2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

எழுதுகோல்கள் சமூகங்களை பிணைக்கின்றனவா? பிளக்கின்றனவா?

Princiya Dixci   / 2021 ஜூலை 24 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓர் எழுதுகோலும் காகிதமும் எவ்வளவு சிக்கலான விடயத்துக்கும் தீர்வு காணும் வல்லமையுடையது. அதுவும் ஓர் ஊடகவியலாளர் கையில் இருக்கும் எழுதுகோல், கடிவாளங்கள் எதுவுமின்றிக் கட்டவிழ்த்து ஓடும். இந்த ஓட்ட வேகத்தால் ஏற்படுத்தப்படும் தாக்கங்களை அவர்கள் நின்று கவனிக்கின்றார்களா என்றால் அது கேள்விக்குறியே.

இன்றைய காலகட்டத்தில் சமூக மாற்றங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய நபர்களில், ஊடகவியலாளர்களின் பங்கும் இன்றியமையாதது. சமூகத்துக்குள் மறைந்து நடக்கும் பல விடயங்களை வெளிக்கொண்டு வருபவர்களாகவும் அக்கிரமங்களைத் தட்டிக்கேட்பவர்களாகவும் அவர்கள் உள்ளனர். 

தற்காலத்தில் அத்துமீறிய குடியேற்றங்கள், மணல் கொள்ளை, சிறுவர் துஷ்பிரயோகங்கள், பல்வேறு முறைகேடுகள், குற்றச்சாட்டுகள், அறிக்கைகள் பலவற்றை பொதுமக்கள் அறியச் செய்துள்ளனர்.

இவ்வாறு பொறுப்பு வாய்ந்த பணிகளைச் செய்துகொண்டிருக்கும் அவர்கள், சமூகங்களின் சமத்துவம், நல்லிணக்கம் குறித்தும் சிந்தித்துச் செயற்பட வேண்டியது கட்டாயமாகின்றது. சமூகங்களுக்குள் என்ன நடந்தால் நமக்கென்ன, நாம் கூறுவதைக் கூறிச் செல்வோம் என்ற எண்ண ஓட்டத்தில் இருக்கலாகாது.

இந்தச் சமத்துவம், நல்லிணக்கம் என்று சொற்பதங்கள், உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த ஓரிரு வருடங்கள் பரவலாக உச்சரிக்கப்பட்டன. எனினும், தற்காலத்திலும் அதன் அவசியம் உணரப்படுகின்றது. 

குறிப்பாக, தற்காலத்திலும் வடக்கில் நடக்கும் சில விடயங்கள் குறித்து தெற்கு மக்களும் தெற்கில் நடக்கும் விடயங்கள் குறித்து வடக்கு மக்களும் மாறுபட்ட மனப்பாங்கிலேயே உள்ளனர். இதற்குத் தீர்வு காணும் சிறு முயற்சியை, இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம் இவ்வாரம் முன்னெடுத்திருந்தது.

அதாவது, தெற்கில் இடம்பெறும் சம்பவங்கள் வடக்கிலும், வடக்கில் இடம்பெறும் சம்பவங்கள் தெற்கிலும்  சரியான புரிதல் இல்லாமையால் திரிவு படுத்தப்பட்டே பரிமாற்றப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

வடக்கின் பிரச்சினைகள் தொடர்பில் தெற்கு மக்களுக்குப் போதுமான தெளிவு இல்லாத அதே நேரம், தெற்கின் பிரச்சினைகள் தொடர்பில்  வடக்கு மக்களுக்குப் போதிய தெளிவு இல்லை. தெற்கின்  ஊடகவியலாளர்களுக்கு வடக்கு அரசியல்வாதிகளுடன் தொடர்புகொள்வதற்கான சந்தர்ப்பம் மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுகிறது.  அதேபோல, வடக்கின் ஊடகவியலாளர்களுக்கும்  தெற்கின் அரசியல் பிரமுகர்களுடன் தொடர்புகொள்வதற்கான  சந்தர்ப்பம் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.

எனவே, வடக்கின் ஊடகவியலாளர்களுக்கு  தெற்கின் ஊடகவியலாளர்கள்,  சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்டோருடன்  தொடர்புகொள்ளவும்,  தெற்கின் ஊடகவியலாளர்களுக்கு வடக்கு அரசியல்வாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மதத் தலைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தவும் இரு வேலைத்திட்டங்களை இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் வடக்கின் ஊடகவியலாளர்களுக்கு, தெற்கின் அரசியல்வாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்களுடன் தொடர்ப்புபடுவதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கும் செயற்றிட்டம், கடந்த 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளிலும் நேற்றும் (23) சூம் தொழில்நுட்பம் ஊடாக  முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, முதலில் குறித்த அரசியல் பிரமுகருக்கோ, சிவில் சமூக செயற்பாட்டாளருக்கோ தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்ப்பில் கருத்துகளை முன்வைக்க 20 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் குறித்த அரசியல் பிரமுகர்களிடமும், சமூக செயற்பாட்டாளர்களிடமும் வடக்கின் ஊடகவியலாளர்கள் கேள்விகளைத் தொடுத்து, பதில்களைப் பெற்றுக்கொண்டனர்.

இச்செயற்றிட்டத்தில், தேர்தல்கள் ஆணைக் குழுவின் முன்னாள் தலைவர் மற்றும் எல்லை நிர்ணய ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய, முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், சமூக செயற்பாட்டாளரும் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளருமான  தென்னே ஞானாநந்த தேரர், டொக்டர் ஆனந்த விஜேவிக்ரமா, முனீர் முலப்பர் மெளலவி ஆகியோரும்  கலந்துகொண்டனர்.

இச்செயற்றிட்டத்தில் கலந்துகொண்டு அரசியல்வாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மதத் தலைவர்கள் அனைவருமே, சமூக மாற்றத்தில் ஊடகவியலாளர்களின் பொறுப்புகளை எடுத்தியம்பினர்.

இதில் பங்குபற்றியிருந்த சிறீதரன் எம்.பி, “தெற்கிலுள்ள ஊடகவியலாளர்கள் பலர் யதார்த்தமாக தர்மத்தின் வழியிலே தங்களுடைய செய்திகளைக் வெளிக் கொண்டு வருகின்றனர். அவர்கள் இல்லாவிட்டால், எங்களுடைய சில விடயங்கள் கூட வெளியில் வந்திருக்காது” எனக் கூறினார்.

அத்தோடு, தெற்கிலுள்ள சில ஊடகவியலாளர்களிடம் மாறுபட்ட எண்ணங்கள், கருத்துகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியதுடன், ஆனால் அவ்வாறான எண்ணங்கள், கருத்துகளுக்கு அப்பால், தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

“யாழ்ப்பாணம், வன்னி, கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளுக்கு நீங்கள் வாருங்கள்; நாங்கள் கூட்டிச் செல்கின்றோம். அம்மக்களின் பிரச்சினைகளை அவர்களிடமே கேட்டறிந்து உண்மைகளை வெளிப்படுத்துங்கள்” என்றார்.

தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணைந்து கரங்களை இறுகப்பற்றிக் கொண்டால்தான், இந்த நாட்டை பொருளாதார ரீதியாக வளப்படுத்த முடியும் எனவும் அதற்கு ஊடகவியலாளர்கள் இணைப்புப் பாலமாக செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, இச்செயற்றிட்டத்தில் பங்குபற்றியிருந்த தேர்தல்கள் ஆணைக் குழுவின் முன்னாள் தலைவர் மற்றும் எல்லை நிர்ணய ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் கருத்துகளும் சுட்டிக்காட்டத்தக்கன. அதாவது, ஊடகவியலாளர்கள் மிகவும் காத்தரமான பங்களிப்புகளை வழங்குகின்றார்கள் எனவும் மக்களுடைய பிரச்சினைகளை வெளிக் கொண்டு வரும் தூணாக ஊடாகவியலாளர்கள் காணப்படுகின்றார்கள் எனவும் அவர் எடுத்துரைத்தார்.

மேலும், “ஊடகவியலாளர்கள் வெறுமனே அறிக்கையாளர்கள் மாத்திரம் அல்லாமல் அவர்களுக்கு பல விடயங்களை ஆராய வேண்டிய பொறுப்புக் காணப்படுகின்றது.

“கொச்சிக்கடை, கட்டுவாப்பிட்டிய, மட்டக்களப்பு, மினுவாங்கொடை,  நிக்கவரட்டிய போன்ற இடங்களில் ஏற்பட்ட சம்பவங்களின் வேதனை எமக்கும் ஏற்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்களை அறிக்கையிடல் மாத்திரமின்றி, பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வு ரீதியாகவும் செயற்படல் வேண்டும்.

“அனைவரும் சிந்துவது ஒரே மாதிரியான இரத்தம் என்பதை கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். எனவே, ஊடகவியலாளர்கள் அன்பு, கருணை, யதார்த்த பண்பு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்” என்றார்.

இவ்வாறு இச்செயற்றிட்டத்தில் பங்குபற்றிய அனைவரும் ஊடகவியலாளர்களின் சமூகப் பொறுப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். வடக்கு,  தெற்கு மக்கள் மன ரீதியாக இணைவதற்கு ஊடகவியலாளர்கள் ஓர் உறவுப் பாலமாக இருக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

ஊடகவியலாளர்களுக்குத் தடையை ஏற்படுத்த முடியாத ஒரு கருவியாகவே எழுதுகோல் உள்ளது. எனவே, அந்தக் கருவியை இவ்வாறான சமூகத்தின் நல்லிணக்கத்துக்குப் பயன்படுத்துவது சாலச் சிறந்ததே.

இதற்காக இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கத்தின் இந்த ஆரம்ப முயற்சி, அதற்கு வழியமைத்துக் கொடுத்துள்ளது என்பது நிச்சயம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .