2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

மட்டக்களப்பு, பஞ்சமுக ஆஞ்சநேயர் கும்பாபிஷேகம்

Johnsan Bastiampillai   / 2021 ஜூலை 18 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி. யுதாஜித்

இராமாயண காவியத்தில் இராமனுக்கு மிகவும் விசுவாசமான ஒருவனாக விளங்கும் வாயு மைந்தனான ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானை இந்துமக்கள் விரும்பி வழிபடுவதுண்டு.

மட்டக்களப்பு, திருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலின் பிரதிஸ்டா அஸ்டபந்தன நவகுண்ட கும்பாபிஷேகம் நேற்றுமுன்தினம் (16)  நடைபெற்றது.

திங்கட்கிழமை (12.07.2021) கர்மாரம்பத்துடன்  ஆரம்பமான இந்த உற்சவத்தில் வியாழக்கிழமை (15) எண்ணெய் காப்பு சாத்துதல் நடைபெற்று, வெள்ளிக்கிழமை (16) சுபநேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக கிரியாகால நிகழ்வுகள், யாழ்ப்பாணம், தொல்புரம், வடக்கம்பிராய் முத்துமாரியம்மன் கோவில் பிரதகுரு சிவஸ்ரீ சுந்தர ஸ்ரீரங்கநாதக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆனித்திங்கள் 28ஆம் நாள் 12.07.2021 அன்று கும்பாபிஷேக குருமார்களை அழைத்துவருதலுடன் ஆரம்பமாகி, அடுத்த நாள் தன்வந்தரி ஹோமம் யந்திர பூஜை, 14.07.2021 அன்று நந்திக் கொடி ஏற்றல் தீபாராதனை என்பனவும் 15.07.2021  காலை விநாயகர் வழிபாடு, எண்ணைக் காப்பு சாத்துதல் போன்ற கிரியைகள் தொடர்ச்சியாக நடைபெற்றன.

வௌ்ளிக்கி​ழமை காலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி, சுபமுகூர்த்த வேளையில் ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமானுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக் கும்பாவிஷேகப் பணிகளை மூர்த்திய சிவாச்சாரியர்கள், சிறப்பு குருமார் ஆகியோர் இணைந்து நடத்தினர்.

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, மாலை ஆறு மணிக்கு வசந்த மண்டப பூஜையின் பின்னர் ஆஞ்சநேயர் வீதியுலா வருதல், மண்டலாபிசேக பூஜைகள் நடைபெற்றன. 27.07.2021 அன்று நவோத்ரா சங்காபிசேகத்துடன் இவ் உற்சவம் இனிதே முடிவுறும்.

கிழக்கு மாகாணத்தில் முதலாவது பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் இங்கு குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும். இக்கோவிலானது, கோவில் தர்மகர்த்தா கிட்னன் மகேஸ்வரனின் (நிலஅளவையாளர்) சொந்தச் செலவில் அவரின் தாய் தந்தையரான அமரர்கள் நாகன் கிட்னன், வன்னமணியம்மா கிட்னன் ஆகியோரின் ஞாபகார்த்தமாகக் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .