Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 ஜூன் 07, புதன்கிழமை
Editorial / 2022 ஒக்டோபர் 05 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக தலைமைகளே ‘காக்கா முட்டை’ விளையாடாதீர்கள்!
மக்கள் நலன்சார்ந்த சிந்தனை இல்லாத எந்தத் தலைவர்களும் வெகு சீக்கிரத்தில் தூக்கியெறிப்படுவார்கள் என்பதை அரசியல் தலைமைகள் ஒவ்வொரு நொடியும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.
அடுத்தடுத்த தேர்தல்களில் மக்களால் தூக்கியெறிப்பட்ட அரசியல் தலைவர்கள் பலருலர். கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே பதவியில் இருந்து விலகுவதற்கான கடும் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்த அரச தலைவராக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உதாரண புருஷராகத திகழ்கின்றார்.
மலையகத்தை பொறுத்தவரையில், அரசியல் தலைவர்களின் கடந்தகால, நிகழ்கால செயற்பாடுகளில் ஒரு சிலவற்றை பார்க்குமிடத்து, மக்கள் சார்பானதாக இருக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும். ஆக, மக்கள் நலன்சார் விடயங்களில் ஆகக் கூடுதலான அக்கறையை காட்டவில்லை; வெறுமனே படத்துக்காக முகங்களை காட்டுவதாகவே அமைகின்றது. இல்லையேல் கடந்தகால வேலைத்திட்டங்களில் குறைகளை கண்டுப்பிடித்து அரசியல் விமர்சகர்களாக நிற்கின்றனர்.
அரசியல், பல தடங்களைக் கொண்டிருக்கின்றது. அதில், ‘மக்களுக்கான அரசியல்’ முக்கியம். அமைச்சரவையில் கூட, கருத்துகளை செவிசாய்க்காதவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய என்பதை, கூட்டுப்பொறுப்பையும் மீறி, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களே விமர்சித்தனர். ஆக, குரல்களுக்கு செவிசாய்க்க வேண்டியது அரசியல்வாதிகளின் தார்மீக கடப்பாடாகும்.
மலையகத்தின் வீட்டுப்பிரச்சினைக்கு இன்னுமே நிரந்தரமான தீர்வு வழங்கப்படவில்லை. 1987ஆம் ஆண்டு முதல், மலையகத்தில் நிர்மாணிக்கப்பட்ட 37 ஆயிரம் வீடுகளுக்கு சட்டரீதியான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை. அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கக் கோரி, மலையக சமூக அபிவிருத்தி நிறுவனத்தால் கொழும்பில் நேற்று முன்தினம் (03) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதனிடையே, மலையகத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஆக, கட்டணங்கள் செலுத்தப்பட்ட வீடுகளுக்கும், பூரணப்படுத்தப்படாத வீடுகளுக்கும் எவ்விதமான உறுதிப்பத்திரங்களும் இல்லை. இதற்கிடையில் இயற்கை அனர்த்தங்கள் இன்னும் சில வீடுகளை இடித்தழித்து, அம்மக்களை நிர்க்கதிக்குள் தள்ள முயல்கிறது.
மலையக அரசியல் வாதிகளைப் பொறுத்தவரையில், கூட்டணி அமைத்து, சந்தர்ப்பவாத கூட்டாளிகளாக மட்டுமே செயற்படுகின்றனர். அவ்வாறானவர்களுக்கு தக்க பாடங்களை மக்கள் கற்றுக்கொடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அதற்கான குழிகளை பறித்துக்கொள்ளவேண்டாம்.
பெருந்தோட்டங்களைச் சார்ந்த சிறுவர்கள், விடுமுறை நாள்களிலும், பாடசாலைகள் விட்டு வந்ததன் பின்னரும் சிரட்டைகளில் மண்ணை நிரப்பி ‘காக்கா முட்டை’ விளையாடுவார்கள். அதில், தன்னுடையது அழகாக இருக்கவில்லை என்றால், ஏனைய ‘காக்கா முட்டை’களை கால்களால் எட்டி உதைத்து, அழித்துவிட்டு, அழிச்சாட்டாம் ஆடிவிடுவார்.
இதேபோன்ற ‘காக்கா முட்டை’ அரசியலை கைவிட்டு, மக்கள் நலன்சார் செயற்றிட்டங்களை காத்திரமாக முன்னெடுக்குமாறு மலையக அரசியல்வாதிகளிடம் வலியுறுத்துகின்றோம். (05.10.2022)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
35 minute ago
44 minute ago
1 hours ago