கள் நிறைவடைய சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

“ஜெயச்சந்திரனும் கடந்த 13 ஆண்டுகளாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கான தண்டனைக் காலம் இன்னமும் 11 மாத காலத்தில் நிறைவடையவுள்ள நிலையிலேயே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

“தமிழ் அரசியல் கைதிகள் பலர் 11 வருடங்கள் முதல் 26 வருடங்களுக்கு மேலாக கூட தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அண்மையில் கூட விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கக் குற்றச்சாட்டில் சிலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

“அவர்கள் உட்பட குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தீர்ப்பு வழங்கப்பட்டு மேன் முறையீடு செய்தவர்கள் என பல அரசியல் கைதிகள் இன்னும் சிறையில் வாடுகின்றனர்.

“அவர்களுக்கு குறைந்த பட்சமாக புனர்வாழ்வு அளித்தாவது அவர்களை விடுவிக்க வேண்டமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

“அண்மையில் அரச தரப்பில் இருந்து அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கும் பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதிக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

M


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .