2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

வட இலங்கை சங்கீத சபை பட்டங்களை வழங்கவேண்டும்: பாலசுந்தரம்பிள்ளை

Gavitha   / 2015 மார்ச் 10 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வட இலங்கை சங்கீத சபை எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்குரிய  பட்டங்களை வழங்குவதற்குரிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழககத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார்.

வட இலங்கை சங்கீத சபையின் 19ஆவது கலாவித்தகர் பட்டமளிப்பு விழா மருதனார்மடத்தில் அமைந்துள்ள வட இலங்கை சங்கீத சபையின் தற்பானந்தன் கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது.

வட இலங்கைச் சங்கீத சபைத்தலைவரும் யாழ்.வலயக்கல்விப் பணிப்பாளருமான செ.உதயகுமார் தலைமையில் இந்நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

'இந்த செயற்பாட்டை வடமாகாண சங்கீத சபையின் முழு நிதியுடன் செயற்படுத்த முடியும். 1931ஆம் ஆண்டிலிருந்து கல்விக்கந்தோரின் வளர்ச்சியிலேயே இந்த சபை செயற்பட்டு வருகிறது. எந்த ஒரு கருத்தையும் நாம் முன்மொழியும் போது, மக்கள் சிரிக்கத்தான் செய்வார்கள். பின்னாளில் நாம் முன்னெடுக்கும் காரியம் வெற்றியளிக்கும் போது, எல்லோரும் ஒத்துழைப்பார்கள். இது உலகநியதி.

யாழ். நுண்கலைக்கழகம் யாழ்.இராமநாதன் அக்கடமி என்றுதான் முன்னர் இருந்தது. அதனை நாம் விரும்பவில்லை. யாழ். நுண்கலைக்கழகம் என்று பெயர் மாற்றினோம். யாழ். பல்கலைக்கழக கட்டமைப்பிலேயே இக்கலைத்துறை இருக்க வேண்டும் என்று விரும்பி அதனை மாற்றியிருந்தோம். அதேபோல், வட இலங்கை சங்கீதசபை ஏன் பட்டதாரிகளை உருவாக்கும் நிறுவனமாக வளரக்கூடாது. அதற்கான சரியான திட்டங்கள் இருக்கும் என்றால் எதனையும் சாத்தியமாக்க முடியும்.

இந்த நிறுவனத்தை, உலகளாவிய ரீதியில் பரீட்சைகளையும் சிறந்த கல்வியையும் வழங்குகின்ற இலங்கைக்கான நிறுவனம் என்று கூறமுடியும். நாடு கடந்து இச்சபை சிறந்த கல்வியை வழங்கி வருகிறது. வெளிநாடுகளுக்குச் சென்று பரீட்சைகளை கலாநிதி கிருஷாந்தி இரவீந்திரன் வழங்கி வருகிறார். வடமாகாணசபை உருவாக்கப்பட்டு விட்டது. எமது வடமாகாண கல்வி முழுவதற்கும் இச்சபையே பொறுப்பாகும். அதேபோல் இம்மாகாணசபைக்கு யாழ். பல்கலையை சிறந்த முறையில் நடத்திச் செல்வதற்கு உரிமையுள்ளது.

இங்கு கல்வி கற்று சிறந்த பட்டத்தைப் பெற்றுக் கொள்கிறீர்கள். நடனம்,  சித்திரம் நாடகம் போன்ற கலைத்துறைகளில் கல்விகற்று பட்டதாரிகளாக வெளியேறும் பட்டதாரிகள் பெரும்பாலும் அரச நிறுவனங்களையே எதிர்பார்க்கின்றார்கள். நீங்கள் வீட்டிலேயே மாணாக்கர்களுக்கு பாடங்களைக் கற்பித்து சம்பாதித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்' என்று தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .