2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

கதக் நடனத்தை சிறு வயதிலே அரங்கேற்ற முடியாது: நடன தாரகை மோக்ஷா

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 30 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

'ஒரே நடனக் கலாசாரத்துக்குள் சிக்குண்டிராது புதிய படைப்புக்களை நோக்கிய பயணத்துக்கு மாணவர்களை தயார்படுத்துதல் வேண்டும். அதற்காக கலை என்பது பற்றிய தெளிவு நம்நாட்டு மக்களுக்கு நிச்சயமாக தேவைப்படுகின்றது. கலை என்றால் என்ன? அதனை எமது பிள்ளைகள் மத்தியில் எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும்? என்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி, நாட்டில் கலைத்துறைக்கென்று தனியானதொரு இடத்தை உருவாக்குவதே எனது எதிர்காலத் திட்டமாகும்' என்கிறார் கதக் நடன தாரகை மோக்ஷா சமரசூரிய.

கலைக் குடும்பத்தைச் சேர்ந்த மோக்ஷா சமரசூரியவின் பெற்றோர், சகோதர சகோதரி ஆகிய அனைவரும் இசை, நடனம் சார்ந்த கலைத் துறையைச் சேர்ந்தவர்களாவர். இவர்களின் இந்தக் கலைக்குடும்பத்தில் இணைந்த மற்றுமொரு கலைத் தாரகையே மோக்ஷா சமரசூரிய. தனது ஐந்தரை வயதில் ஆரம்பிக்கப்பட்ட இவரது கலைப் பயணமானது கதக் நடனத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. இசை, இசை கருவிகளை இசைத்தல் மற்றும் நடனம் ஆகிய துறைகளில் நாட்டம் கொண்டுள்ள போதிலும் அவர் கதக் நடனத்தைத் தெரிந்தெடுத்தமைக்கு தனது பெற்றோரே காரணம் என்கிறார்.

இலங்கையில் கதக் நடனத்தை அறிமுகப்படுத்திய ஸ்ரீமதி ரசாதரியின் சிஷ்யையான இவர், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். சுமார் 8 வருடங்களாக ஸ்ரீமதி ரசாதரியிடம் கதக் நடனத்தைப் பயின்ற அவர் தனது ஆரிசியையின் மறைவை அடுத்து இந்தியாவின் பாத்கண்டு நகரில் அமைந்துள்ள பாத்கண்டு சங்கீத பல்கலைக்கழகத்தில் இணைந்து கதக் நடனத்தைக் கற்க ஆரம்பித்தார். இந்நிலையில் 1997ஆம் ஆண்டு குறித்த பல்கலைக்கழகத்தில் மிகச் சிறந்த கதக் கலைஞர் என்ற விருதுடன் நாடு திரும்பினார்.

இந்நிலையில் தனது தந்தையினால் சுமார் 36 வருடங்களாக நடத்தப்பட்டு வந்த 'லெலும' கலை நிறுவனத்துடன் இணைந்து பெருமளவிலான மாணவ மாணவியருக்கு கதக் கலையைக் கற்பித்த அவர், பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அவரிடம் கல்விகற்ற மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கான சலங்கைப் பூஜைகளையும் செய்துள்ள இவர் தற்போது 'டான்ஸ் பார்க்' எனும் நடனக் கலை நிறுவகத்தை உருவாக்கி அங்கு சகல நடனக் கலைகளையும் பயிற்றுவித்து வருகிறார்.

உலகிலுள்ள அனைத்து நடனக் கலைகளையும் ஒன்றுதிரட்டும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடன கலை நிறுவகத்தினூடாக 'கதக்' நடனத்தை இலங்கை முழுவதிலும் பரப்பும் நோக்கில் செயற்பட்டு வரும் கதக் நடனத் தாரகையான மோக்ஷா, நடனம் தொடர்பில் இலங்கையில் முதன் முறையாக இரு கருத்தரங்குகளை நடத்தியுள்ளார். சுமார் ஐந்து கருத்தரங்குகளை நடத்துவதற்கு எண்ணியுள்ள அவர் ஐந்தாவது கருத்தரங்கை சர்வதேச ரீதியில் நடத்த எதிர்ப்பார்த்துள்ளார்.

'இலங்கையைப் பொறுத்தவரையில் 'கதக்' நடனமானது உரிய கலாசார முறையில் கற்பிக்கப்படவில்லை. கதக் நடனத்தை நம்மவர்கள் பயில்வதில் உள்ள பலவீனங்களை அகற்றி எந்தவொரு வயதினரும் எவ்விதத் தடைகளுமின்றி நடனத்தை கற்க வேண்டும்' என்ற நோக்கத்துடன் செயலாற்றி வரும் இவரது நடனப் பயணத்தைப் பற்றிய பல்வேறு கருத்துக்களை தமிழ்மிரர் இணையத்தளத்துடன் பகிர்ந்துகொண்டார். அதன் முழு விபரம் பின்வருமாறு:-

                 
கேள்வி : பரதநாட்டியத்துக்கும் கதக் நடனத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன? கதக், பரதம் அளவில் பிரபல்யமடையாமைக்கு காரணம் யாது?

பதில் :     நடனம் என்பது கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. அந்தவகையில் இந்து கலாசாரத்துடன் இணைந்தே பரத நாட்டியம் பின்பற்றப்பட்டு வருகின்றது. உலகம் முழுவதிலும் இந்து கலாசாரம் அதாவது இந்து கலாசாரத்தை பின்பற்றும் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றனர். அதனால் அவர்கள் உள்ள இடமெல்லாம் பரதநாட்டியமும் விஸ்தரித்துக் காணப்படுகிறது.

கதக் என்பது மிகவும் சுந்தரமானது. விஞ்ஞான ரீதியில் அது மனிதனுக்கு உடற்பயிற்சியினை வழங்குகின்றது. பரத நாட்டியத்தைப் பொறுத்தமட்டில் ஹஸ்தங்களின் பிரயோகம் மிகவும் முக்கியமானவை. இந்துக்களைப் பொறுத்தளவில் தங்களது கலாசாரத்தை அவர்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளதால் பரதநாட்டியத்தை இலகுவில் புரிந்துகொள்ள முடியும். ஏனையவர்கள் அதனை அறிந்துகொள்வது கடினமாகவே இருக்கும்.

ஆனால் கதக் அவ்வாறில்லை. கதக் என்பதன் பொருள் கதை என்பதாகும். பிரிதொரு கதையொன்றைக் கூறும் நோக்கிலேயே கதக் நடனம் ஆடப்படுகின்றது. அதில் விஞ்ஞானம், தியானம், உடற்பயிற்சி; மற்றும் கணிதம் போன்ற அனைத்து அம்சங்களும் கலந்திருக்கின்றன. இவற்றுடன் இந்து மற்றும் இஸ்லாமிய கலாசாரமும் கலந்துள்ளது.

பரதநாட்டியத்தை ஓரளவுக்கே ஆட முடியும். ஆனால் கதக் நடனம் நாளுக்கு நாள் புத்தாக்கம் பெறுகின்றது. அதில் புதிய புதிய கதைகளை இணைத்து ஆட முடியும். அதனாலேயே பொலிவூட் திரைப்படங்களில் கதக் நடனம் பெருமளவில் இணைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கதக் நடனம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் காணக்கூடியதாக இருக்கின்றது. இருப்பினும் கதக்கின் சாஸ்திரீய நடனத்தை மிக அரிதாகவே காணக்கூடியதாக உள்ளது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் கதக் நடனத்தின் விஸ்தீரணம் குறைவாகவே காணப்படுகின்றது. ஆனால் பெருமளவில் இலங்கையர்களே இந்த கதக் நடனத்தைக் கற்று வருகின்றனர். இருப்பினும் அவர்கள் கற்றதை பிரபலப்படுத்துவதில் இலங்கையில் பெரும் சிக்கல் நிலவுகின்றது.

பரதநாட்டியமானது பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலை மட்டத்தில் கற்பிக்கப்படுகின்றது. ஆனால் கதக் நடனத்துக்கு அவ்வாறானதொரு சந்தர்ப்பம் இல்லை. இதுவே பரதநாட்டியம் அளவுக்கு கதக் பிரபல்யமடையாமைக்கு காரணமாகும். இருப்பினும் இந்த நிலைமை தற்போது இலங்கையில் மாற்றமடைந்துகொண்டே வருகின்றது.
                 
கேள்வி  : இதனை ஆண்கள், பெண்கள் என இரு பாலாரும் கற்க முடியுமா?

பதில் : இரு பாலாரும் இந்த கதக் நடனத்தைக் கற்கின்றனர். ஆனால் இந்தியாவில் ஆண்களே பெருமளவில் இந்த நடனத்தைக் கற்றும் பின்பற்றியும் வருகின்றனர். காரணம் இந்த நடனத்துக்கான குருகுல பாவனை ஆண்களிடமே கையளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெருமளவிலான பெண்களும் இதனைப் பின்பற்றி வருகின்றனர்.
 
கேள்வி : கதக்கில் பல வகைகள் உள்ளனவா? அவை எவை?

பதில் : கதக் நடனத்தில் பாதங்கள் மிக முக்கிய இடம் வகிக்கின்றன. தாளத்துக்கு ஏற்றவகையில் கால் அசைவுகளை இந்துஸ்தானிய இசையுடன் கலந்தே கதக் ஆடப்படுகிறது. அத்துடன் இதில் சலங்கை மிகவும் முக்கியமாகிறது. சாதாரணமாக ஒருவர் ஒரு காலுக்கு 100 மணிகள் என்ற வகையில் இரு கால்களிலும் தமது சலங்கைக்கு 200 மணிகளை உள்ளடக்கிக் கொள்கின்றனர். நடனத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவர் 300 அல்லது 400 மணிகளைக் கொண்ட சலங்கைகளை அணிந்து ஆடுகின்றனர்.

கதக் நடனத்தில் அதனை ஆடுபவரின் கால்களும் இசைக்கருவி போன்றே பயன்படுத்தப்படுகின்றது. 'தரிகிட' என்ற தாளத்துக்கு நடனத்தை ஆடுபவர் தனது கால்களால் அந்த தாளத்தை போடக்கூடிய வகையில் அந்த நடனம் அமையப் பெறுகின்றது. அத்துடன் நடனத்துக்கான பாவம் மிகவும் இலகுவான முறையில் கையாளப்படுகின்றது. இந்நடனத்தில் கைகளில் பாவனை மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றது.

மேலும், கதக் நடனத்தை ஆடுபவர் அதற்கே உரித்தான ஆடையையே அணிந்திருப்பார். ஆனால் அவர் பல்வேறு கதாபாத்திரங்களை அந்த நடனத்தில் ஏற்று மேடையேற்றுவார். உதாரணமாக இராமாயணக் கதையை அவர் மேடையேற்றுவாராயின் அதில் உள்ள அனைத்துக் கதாபாத்திரங்களையும் அவர் ஒருவரே மேடையேற்றிக் காண்பிப்பார். மிகவும் மென்மையாக ஆரம்பிக்கப்படும் இந்த நடனம் போகப்போக கடினமான நிலைமைக்கு கொண்டுசெல்லப்படும்.

கேள்வி : கதக்கில் பயன்படுத்தப்படும் அபிநயங்கள் எவ்வகையில் கடைப்பிடிக்கப்படுகின்றன?

பதில் : பரதநாட்டியத்தைப் போன்று அடிப்படை அம்சங்கள் கதக் நடனத்திலும் காணப்படுகின்றன. நவரசங்கள் என்று பார்க்குமிடத்து பரத நாட்டியத்தில் அது உரிய முறையில் பின்பற்றிக் காட்டப்படும். ஆனால் கதக்கில் அந்த நவரசங்கள் பாவ இலட்சணத்துடன் இணைந்து காண்பிக்கப்படுகின்றன. கதக்கில் பாவங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன.

கேள்வி : இளம் பருவத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நடனத்தை கற்பதில் ஆர்வம் குறைவாகவே காணப்படுன்றது. அதற்கு காரணம் என்ன?

பதில் :  இல்லை, பெருமளவில் இளம் வயதினரே இந்த நடனத்தைக் கற்று வருகின்றனர். இருப்பினும் கலைஞர் என்ற பக்குவத்தை அடைய சற்று வயது முதிர்வு தேவை. பரத நாட்டியத்தில் சிறு வயதிலேயே அரங்கேற்றத்தை நடத்தலாம். ஆனால் கதக் நடனத்தை பொறுத்தவரையில் சிறு வயதில் அரங்கேற்றம் நடத்த முடியாது. அதுவே கதக் நடனத்தின் கலாசாரமாகும். இதனால் கதக் நடனத்தை முழுமையாகப் பயின்று ஒரு கதக் கலைஞராக வெளியேறும்போது வயதாகிவிடுகிறது. அதனால் இளம் பருவத்தை தாண்டியவர்கள் மாத்திரமே கதக் நடனத்தைப் பயில்வதானதொரு சந்தேகம் எழுந்துள்ளது.  
 
கேள்வி : ஆடை கட்டுப்பாடுகள் உள்ளனவா?

பதில்: கதக் நடனத்தில் இரு கலாசாரங்கள் கலந்துள்ளதால் அவரவர் கலாசாரத்துக்கு ஏற்ற வகையில் ஆடை அலங்காரங்களும் வேறுபடுகின்றன. இந்து கலாசார முறைப்படி நோக்கும் போது நீளப் பாவாடை, ரவிக்கை மற்றும் துப்பட்டா போன்றன அணியப்படுகின்றன. ஆபரணங்களைப் பொறுத்தவரையில் நடனக் கலைஞர் அணியும் அனைத்து ஆபரணங்களுடன் குந்தன் எனப்படும் தலையில் அணியும் ஆபரணமும் பயன்படுத்தப்படும்.

முஸ்லிம் கலாசாரத்தைப் பொறுத்தவரையில் அங்கார்கா எனும் சுடிதார் கமீஸ் அணியப்படும். இது இடுப்புக்கு மேலே இறுக்கமாக பொருந்தியிருக்கும், மேலும் கால்கள் சுடிதார் மூலம் மூடப்பட்டிருக்கும். அத்துடன் துப்பட்டா அணியப்படும். கட்டாயமற்ற துணை உடையாக குவிந்த சிறு தொப்பி அணியப்படும்.

இந்து கலாசாரத்தில் ஆண்களுக்கான பாரம்பரிய உடை திறந்த மார்புடன் இருத்தலாகும். இடுப்புக்கு கீழே வேட்டி, வழக்கமாக இது வங்காள பாணியில் இருக்கும். அதாவது பல மடிப்புவரைகளுடன் இருக்கும் மற்றும் ஒரு முனை விசிறி போன்று இருக்கும். முஸ்லிம் கலாசாரத்துக்கு ஏற்ற வகையில் ஆண்கள் குர்தா அணிவர்.

கேள்வி : இலங்கையில் கதக் நடனத்தைக் கற்பதில் மாணவர்களின் ஆர்வம் எந்தளவில் உள்ளது?

பதில்: இலங்கையைப் பொறுத்தவரையில் கதக் நடனமானது உரிய கலாசார முறையில் கற்பிக்கப்படவில்லை. இந்த நிலைமை கதக் நடனத்தை இலங்கையர்கள் கற்பதில் உள்ள ஒரு பலவீனமாகவே நான் கருதுகிறேன். இருப்பினும் இலங்கை மாணவர்கள் இதனைக் கற்பதில் பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

கேள்வி : இலங்கையில் கதக் நடனத்தைப் பரப்புவதற்கு உங்களின் முயற்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் எவை?

பதில் : நாட்டுக்கு நல்ல கலைஞர்களை உருவாக்க வேண்டும். அதற்கு சிறந்த அமைவிடமாகவே இந்த 'டான்ஸ் பார்க்' நிறுவகத்தை பயன்படுத்தி வருகின்றேன். இந்த நிறுவகத்தினூடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நடனக் கலைகள் அனைத்தையும் கற்பிக்க முற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்குத் தேவையான விரிவுரையாளர்களை இந்தியாவிலிருந்து அழைத்து வரவும் முயற்சிகள் எடுக்கப்படும்.

சிறந்த கலை வடிவமொன்றை உருவாக்கி அதனூடாக ஏனைய துறைகளுக்கும் அதாவது ஆசிரியர், விரிவுரையாளர்கள், திரைப்படத்துறை, நாடகம் உள்ளிட்ட ஏனைய பலதரப்பட்ட துறைகளுக்கும் கலைஞர்களை உருவாக்கி அனுப்பவதே எனது நோக்கமாகும்.

இதற்காக கலை என்பது தொடர்பில் நாட்டுக்கு தெளிவுபடுத்துதல் அவசியம். கலை என்றால் என்ன? அதனை எமது பிள்ளைகள் மத்தியில் எவ்வாறு கொண்டு செல்வது என்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி நாட்டில் கலைத் துறைக்கென்றதொரு தனி இடத்தை உருவாக்குவதே எனது எதிர்காலத் திட்டமாகும்.

நேர்காணல் :- எம்.தாக்ஷாயிணி

படப்பிடிப்பு :- குஷான் பதிராஜ


  Comments - 0

 • Shiva Prem Premavan Sunday, 23 January 2011 02:01 PM

  வணக்கம் , நான் தமிழ் திரைப்படத்துறையில் இருபதாண்டுகளாக பணியாற்றிக்கொண்டிருக்கிறேன் ....
  எமது முதல் படைப்பாக முழுக்க எமது ஈழத்தமிழர்களை புது முகங்களாக அறிமுகப்படுத்தி , குறிப்பாக நடிக்க ஆர்வம் உள்ள எமது ஈழத்தமிழர்களை நடிக்கவைத்து ,நல்ல தரமான திரைப்படங்களை இயக்கி உலகம் முழுதும் திரையிட வேண்டும் ,என்பது தான் ,நடனத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் செய்யலாம் ...ஆர்வம் உள்ளவர்கள் அணுகவும் ..நன்றி.
  அன்புடன்
  பிரேமவன்
  Shiva Prem ( Premavan)
  “Divine” Film Director / Cinematographer,
  Tamil Nadu. India.
  directorshivaprem@gmail.com --- premavan@gmail.com

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .