2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

எழுத்தில் கட்டுப்பாட்டு தன்மை என்பது கட்டாயமானது: தெருத்தூசியோன்

Kogilavani   / 2012 ஜூலை 18 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


'எழுத்தில் கட்டுப்பாட்டு தன்மை என்பது கட்டாயமானது. ஒரு வரம்புக்குள் இருந்து எழுதவேண்டும். யாரையும் பாதிக்காது, சமூதாயத்தை பாதிக்காது ஒரு படைப்பாளனின் படைப்பு காணப்படவேண்டும். வரம்பு என்பது எதுவரை என்பதை ஒரு படைப்பாளனே தீர்மானிக்க வேண்டும். எழுத்தாளனின் படைப்பானது வாசகனை நல்ல வழியில் சிந்திக்க செய்யக்கூடியதாக உருவாக்கப்பட வேண்டும்'  என்கிறார் எழுத்தாளர் ஆர்.சி.ராஜ்குமார்.

'தெருத்தூசியோன்' என பலராலும் அறியப்பட்ட இவர், பிறவியிலே பார்வைப்புலனற்ற நிலையில் இருந்தாலும் அதனை ஒரு பொருட்டாக கருதாமல் பல்வேறு தடைகளையும் தாண்டி இதுவரை 14 நூல்களை வெளியிட்டுள்ளார்.

கவிதை, கட்டுரை என தனது எழுத்தாற்றலை விரிவுபடுத்திக்கொண்ட இவர்,

'நாம் ஒளி இழந்த போது', 'ஆசைகளின் ஓசைகள்', 'சித்திர பூ வெளி', 'நினைவுகளின் நிழல்', 'நான் காணும் உலகம்', 'குமுறும்; குரல்கள்', 'என்னுடைய ஏக்கங்கள்', 'அனுமதிக்கப்பட்ட அனுபவங்கள்', 'உயிர்த்தெழுந்தவருடன் உறவுகொள்வோம்', 'உங்களை நோக்கி' (மாற்றுத்திரண் கொண்டவர்கள்), 'சிந்தனை செய்' (மாணவர்களை பற்றிய புத்தகங்கள்), 'கடகத்துக்குள் கிடுகுகள்' (இறையியல்), 'முழுதாய் முழுகுவோம்' (வெளியிடப்படவுள்ள புத்தகம்) என இதுவரை 14 நூல்களை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், சுன்னாகத்தை பிறப்பிடமாக கொண்ட இவர், கிழக்குப் பல்கலைக்கழத்தில் கலைமாணி பட்டப்படிப்பை நிறைவு செய்த பின், சமூக சேவைகள் திணைக்களத்தில் அபிவிருத்தி அலுவலராக பணியாற்றி வருகின்றார்.

ஐம்புலனும் சிறப்பாக அமையப்பெற்றவர்களாலும் சாதித்துவிட முடியாத இவரது சாதனையானது பார்வைப் புலனற்றவர்களுக்கேயான எழுத்து வடிவமாக காணப்படும் பிரெய்ல் எழுத்தின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டது எனலாம்.

தமிழ்மிரர் இணையத்தளத்தின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதிக்காக இவரை நேர்கண்ட போது அவர் பகிர்ந்துக்கொண்டவை...

கேள்வி:- பார்வைபுலனற்ற நிலையில் எவ்வாறு உங்களால் இத்தகையதொரு வளர்ச்சிப் படிநிலையை அடைய முடிந்தது..?

பதில்:- தன்னம்பிக்கை, விசுவாசம், விடாமுயற்சி இவ்வாறான எண்ணங்களினினூடாகவே இந்த ஒரு நிலையை எட்ட முடிந்தது. எதனையும் சாத்தியப்படுத்திக்கொள்ள முடியும் என்று நினைக்கும் ஒரு மன உறுதிப்பாடு என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்துள்ளது என்று சொல்லலாம். சாத்தியமில்லை என்ற சிந்தனை இல்லாமல் அனைத்தையும் சாத்தியப்படுத்தலாம் என்று சிந்திக்கும் மன உறுதிப்பாடு எம்மிடத்தில் இருக்கும்போது வரும் தடைகள் பெரியதொரு விடயமாக தெரியாது. இந்த சிந்தகைளினூடாகவே இவ்வாறு வளர்ச்சியடைய முடிந்தது.


கேள்வி:- இவ்வாறான வளர்ச்சி படிநிலைகளை அடைவதற்காக நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கூறமுடியுமா?


பதில்:- நான் எழுத ஆரம்பித்த காலத்தில் அதிகமான நூல்களை வாசிக்க முடியாத ஒரு நிலைமை காணப்பட்டது. முக்கியமாக எனக்கு பார்வைப்புலன் இல்லாத காரணத்தினால் அதிகமான புத்தகங்கள் பிரெய்ல் என்ற எழுத்தில் இருக்கவில்லை. (பிரெய்ல் என்பது பார்வை புலன் அற்றவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள எழுத்து முறைகள்) இவ்வாறு அதிகமான புத்தகங்கள் பிரெய்ல் என்ற எழுத்தில் இல்லாத காரணத்தினால் எப்போதும் ஒருவரில் தங்கியிருக்க வேண்டிய நிலை காணப்பட்டது.

பிரெய்ல் எழுத்துக்களால் வடிவமைக்கப்படாத புத்தகங்களை ஒருவரை கொண்டு வாசித்து அறிந்துக்கொள்ள வேண்டிய தேவை எப்போதும் இருந்தது. அதிகமாக மற்றவர்களது உதவிகள் எனக்கு தேவைப்பட்டது. நான் எதிர்பார்த்த அளவில் பாரியளவிலான உதவிகள் கிடைக்கவில்லை. ஆனபோதும் கிடைத்த உதவிகளை வைத்துக்கொண்டு இவ்வளவு தூரம் வளர்ச்சியடைய முடிந்தது. ஆனால் அதிகமான நூல்களை வாசிக்க முடியாமல் போனதற்கு காரணம் பிரெய்ல் என்ற எழுத்தில் புத்தகங்கள் அச்சடிக்காமல் போனதுதான். இருந்தாலும் இருந்த சிறிய புத்தகங்களை கொண்டு வாசித்தறிந்து இந்த நிலைமைக்கு வளர்ச்சியடைந்தோம்.

இப்போதும் கூட அந்த தடை இருந்துகொண்டுதான் இருக்கின்றது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையத்தளத்தில் பல சொப்ட்வெயார்களை பதிவிறக்கம் செய்து அதனது உதவியை கொண்டு பலதேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறோம்.

கேள்வி:- தொழில்நுட்ப வளர்ச்சியில் உங்களது எதிர்பார்ப்புகளை ஓரளவிலேனும் நிறைவேற்றிக்கொள்வதற்கான வசதிவாய்ப்புகள் இருக்கின்றனவா?

பதில்:- தொழில்நுட்ப வளர்ச்சி எனும்போது பொருளாதார பிரச்சினை எல்லோருக்கும் உள்ளது. நாங்கள் கடந்த ஆறுவருடங்களாக விஜயா பிரெய்ல் வாங்கியதை போன்று பிரெய்ல் பிரின்டர் இயந்திரத்தை வாங்குவதற்கு முயற்சி செய்து வருகின்றோம். இந்த இயந்திரத்தை வாங்குவதற்காக பண வசூலிப்பு ஒன்றை செய்துக்கொண்டு வருகின்றோம். எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் இந்த இயந்திரத்தை வாங்குவதற்குரிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

கேள்வி:- இந்த பிரெய்ல் இயந்திரத்தின் கொள்வனவினூடாக நீங்கள் மேற்கொள்ளப்போகும் செயற்றிட்டங்கள் குறித்து கூறமுடியுமா?

பதில்:- இதனூடாக தமிழ் பண்பாடு, காலசாரத்தை பின்பற்றும் பார்வை புலனற்ற சமூகத்தினருக்கு அறிவியல் தொடர்பான, சமூகவியல் தொடர்பான பல விடயங்களை பிரெய்ல் மூலமாக வழங்கமுடியும். ஏனென்றால் இலங்கையில் பார்வை புலனற்ற நிலையில் வாழும் தமிழ் மொழி பேசுபவர்கள் வாசிக்கக் கூடிய வகையில் பிரெய்ல் புத்தகங்கள் இதுவரை அச்சிடப்படவில்லை.

சிங்கள மொழியில் 'பீச் த பிரெய்ல்' செய்வது போன்றதொரு சாதனையை தமிழில் இதுவரை யாரும் செய்யவில்லை. உண்மையில் விஜய நிறுவனம் சிங்களமொழி பேசுபவர்களுக்காக வெளியிடும் பிரெய்ல் சஞ்சிகையானது ஒரு சாதனை என்றே கூறவேண்டும். ஏனெனில் இலங்கையில் எத்தனையோ பெரிய நிறுவனங்கள் உள்ளன. ஆனபோதும் பார்வை புலனற்றவர்களுக்கு ஒரு தேவை இருக்கின்றது என்பதை இந்த விஜய நிறுவனமே உணர்ந்துகொண்டுள்ளது.


கேள்வி:- உங்களது எழுத்துக்கு துணை நிற்பவர்கள் குறித்து கூறுங்கள்?


பதில்- ஆரம்ப காலத்தில் எனது நண்பர்கள். குடும்ப வாழ்வென்று வந்த பின் எனது மனைவி மற்றும் பிள்ளைகள். பல்வேறுபட்ட காலத்தில் பல்வேறுபட்டவர்கள் உதவிய வண்ணமே உள்ளனர். எங்களது தேவைகளை உணர்ந்து செயற்படுகின்றனர். ஆனால் எப்போதும் ஈடுசெய்ய முடியாத பிரச்சினையாக இருப்பது வாசிப்பு மட்டும்தான். எப்போதும் ஒருவரில் தங்கி இருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. ஆரம்ப வகுப்பில் கல்வி கற்பதற்கு ஆரம்பித்த நாள் முதல் பல்கலைக்கழக வாழ்க்கை வரை எனது நண்பர்கள் உதவியாக இருந்தார்கள். வாசிப்பு பிரச்சினை இன்றும் இருக்கவே செய்கிறது. ஆனாலும் வாசிக்க வேண்டும். அதற்காகத்தான் பிரெய்ல் இயந்திரத்தினை கொள்வனவு செய்யும் முயற்சியில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றோம். இதனை கொள்வனவு செய்தால் நூறு வீதம் இல்லாவிட்டாலும் எழுபத்தைந்து வீதமாவது இந்த வாசிப்பு பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளலாம்.

கேள்வி: எழுத்துக்களை நீங்கள் பார்க்கும் விதம் குறித்து கூறுங்கள்?

பதில்:- ஓர் எழுத்தாளன் என்று வரும்போது அவனுக்கு பார்வை என்பது அவசியமில்லை. இவ்வாறு பார்வை புலன் அற்றவர்களும் எழுத்து துறையில் சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த ஜோன் பில்டெர், ஹெலன் கெலர், இதேபோல் இன்னுமொரு பெண்ணொருவர் இருந்துள்ளார். அவர் 13,000 இற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். எனவே எழுத்துக்கு பார்வையென்பது அவசியமானது இல்லை.

அதிகமானவர்கள் தமது மன உணர்வுகளை உள்ளத்தில் வைத்துக்கொண்டே கண்ணீர்விட்டவண்ணமுள்ளனர்.

என்னுடைய வேதனைகளை, பிரச்சினைகளை சொல்லக்கூடிய ஓர் ஊடகமாக இந்த எழுத்தை நான் பார்க்கிறேன். இந்த எழுத்தானது தனிமனித புலம்பலாகவும் இருக்கலாம். இல்லாவிட்டால் சமூகம் சார்ந்த புலம்பலாகவும் இருக்கலாம். பிரச்சினைகளை கூறுவதற்கு தொடர்பாடல் என்ற ஒன்று உள்ளது. எழுத்தாளன் என்ற ரீதியில் எல்லோருடைய பிரச்சினைகளையும் எடுத்து அதற்கு வடிவம் கொடுத்து அதனை ஒரு படைப்பாக கொடுக்கின்றோம்.

கேள்வி:- இயற்கை சூழலை உணரமுடியாத நிலை காணப்பட்டாலும் எவ்வாறு இயற்கையை உள்வாங்கிக்கொண்டு எழுதுகின்றீர்கள்?

பதில்:- வெளியில் இருக்கும் விடயங்கள் அனைத்தையும் பார்க்க முடியாது. ஐந்து புலன்களில் ஒன்று இழக்கப்பட்டுள்ளது. இதில் மீதம் இருக்கும் நான்கு புலன் உணர்வுகளைகொண்டு கேட்டல், தொட்டுணர்தல் போன்ற செயற்பாடுகளினூடாக இயற்கை சூழலை உள்வாங்கிக் கொண்டு - பின் அதனை உணர்ந்து ஒரு படைப்பாக வெளிப்படுத்துகிறேன்.

வெளிச்சூழல் பற்றி ஒருவர் எனக்கு தெளிவுபடுத்தி கூறவேண்டும். அதன்பின்புதான் ஒரு விடயத்தை பற்றி நான் தெளிவாக உணர்ந்து எழுத ஆரம்பிப்பேன். நேரடியாக முகத்துக்கு முகம் பார்க்கும் ஒரு புலன் இங்கு இழக்கப்பட்டுள்ளது. அதனால் சோர்ந்து இருந்துவிடவில்லை. அது ஓர் இழப்பாக இருந்தாலும் என்னுடைய முயற்சியால் நான் இந்த நிலைக்கு வளர்ந்துள்ளேன். மற்றவர்களைப் போல் இயங்குவது எனக்கு அவ்வளவு இலகுவானதல்ல. என்னைப்பொறுத்தவரை ஒருவிடயத்தை கேட்டு, அறிந்து அதனை உள்வாங்கிக்கொண்டு எழுத வேண்டும். இலங்கை சூழலில் இத்தகையதொரு நிலையிலிருந்து கொண்டு 14 புத்தகங்களை வெளியிட்டது பெரியவிடயம். நீங்கள் செய்வதைப் போன்று இல்லாமல் நாங்கள் பல மடங்கு முயற்சி எடுக்க வேண்டும்.


கேள்வி:- தற்போது வெளிவரும் படைப்புகள் குறித்து உங்களது கருத்து என்ன?


பதில்:- ஓர் எழுத்தாளன் எழுத்தாளனாக பிறக்கின்றான். களிமண்ணை பிடித்து உருவாக்குவது போன்று ஓர் எழுத்தாளனை உருவாக்க முடியாது. எழுத்தாற்றல் என்பது அவனது உணர்வில், இரத்தத்தில் ஊறியிருக்க வேண்டும். இல்லாவிட்டல் எல்லோரும் எழுதலாமே? சிறிது காலம் எழுதவிட்டு செல்பவர்களும் இருக்கின்றனர். பாரதிக்குப் பின் ஒரு பாரதி இன்னும் தோன்றவில்லை. கண்ணதாசனுக்குப் பின் ஒரு கண்ணதாசன் இன்னும் தோன்றவில்லை.

ஓர் எழுத்தாளன் எழுத்தாளனாக பிறப்பானானால் அவன் எழுதிக்கொண்டே இருப்பான். எந்த சூழ்நிலையையும் பார்க்க மாட்டான். இருள், வெளிச்சம் என்பவற்றுக்கு அப்பாற்பட்டதுதான் எழுத்து. ஒரு காலக்கட்டத்தில் வெளிச்சம் என்பதே இருக்கவில்லை. ஆனால் அந்த சூழலிலும் எழுதியிருக்கின்றார்கள். உணர்வுகளை தடைசெய்ய முடியாது. ஆனாலும் எழுதும் போது சமூகத்தை சற்று உணர்ந்து எழுத வேண்டும். ஒரு படைப்பை பத்துமுறை வாசிக்க வேண்டும். படைப்பென்று வரும்போது அதை வாசகர்களுக்கு வழங்கும் விதம் என்பது மிக முக்கியமானது. எல்லாவற்றையும் எழுதி, அதை படைப்பாக வழங்க முடியாது.

ஓர் எழுத்தில் கட்டுப்பாட்டு தன்மை என்பது கட்டாயமானது. ஒரு வரம்புக்குள் இருந்து எழுதவேண்டு;ம். யாரையும் பாதிக்காது சமூதாயத்தை பாதிக்காது ஒரு படைப்பாளனின் படைப்பு காணப்படவேண்டும். வரம்பு என்பது எதுவரை என்பதை ஒரு படைப்பாளனே தீர்மானிக்க வேண்டும். எழுத்தாளனின் படைப்பானது வாசகனை நல்ல வழியில் சிந்திக்க செய்யக்கூடியதாக உருவாக்கப்பட வேண்டும். ஒழுக்கத்துக்குள் எழுத வேண்டும்.

இதற்கு சிறந்த உதாரணமாக உப்பு, விளக்கு, கோதுமையை கூறலாம். உப்பு காரமானது. அதிகமானாலும் பிரச்சினை, குறைந்தாலும் பிரச்சினை. எனவே உப்பை போன்று உபயோகமுள்ளதாக படைப்புகள் காணப்படவேண்டும். ஒளி என்பது எமக்கு இன்றியமைதாது. எனவே படைப்புகள் வழிகாட்ட கூடியதாக இருக்க வேண்டும். இதேவேளை கோதுமையை எடுத்துக்கொண்டால், கோதுமையின் விதைகள் மடிந்தால்தான் எமக்கு உணவாகின்றது.

எனவே ஓர் எழுத்தாளன் சமூதாயத்துக்கு உப்பாகவும் விளக்காகவும் கோதுமையைப் போன்றும் காணப்படவேண்டும். உப்புக்கு ஒப்பாய் படைப்புகள் காணப்படவேண்டும்.

கேள்வி:- உங்களது எழுத்துக்களுக்கூடாக நீங்கள் எவ்வாறான செய்திகளை கொடுக்க முனைந்தீர்கள்?

பதில்:- எனது எழுத்துக்களை வாசிக்கும் வாசகனுக்கு அந்த எழுத்தானது அவனது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைய வேண்டுமென்றே நினைக்கின்றேன். ஒரு மனிதனின் காயங்களுக்கு கட்டுப்போடும் வகையிலான சிகிச்சை முறையாக எனது எழுத்துக்கள் அமையவேண்டும் என நினைக்கின்றேன். மருத்துவர் ஒருவர் ஒரு நோயாளனின் நோய்களை இனங்கண்டு அந்நோய்க்கு எவ்வாறு சிகிச்சை வழங்குகின்றாரோ அதேபோல் ஒரு வாசகன் படைப்பை வாசிக்கும் போது சிந்தனை செய்ய வேண்டும். அந்த எழுத்துக்கள் வாசகனின் வாழ்வில் திருப்பு முனையாக அமையவேண்டும்.


கேள்வி:- இன்றைய இளம் சமூகம் குறித்து உங்களது அபிப்பிராயம் என்ன?


பதில்:- இன்றை இளம் சந்ததியினருக்கு சரியான வழிகாட்டல் இல்லையென்றே கூறவேண்டும். நல்ல வழிகாட்டல்  இருக்குமாயின் சிறந்த எதிர்கால சந்ததியினரை நாம் காணலாம். நல்லதொரு வழிகாட்டல் தற்போதைய இளம் சந்ததியினருக்கு தேவைப்படுகிறது.

ஆலயங்கள், ஒழுக்க நிலையங்கள் இந்த வழிகாட்டல்களை இன்றைய இளம் சந்ததியினருக்கு வழங்க முன்வரலாம்.

கேள்வி:- நீங்கள் இன்னும் சாதிக்க நினைக்கும் விடயம் எது?

பதில்:- என்னைப் போன்ற பார்வையற்றவர்களுக்கு அதிகமான புத்தகங்களை பிரெய்ல் மூலமாக அச்சடித்துக் கொடுப்பதற்கு நினைக்கின்றேன். நான் இருக்கும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இவ்வாறு உப்பாய், விளக்காய் அதிகமான விடயங்களை பார்வை புலன் அற்றவர்களுக்கு வழங்க நினைக்கின்றேன்.

கேள்வி:- தெருத்தூசியோன் என்ற பெயர் எவ்வாறு வந்தது..?

பதில்:- சிறுவயதில் 'சுவிப்பர்' என்றதொரு கவிதையை வாசித்தேன். அந்தக் கவிதையில் தெருவை கூட்டும் நிகழ்வு தொடர்பில் பலவாறு கவிஞன் எழுதியிருப்பார். இந்த கவிதையை வாசித்த பின் தெருத்தூசியோன் என எனக்கு நானே இந்த பெயரை இட்டுக்கொண்டேன்.

நேர்காணல்:- க.கோகிலவாணி
படங்கள்: சமந்த பெரேரா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .