2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

இயற்கையின் சமநிலை பேணும் ‘கொரோனா’

Johnsan Bastiampillai   / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

வி.ரி. சகாதேவராஜா

 

 

கொவிட்- 19 கொள்ளை நோய், உலகளாவிய ரீதியில் பாரிய சமூக, பொருளாதார, சுகாதார மானிட வாழ்வியல் முறைமைகளில் பெருத்த பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பதுடன், மனித உயிர்களை கொத்துக்கொத்தாகப் பலி எடுத்தும் கொண்டிருக்கிறது. 

எமது நாட்டிலும், கோவிட்- 19 பெருந்தொற்றானது பல விஸ்வரரூபங்களை  எடுத்து, ‘டெல்டா’ பிறழ்வுடன் தலைவிரித்துத் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது.

புவியில் உயிரினங்களின் மிகையான இனப்பெருக்கம் ஏற்படும் காலங்களில், இயற்கைச் சமநிலையைப் பேணுவதற்காக, காலத்துக்குக் காலம் பல்வேறு கொள்ளை நோய்கள் உருவாகி, பேரழிவை ஏற்படுத்தி வந்துள்ளதை வரலாற்று ரீதியாகப் பார்க்க முடியும்.

ஆறாம் நூற்றாண்டில்  ஜஸ்டினியன் கொள்ளை நோய், 14ஆம் நூற்றாண்டில் கறுப்பு மரணம், 1918ஆம் ஆண்டு முதல் 1920ஆம் ஆண்டுவரை   ஸ்பானிஷ் காய்ச்சல், 2019ஆம் ஆண்டு முதல் இன்றுவரை  கொவிட்- 19 எனக் கொள்ளைநோய்கள் அவ்வப்போது உலகில் பேரழிவை ஏற்படுத்தி வந்துள்ளன. 

இக்கொள்ளை நோய்கள் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களே பெரும்பாலும் மரணத்தை தழுவினார்கள். அதாவது, இயற்கை நோய் எதிர்ப்பாற்றல் உள்ளவர்களை மட்டுமே, இயற்கை தெரிவு செய்து, புதிய சந்ததிகளைத் தோற்றுவிக்கும். இந்நிகழ்வு, உலகின் குடித்தொகையை சமநிலையில் பேண நடைபெறும் இயற்கையின் திருவிளையாடல் ஆகும். 

இந்த நோயின் தாக்கம், சனநெருக்கடி உள்ள பிரதேசங்களில் அதிகளவு மரணத்தை ஏற்படுத்தக் காரணங்கள் உள்ளன. மாசடைந்த வளி, நச்சு தன்மையான உணவு, துரித உணவு, உடல் வருந்திய உழைப்பு அல்லது உடற்பயிற்சி இன்மை போன்றவை ஆகும். 

குறிப்பாக, நீரழிவு, ஆஸ்த்துமா, இருதய நோய்கள், சிறுநீரக நோய், புற்றுநோய், எய்ட்ஸ், மன அழுத்தம் போன்றவை காரணமாகவோ முதுமை காரணமாகவோ நோய் எதிர்ப்பாற்றல் குறைவடைந்து கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்கின்றது. 

அதேவேளை, சனநெருக்கடி குறைந்த கிராமங்களில் இந்த நோயின் தாக்கம் மிகவும் குறைந்த அளவில் காணப்பட்டு, மரணங்களும் குறைந்தளவிலேயே சம்பவித்துள்ளன. 

நச்சுத்தன்மை இல்லாத   ஆரோக்கியமாக உணவு,
குறைந்தளவான துரித உணவுப்  பழக்கம், சுத்தமான வளி, போதியளவு உடற் பயிற்சி, மகிழ்ச்சியான வாழ்க்கை என வாழ்பவர்கள் நோய் எதிர்ப்பாற்றல் உள்ளவர்களாகக் காணப்படுவார்கள். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டாலும், விரைவில் பூரணமாகச் சுகமடைந்து விடுவர். 

ஆனால், இவர்கள் மூலம் தான், கொரோனா வைரஸ் பெருமளவில் பரவுகின்றது. குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள், வேறு நோயால் பீடிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு, இவர்களிம் இருந்து இலகுவில் கொவிட்-19 நோய் பரவி மரணத்தை ஏற்படுத்துகின்றது.

பொறுப்புடன் கடப்போம்

அகில உலகையும் உலுக்கிவரும் கொவிட்-19 நோய், கடந்தகாலங்களை விட, மிக மோசமாகத் தாண்டவமாடுகிறது. இலங்கையில் வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன;  ஒட்சிசனுடன் கூடிய படுக்கைக்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், நம்மிடையே அஜாக்கிரதையான போக்கு தொடர்ந்தும் நீடித்து வருவதை அவதானிக்க முடிகிறது.

நாட்டில் 100 நோயாளிகளில் கிட்டத்தட்ட ஐவர், இறக்கக்கூடிய கொடுமையான நிலைமையை எட்டுவதை, கடந்த சில நாள்களாக அவதானிக்கிறோம். நோயுற்ற அனைவரும், மிகக் கொடுமையான வலிகளையும் வேதனைகளையும் நோயின் பின்விளைவுகளையும் அனுபவிக்கின்றார்கள். சுவை, மணம் போன்ற அரும்புகள் தற்காலிகமாகத் தொழிற்பாடற்ற நிலையையும் அனுபவிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

எந்த வெளி உதவிகளாலும், இந்த நோயின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காப்பாற்ற முடியாது எனும் யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளும் வழிவகைகள் தொடர்பாக,தொடர்ந்தும் அஜாக்கிரதையாக இருப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். 

தற்போதைய நிலையில், நாம் எப்போதும் ஒரு தொற்றாளருக்கு அருகில் இருக்கிறோம் என எண்ணிக்கொள்ள வேண்டும். 

தொற்றுள்ளவர் நம் உறவினர் ஒருவர் அல்லது நம் நண்பரில் ஒருவர் என்பதை மறக்க வேண்டாம். நம் பாதுகாப்பை, வேறு ஒருவரின் கைகளில் ஒப்படைக்க வேண்டாம். நாம் கட்டாயமாக, இந்த அலை ஓயும் வரையும் கடைப்பிடிக்க வேண்டியவற்றை, பின்வருமாறு பட்டியலிட முடியும். 

1. யாரையும் நம்பி, அருகில் சென்று உரையாட வேண்டாம். ஆகக்குறைந்தது இரண்டு மீற்றர் இடைவெளியை வைத்திருங்கள்.

2. எந்தச் சூழலிலும் மூடிய அறை ஒன்றினுள்ளோ இடமொன்றினுள்ளோ முகக்கவசத்தை அகற்ற வேண்டாம்.

3. எந்த இடத்திலும் 10 நிமிடங்களுக்கு மேல் தரித்து நிற்க வேண்டாம்.

4. அலுவலகத்தில் இணைந்து தேநீர் குடிக்கவோ சாப்பிடவோ வேண்டாம்.

5. யாராவது வலிந்து அழைத்தாலும் கேளிக்கைகளுக்கோ விழாக்களுக்கோ செல்வதைத் தவிர்த்து விடுங்கள். திருமண வீடுகளுக்கும் தான். மரண வீடுகள் என்றால் 10 நிமிடங்களில் வெளியேறுங்கள். முடியாவிட்டால் இரண்டு மீற்றர் இடைவெளியை பேணுங்கள்.

6. வாகனங்களில் பயணிக்கும் போது, கதவின் கண்ணாடி ஊடாக வெளியாட்களுடன் உரையாடுவதை தவிருங்கள்.  இறங்கி உரையாடுவது பாதுகாப்பானது.

7. பொருட்கள், சேவைகளுக்காக வரிசையில் காத்திருங்கள்; யாராவது உங்களை முந்திப்போக எத்தனித்தால் நீங்கள் அவர்களுக்கு வழிவிடுங்கள். நோயை விட சிறிது தாமதித்து  செல்வது பரவாயில்லை.

8. வெளித்தேவைக்காக வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே வெளியே வாருங்கள்.

9. வியாபாரிகள் உடன் நெருக்கமாக நின்று, பேரம் பேசாதீர்கள்;  வியாபாரிகளே! வாடிக்கையாளர்களுடன் நேர்மையாக இருங்கள்.

10. வீட்டுக்குள் கொண்டுவரப்படும் பொருட்களை 24 மணி நேரங்களுக்கு பிறகு பாவிக்கும் வண்ணம் தனியான பாதுகாப்பான இடத்தில் பத்திரப்படுத்துங்கள். மரக்கறி  போன்றவற்றை முடிந்தால் குளோரின் கரைசலில் அமிழ்த்தி, பின்னர் நீரில் அலசி பத்திரப்படுத்துங்கள்.

11. கைகளை எப்போதும் சவர்க்காரம் இட்டு சுத்தம் செய்யுங்கள்.

12. சவர்க்காரம் இட்டு சுத்தம் செய்த பின்னரே முகக்கவசங்களைத் தொடுங்கள்.  

13. நாளை நாமும் தொற்றுக்குள்ளாகலாம். எனவே  தொற்றாளர்களை குற்றவாளிகளாக பார்க்கும் மனநிலையை மாற்றிக்கொள்ளுங்கள்.  

14. எப்போதும் நோய் அறிகுறிகளை மறைக்க வேண்டாம். முடிந்தவரையும் ஒரு வைத்தியரின் ஆலோசனையைப் பெற முயற்சியுங்கள். சந்தேகம் இருந்தால் அரச வைத்தியசாலைகளில்  உங்களை பரிசோதித்துக்கொள்ளலாம்.

நிலைமை இன்னும் மோசமாக மாறுவதற்கு எதிராக, நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இம்முறை வயது வித்தியாசமின்றி அனைவரும் பாதிப்படைந்துள்ளனர். எனவே, விழிப்புடனும் பாதுகாப்புடனும் சமூகப்பொறுப்புடனும் இருப்போம்.

அனைவரும் சுகாதாரத்துறையினரின் ஆலோசனைக்கு அமைய, அனைத்து சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றினால், ஏனையோருக்கு நோய் பரவுவதைத் தடுக்க முடியும்.

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் வாழ வேண்டுமானால், இந்தக் கொள்ளை நோயை எதிர்கொள்வதைத் தவிர, வேறு வழி இல்லை. அதற்கு ஓடிஒழிந்து கொள்ள முடியாது. 

எனவேதான், சுகாதார துறையினர் வழங்கும் வழிகாட்டல்களைப் பின்பற்றி, கொரோனா வை​ரஸை எதிர்கொண்டு வாழப் பழகிக்கொள்வோம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .