2023 ஜூன் 07, புதன்கிழமை

பணியிட சமத்துவத்துவத்துக்கு இன்னும் 202 வருடங்கள் தேவை

Editorial   / 2019 ஜனவரி 11 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமத்துவமற்ற இந்தச் சமூகத்தில், ஆண், பெண் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காக, நாம் எத்தகைய போராட்டங்களை முன்னெடுத்தாலும் அதில் பயனில்லை என்றே கூறத் தோனுகின்றது.   

 

சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காக, மேலும் பல வலுவான போராட்டங்களில் பெண்கள் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம், தற்போது எழுந்துள்ளது.   

ஏனெனில், பணியிடத்தில் சமத்துவத்தைப் பேணுவதற்காக, இன்னும் 202 வருடங்கள், பெண்கள் காத்திருக்க வேண்டுமென்று, ஆய்வொன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.   

உலக பொருளாதார கருத்துக்களமானது, உலகளாவிய ரீதியில், பாலின பாகுபாடு தொடர்பிலான ஆய்வறிக்கையை, அண்மையில் வெளியிட்டிருந்தது.   

149 நாடுகளில், சுகாதாரம், கல்வி, தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பல துறைகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

இதில் அதிர்ச்சியளிக்கக்கூடிய விடயமாக, உலகளவில் 68 சதவீதமே, பாலின பாகுபாடு ஒழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலகளவில், 108 சதவீதம் பாலின பாகுபாடு இன்னும் தொடர்வதாக அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.   

உலகளவில் முற்றுமுழுதாக பாலின பாகுபாட்டை ஒழிப்பதற்கு, இன்னும் 202 வருடங்கள் காத்திருக்க வேண்டுமென்று, அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. பொருளாதார வாய்ப்பு, அரசியல் அதிகாரமளித்தல், கல்வி அடைவுமட்டம், சுகாதாரம் மற்றும் உயிர்வாழுதல் போன்ற ஐந்து பிரிவுகளில் மட்டுமே, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஐந்து பிரிவுகளில் மட்டும், 68 சதவீத பாலின பாகுபாடே ஒழிக்கப்பட்டுள்ளது எனில், ஏனையதுறைகளில் எத்தகைய நிலை என்பதைச் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.   

ஊதியம், சம அந்தஸ்து, சம வாய்ப்பு உள்ளிட்ட பல விடயங்களில், சமத்துவத்தைப் பேணுவதற்காக இன்னும் பல போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.   

பாலின பாகுபாட்டை 85.8 சதவீதம் ஒழித்ததனூடாக, ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. நோர்வே, சுவீடன், பின்லாந்து, நிகரகுவா, நமீபியா, ருவண்டா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள், பாலின பாகுபாட்டை ஒழித்ததனூடாக, முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறியுள்ளன.   

இலங்கையில் தற்போதைய பெண் தொழிலாளர் பங்களிப்பு 36 சதவீதமே உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதன் பொருள் என்னவெனில், பெண்களின் விகிதாசாரத்தில் பெரும்பான்மையானோர், தொழில் சந்தைக்கு வெளியிலே உள்ளனர். அதாவது ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் பிற நலன்களைப் பெறுவதற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட அல்லது எந்தவொரு வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை என்பதே இதன் அர்த்தம்.   

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 29 சதவீதமான பெண்கள், நேரடியாக பங்களிப்புச் செய்கின்றனர்.

பாகிஸ்தானில் 11 சதவீதமும் இந்தியாவில் 18 சதவீதமும் பங்களாதேஷில் 19 சதவீதமும் பெண்களின் பங்களிப்பு காணப்படுகின்றது. இவ்விடயத்தில், ஆசிய நாடுகளின் ஒப்பிடுகையில், பெண்களின் பங்களிப்பில் இலங்கை முதலிடத்தில் காணப்பட்டாலும்கூட, இலங்கையின் தொழிற்சந்தைக்கு பெண்களின் பங்களிப்பு என்பது, மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமென்பதே, பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .