2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

மரணக்குழிகள்

Johnsan Bastiampillai   / 2021 செப்டெம்பர் 06 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை எமக்குக் கற்றுத்தரும் பாடங்களில் முக்கியமான ஒன்று, ‘இயற்கையை நீ அழித்தால், இயற்கையால் நீ அழிவாய்’ என்பதை, உலக நடத்தைகளை உற்றுநோக்கி அவதானித்தால், அச்சொட்டாக உண்மைதான் என உணரமுடிகிறது. 

இலங்கை தேசத்தின் தனித்துவமான பொக்கிசங்களாகத் திகழும் இயற்கை வளங்களை அழிப்பவர்களுக்கு எதிராக இறுக்கமான சட்டங்கள் அமலாக்கப்பட வேண்டும். சட்டங்கள் கடுமையானவையாக இல்லாமையும் அவை சியாயமாக அமல்படுத்தப்பமாமையுமே இற்றைவரை இயற்கை வளங்கள்  அழிக்கப்பட்டு வருகின்றன.

இயற்கை வளங்களை அழிக்கும் இலங்கை மாதாவின் புதல்வர்களின் நடவடிக்கைகள், தென்கோடியில் இருந்து வடக்கு வரை நீண்டே காணப்படுகின்றன.
அபிவிருத்திகாக என ஒரு வகைப்படுத்தல் காணப்பட்டாலும் கூட, இவ் அபிவிருத்திக்கான இயற்கை அழிப்புகளுக்கு ஒரு சீரான வரைமுறைகள், வரையறைகள் பேணப்படாமையும் அதிகாரிகளின் அசண்டைத்தனங்களும் இயற்கை அழிவடையும் வேகம் அதிகரித்துச் செல்வதற்கு காரணமாகின்றது.

இவ்வாறான நிலையிலேயே, வவுனியா மாவட்டத்தில் இயற்கை வளங்களின் அழிப்பு, வகைதொகையின்றி இடம்பெற்று வருகின்றது. கல், கிரவல், மணல் என்பன சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அகழப்படுவதுடன்  அனுமதித்ததற்கும் அதிகமாகவே  தோண்டப்படுவதால், இன்று வவுனியாவில் பல இடங்களில், பெரும் பாதாளங்கள் உருவாகி உள்ளன. 

வவுனியாவில் 12 இற்கும் அதிகமாக கல்குவாரிகள் கைவிடப்பட்டும் இயங்கும் நிலையிலும் காணப்படுகின்றன. இவை அரசியல் செல்வாக்கு மற்றும் அரச உயர் அதிகாரிகளின் செல்வாக்கால் செயற்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவற்றுக்கான அனுமதிகளும் மிக இலகுவாகவே பெறப்படுகின்றன.

இவ்வாறு பெறப்படும் அனுமதிகள் மூலம் சுற்றுச்சூழல் அதிகாரசபை, கனியவளங்கள் திணைக்களம் என்பவற்றின் தடைகளையும் மீறி தோண்டப்படுகின்றது. இவ்வாறு கைவிடப்பட்ட பல கல்குவாரிகள், மரணக் குழிகளாக உருவாகியமை, மனித, கால்நடைகளின் நடமாட்டங்களுக்கு பெரும் ஆபத்தானதாக மாறி உள்ளது.

ஓமந்தை, பம்பைமடு, ஆசிகுளம் சிதம்பரபுரம், கள்ளிக்குளம் என எங்கெல்லாம் நில மட்டத்துக்கு மேலாக மலை போன்ற அமைப்பில் நிலத்தோற்றம் தெரிகின்றதோ, அங்கெல்லாம் கல் அகழ்வதற்கான அனுமதியை பெற்றுவிடுகின்றனர். எவ்வளவு தொகையைக் கொடுத்தேனும், அனுமதியை பெற சிலர் தயாராகவே இருப்பதற்கு காரணம், அங்கு தாம் செலவு செய்யும் பணத்தைவிட பல மடங்கு அதிகமாகவே வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதாலாகும். 

ஒரு கல்குவாரியை அமைக்கும் போது பல நிபந்தனைகள் உண்டு. குறிப்பாக, கல் உடைக்கும் போது அயலில் உள்ளவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் உடைத்தல் வேண்டும்; வெடி வைத்து உடைப்பது தவிர்க்கப்பட வேண்டும்; நில மட்டத்துக்குக் கீழ் சில அடிகள் மாத்திரமே அகழுதல் வேண்டும்; அவ்வாறு அகழப்பட்ட கிடங்கு, நிரவப்பட்டு நில மட்டத்துக்கு சமப்படுத்தப்பட வேண்டும் என்பன போன்ற பல நிபந்தனைகள் காணப்படுகின்றன.

எனினும், இவற்றில் ஒன்றேனும் பின்பற்றப்படாத நிலையில், வவுனியாவில் சுதந்திரமாக கல் அகழப்படலாம் என்பதனாலேயே அதிகளவானவர்கள் ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். எந்தத் திணைக்களங்களும் அதிகாரசபைகளும் அனுமதி வழங்கியிருந்தனவோ, அவை குறித்த பகுதிக்கு சென்று தமது கண்காணிப்பை மேற்கொள்வதில்லை என்பதே உண்மை.

இதன் காரணமாக இன்று, குறித்த கல்குவாரிகள் அமையப்பெற்ற இடங்கள் மழை காலங்களிலும் நீர் ஊற்று உருவாகி நீர்த்தேக்கங்களாக மாறி இருக்கின்றன. இந்த மரணக்குழிகளுக்குள் மாணவர்கள், இளைஞர்கள் குழிகளின் ஆபத்துகளை அறியாமல், தமது பொழுதைப்போக்கும் இடங்களாகவும் குளிப்பதற்கான நீச்சல் தடாகமாகவும் பயன்படுத்த முனைகின்றார்கள். 

கைவிடப்பட்ட கல்குவாரிகளில் நீர் நிறைந்து நிற்கும்போது, அதன் ஆழம், தன்மை தெரியாமல், நீச்சல் தடாகம் என்ற கற்பனையில், அவற்றில் இறங்கும்போது அவை மரணக்குழிகளாக மாறிவிடுகின்றன.

இந்தக் கைவிடப்பட்ட கல்குவாரிகளில் மரணங்கள் பல சம்பவித்துள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், மாணவர்கள் இருவர் உட்பட நால்வரை பலி எடுத்துள்ளது. 2020இலும் ஒருவரைப் பலி எடுத்துள்ளது. அண்மையில், சிதம்பரபுரத்தில் கைவிடப்பட்ட கல்குவாரியிலும் ஒரு குழந்தையும் சிறுவனொருவனும் விளையாடச்சென்று, நீரில் மூழ்கி பலியாகியிருந்தனர்.

இவ்வாறான நிலை, பம்பைமடுவில் கைவிடப்பட்ட கல்குவாரியிலேயே அதிகளவில் இடம்பெற்று வருகின்றது. பார்ப்போரை கவரக்கூடிய வகையில், வீதியோரத்தில் இயற்கை வனப்புக்கு மத்தியில் அமையப்பெற்றுள்ள குறித்த கல்குவாரி, வெளிப்புறமாக பார்க்கின்றபோது, சிறிய குட்டைபோன்றே காட்சி அளித்தாலும் அதன் ஆழம் சுமார் இரண்டு பனையளவில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்குமப்பால், ஓமந்தையை ஒட்டிய ஏனைய பகுதிகளில் உள்ள கல்குவாரிகள் கால்நடைகளுக்கும் பெரும் சிம்மசொப்பனமாகவே காணப்படுகின்றன. குடிநீருக்காக கற்குவாரிகளுக்குப் பக்கத்தில் வரும் கால்நடைகள், தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றது. 

சாதாரணமாக, கால்நடைகள் என்ற பார்வைக்கு அப்பால், வறுமையான நிலையில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக இருக்கும் கால்நடைகள் இவ்வாறு இறப்பதற்கு, கல்குவாரிகளை நடத்துபவர்களும் நடத்தியவர்களும் செய்யும் அசண்டையான செயற்பாடுகளே காரணம் எனலாம்.

இதற்குமப்பால், ஆசிகுளத்தில் உள்ள கல்குவாரியால் அயலில் உள்ள யேசுபுரம் உட்பட்ட கிராம மக்கள் அன்றாடம் அச்சத்துடன் வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அங்கு, கல் உடைப்பதற்காக வைக்கப்படும் வெடியின் காரணமாக, அதிர்வுகள் ஏற்படுவதுடன் சுவர்கள் வெடித்தும் சிதறும் கற்களால் அயலில் உள்ள வீடுகளில் வீழுந்து பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். 

பல மரணங்களுக்கு காரணமாக மாறியுள்ள இவ்வாறான கல்குவாரிகளை, ஆபத்தற்ற பகுதிகளாக மாற்றுவதற்கு திணைக்களங்களோ உள்ளூராட்சி அமைப்புகளோ திட்டமிட்டுச் செயற்படாமை துர்ப்பாக்கியமே!

இச் சூழலில் தொடர்ந்தும் வவுனியாவில் உள்ள பல உயர்வான பகுதிகளில் கல் உடைப்பதற்காக அனுமதி கோரி பல அரசியல் பிரமுகர்களும் செல்வாக்குமிக்கவர்களும் சில அரச உத்தியோகத்தர்களுக்கு அழுத்தம் பிரயோகித்துக்கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக சில அரச அதிகாரிகள் தாமாகவே இடமாற்றம் பெற்று சென்றுவிடலாமா என்ற மன அழுத்தத்திற்கும் உள்ளாகியுள்ளமை யதார்த்தம்.

வவுனியாவின் கல் உடைக்கும் இடங்கள் எல்லாம் மரணக்குழிகளாக மாறி வரும் நிலையில், கிரவல் அகழும் இடங்கள் எல்லாம் காடழிப்பிற்கான பகுதிகளாகவும் நில சமாந்தரத்தன்மையை அல்லது புவியின் சம செயற்பாட்டை மாற்றியமைக்கும் இடங்களாக மாறி வருவது மற்றுமொரு ஆபத்தாக உருவெடுத்துள்ளது.

இவ்வாறான ஆபத்தான மாவட்டமாக வவுனியாவை மாற்றி வருபவர்கள் ஒருபுறமிருக்க, இவ்வாறான செயற்பாடுகளை கைகட்டி வேடிக்கை பார்ப்பவர்களாக அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் மாறியிருப்பது ஏன்?அவர்களுக்குள்ள தொடர்புகள் யாது? என்பது தொடர்பில் சுற்றுச்சூழல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் போது வெளிப்படும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவ்வாறான விசாரணைகள் இடம்பெறுமா என்பது கேள்வியாகவே உள்ளது.

இதற்குமப்பால் அனுமதியளித்த திணைக்களங்கள் இது தொடர்பில் ஏன் தமது அவதானத்தினை தொடர்ச்சியாக மேற்கொள்வதில்லை என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமாயின் பல செய்திகளும் இவ்வாறான கல்குவாரிகளுக்கான விடைகளும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .