2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

‘அமில மழை பெய்யும் அபாயம்’

Niroshini   / 2021 மே 27 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீ பரவியிருக்கும் எம்வீ எக்ஸ் - பிரஸ் பேர்ல் சரக்குக் கப்பலிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கும் கரும்புகையால், அமில மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவென கடற் மாசுப்படுவதை தடுப்பதற்கான அதிகார சபை தெரிவித்துள்ளது.

தீ பரவிக்கொண்டிருக்கும் கப்பலிலிருந்து நைட்ரஜன் டை ஆக்சைடு வாயு வெளியேறுவதால், அது காற்றுடன் கலந்து அமில மழையாக பெய்யும் வாய்ப்புள்ளதாக அவ்வதிகார சபையின் தலைவி தர்ஷனி லஹதபுர தெரிவித்துள்ளார்.

கரையோரங்களில் மாத்திரமன்றி, கரையோரங்களை அண்மித்த பிரதேசங்களிலும் அமில மழை பெய்யக்கூடும். ஆகையால், மழை பெய்யும் ​போது, வீடுகளிலிருந்து வெளியேறுதல், நனைதல் ஆகியவற்றை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதுமட்டுமன்றி, வீடுகளுக்கு வெளியில் வாகனங்கள் உள்ளிட்ட உலோகப் பொருள்கள் இருக்குமாயின் அவற்றை, கடுமையான பாதுகாப்புடன் மூடி வைக்குமாறும் ​கேட்டுக்கொண்டுள்ளார்.

தீப்பற்றி எறிந்துகொண்டிருக்கும் கப்பல், கடலில் மூழ்கும் அபாயமுள்ளதால், அதிலுள்ள எண்ணெய் கடலில் கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகத் தென்படுகின்றனவென அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்தளை கரையோரத்திலிருந்து மாரவில வரையான கடற்கரையோரங்களில் கடல்நீர் மாதிரிகளை சேகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, பயணக் கட்டுப்பாடுகளை மீறி, கரையோரங்களில் பொருள்கள் அள்ளிக்குவித்தனர் என்ற சந்தேகத்தின் பேரில், எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, திக்கோவிட்டவில் இருந்து சிலாபம் வரையான கரையோரங்களிலும் வௌ்ளவத்தை மற்றும் பாணந்துறை கரையோரப் பகுதிகளிலும் கடற்படையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தியாவின் ஹசீரா துறைமுகத்திலிருந்து பயணித்த எம்வீ எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பல், கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த போதே கப்பலில், கடந்த வியாழக்கிழமை (20) தீ பரவ ஆரம்பித்தது.

சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த இந்தக் கப்பலில் தீ பரவும் போது, 25 தொன் எத்தனோல், இரசாயனப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள் அடங்கிய 1,486 கொள்கலன்கள் இருந்தன.

இலங்கை கடற்படையினர், விமானப்படையினர், துறைமுக அபிவிருத்தி அதிகார சபையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த போதிலும், சீரற்ற வானிலை மற்றும் கப்பலில் இரசாயனப் பொருட்கள் இருந்தமையால் தீயைக் கட்டுப்படுத்த முடியாது போனதுடன், கப்பலும் முழுமையாக தீக்கிரையானது.

இதேவேளை, எம்வீ எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ சம்பவத்தால் கொழும்புத் துறைமுக நடவடிக்கைகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று, துறைமுக அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .