2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

நஞ்சுண்ட நோயாளிகள்

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 05 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கையில் திண்மக் கழிவு முகாமைத்துவம் என்பது மிகப்பெரிய சவால் நிறைந்த ஒரு பிரச்சினையாக உருவெடுத்து வந்துள்ளது.

கழிவுகளைச் சேகரிக்கும் முறையற்ற வழிமுறைகள், முறைகேடான கழிவகற்றும் முறைமைகள் திண்மக் கழிவகற்றல் நடவடிக்கைகளில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

தற்போது நடைமுறையிலுள்ள கழிவகற்றும் முறைமைகள் சுற்றாடல் சூழல் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளதோடு மக்கள் மத்தியில் அதிருப்தியையும் தோற்றுவித்துள்ளது.

இதனால் சம காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒட்டு மொத்தமானவர்களும் எதிர்கால சந்ததியும் பாதிக்கப்பட்டுள்ளதோடு தற்போது நடைமுறையிலுள்ள முறைமையற்ற கழிவகற்றும் முறைமைகள்  சுகாதார சமூக பொருளாதார கலாசாரப் பிரச்சினைகளுக்கும் வழி வகுத்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கழிவுகள் சேகரிப்பு, கழிவுகளை ஒதுக்கும் நடவடிக்கைகளை நோட்டமிடுமிடத்து, அதற்கான உட்கட்டமைப்புகளும் வளங்களும் மிகக் குறைவாக அன்றேல் ஒன்றுமே இல்லாத நிலைமைதான் காணப்படுகிறது.

கண்ட கண்ட இடங்களிலெல்லாம் கட்டுப்பாடற்ற விதத்தில் குப்பைகளை வீசுவதும் புதைப்பதும் நாட்டில் சூழல் சம்பந்தமான உணர்வலைகளை உசுப்பி விடுவதற்குக் காரணமாய் அமைந்து விடுகின்றன.

வீடுகளிலும் உற்பத்தித் தொழிற்றுறை இடங்களிலும் இருந்து கடைசியாக ஒதுக்கப்படும் கழிவுகளை, அப்புறப்படுத்துவதற்கான ஒழுங்கான முறைமைகள் இல்லை. 

ஒழுங்கற்ற முறையில் வீசப்படும் கழிவுகளால், வடிகான்கள் தடைப்படுத்தப்படுவதோடு ஆபத்து விளைவிக்கக்கூடிய நோய்களைப் பரப்பும் நுளம்புகள், எலிகள் போன்றவை உருவாகுவதற்கும் தோதாய் அமைந்து விடுகின்றன.

இயற்கைச் சூழலில் அமைந்த திறந்த வெளிகளில் கழிவுகளைக் கொட்டுதல் நிலம், நீர் முகங்கள் மாசடைவதற்கு வழி வகுத்து விடுகிறது. திறந்த வெளிகளில்  கழிவுகளை எரியூட்டுதலும் பாரதூரமான சுகாதாரச் சீர்கேடுகளுக்கு வித்திடுகிறது.

இலங்கையில் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்தைக் கையாளும் முழுப் பொறுப்பும் சட்டப்படி  உள்ளூராட்சி  நிர்வாகத்தையே சார்ந்ததாகும். மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை என்பவற்றின் சட்டப்பிரமாணங்களுக்கமைய அந்தந்த உள்ளூராட்சி நிர்வாகம் கூடுதல் கவனமெடுத்து இயங்க வேண்டிய கடப்பாடு உள்ளது.

திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதில் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளிலுள்ள உள்ளூராட்சி நிரர்வாகம் ஒப்பீட்டளவில் மிகக்குறைந்தளவு அக்கறையே எடுத்திருப்பதால், கடந்த காலங்களில் பொதுமக்கள் ஒரு போராட்டமான நிலைமையையே எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்த நிலைமைகளைச் சீர்செய்து,  இந்தப் பிரச்சினைக்கு சரியான தீர்வைப்பெற்றுக் கொள்ள வேண்டும். வளங்களை ஆகக் கூடிய மட்டத்தில் மீள்பாவனைக்கு உட்படுத்துதல், வீண் விரயத்தைத் தவிர்த்தல், பாவிக்க முடியாத எச்ச சொச்சங்களை இயற்கைக்கு முரணாகாத விதத்தில் அழித்தல் வேண்டும்.

இதற்கு அமைவாக, 2007ஆம் ஆண்டு அமைச்சரவையின் அங்கிகாரம் பெற்ற ‘பிலிசரு’ எனப்படுகின்ற  புதிய திட்டமொன்றை அப்போதைய அரசாங்கம் அமல்படுத்தியது. ‘பிலிசரு’ எனப்படுகின்ற சிங்களச் சொல்லுக்கு ‘மீள்-வளம்’  எனப் பொருள்படும்.

தேசிய கழிவகற்றல் கொள்கைகளை வகுத்தல், கழிவகற்றல் முகாமைத்துவத்தில் ஈடுபட்டுள்ள சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விழிப்புணர்வையூட்டி அவர்களது இயலுமையைக் கட்டியெழுப்புதல், உள்ளூராட்சி நிர்வாகத்தினருக்கு தற்போது நடைமுறையிலுள்ள முறைமைகளில் முன்னேற்றத்தையும் புதிய அணுகுமுறைகளையும் மேற்கொள்வதற்காக தொழில்நுட்ப உதவிகளையும் வளங்களையும் வழங்குதல், கழிவகற்றல் முகாமைத்துவத் திட்டத்தில் சமூக அணிதிரட்டலுக்கூடாகவும் மிகவும் சாதகமான முறையில் வளங்களைப் பாவிப்பதற்கான இலகு படுத்தல்களை வழங்குதல், கழிவகற்றல் திட்டத்தைக் கண்காணித்தல், கேட்டுக் கொண்டபடி செய்யாத பங்காளர்களுக்கெதிராக நீண்ட கால வழிமுறையில் சட்ட நடவடிக்கை எடுப்பது சம்பந்தமான விளக்கத்தை அளித்தல் என்பவை உள்ளடங்கியதாக ‘மீள்வளம்’ நிகழ்ச்சித் திட்டம் 2008 ஜனவரியிலிருந்து அடுத்து வந்த மூன்று வருட காலத்திற்கு 5.675 பில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் அமல்படுத்தப்பட்டது.

எதிர்கால சந்ததிகள் ஆகக் கூடிய மட்டத்தில் வளங்களை மீளவும் பாவித்தல், பாவித்த வளங்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்துதல், புதிய வளங்களைக் கண்டுபிடித்தல் என்பனவற்றில் மிகப் பொருத்தமானதும் கழிவுகளை அகற்றுவதில் சூழலுக்குப் பங்கம் ஏற்படாததுமான வழிவகைகளை உருவாக்குதல் மூலம் ‘மீள்வளம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான இலக்காக இருந்ததோடு,  அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் திண்மக் கழிவுப் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்றும் இலக்கு நிரணயிக்கப்பட்டது.

ஆனால் காலம் கடந்ததைத் தவிர, ஆன பலன் எதுவுமே கிடைக்கவில்லை. அறிக்கைகளின்படி, நாட்டில் ஆகக் கூடுதலான திண்மக் கழிவுகளை வெளிக்கொண்டுவரும் முதலாவது இடமாக கொழும்பு மாநகரம் காணப்படுகிறது.

அதற்கடுத்ததாக, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இடம்பிடித்திருக்கின்றன. நமது கழிவுகளைக் கொண்டு,  ஆண்டுக்குச் சராசரியாக 100,000 தொன் சேதனப் பசளையை உற்பத்தி செய்யக்கூடிய கொள்ளளவு நம்மிடம் உள்ளது. இது நமது விவசாயிகள் இப்பொழுது கையாளும் உரப்பாவினையில் மூன்றில் ஒரு பகுதியை ஈடு செய்யப் போதுமானது.

தற்போது முறையற்ற விதத்தில் அப்புறப்படுத்தப்படும் இந்தக் கழிவுகளைக் கொண்டு, இவ்வளவு தொகை சேதன வளமாக்கிகளை நாம் உற்பத்தி செய்வோமானால் ஒரு புறம் நமது மண் வளத்தைப் பாதுகாப்பதோடு மறுபுறத்தில் இயற்கைச் சமநிலையைப் பேணிக் கொள்ளவும் பாதுகாப்பான வழி முறையேற்படும்.

இன்னொரு புறத்தில் உரத்தை  வாங்குவதற்காக  வெளிநாடுகளுக்கு அனுப்பும் 1.6 பில்லியன் ரூபாய் பெருந்தொகைப் பணத்தையும் மீதப்படுத்திக் கொள்ள முடியும். இன்னொரு வகையில், இரசாயனங்களால் நமது மண்வளம் நஞ்சூட்டப் படுவதையும் உறுதியாகத் தடுத்துக் கொள்ள முடியும். 

இரசாயனப் பாவனை என்பது நிலம், நீர், காற்று என்பனவற்றையும் நாம் உண்ணும் உணவையும் சிறுகச் சிறுக நஞ்சூட்டப்பட்டதாக மாற்றுவதற்கே வழிசெய்கிறது.

நாம் உண்ணும் உணவு, காய் கறிகள், பழவகைகள், தானியங்கள் குளங்கள் வயல்களிலுள்ள நன்நீர் மீன்கள், இறைச்சிக் கோழி என்பவை இப்பொழுது சிறிதளவேனும் இரசாயனங்கள் கலக்காததாக இல்லை.

இவற்றை உண்பதன்  மூலம், நமது உடல் இயல்புக்கு மாறான மாற்றங்களுக்குள்ளாகி பலவீனப்பட்டுப் போகிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, இப்பொழுது பெண் பிள்ளைகள் மிகச் சிறிய வயதில் பருவமடைந்து வருவதைக் குறிப்பிடலாம்.

நமது விவசாயிகள்  அமோக விளைச்சலைப் பெறும் பேராசை காரணமாகவும்  வளங்களைச் சுரண்டும் மேற்கு வல்லாதிக்க சக்திகள், ஐரோப்பிய நாடுகளின் நயவஞ்கத்தின்பால் கவரப்பட்டு இயற்கையோடு இணைந்த விவசாயத்தைக் கைவிட்டதால், இன்று நாமும் நமது எதிர்கால சந்ததியும் நஞ்சுண்ட நோயாளிகளாக வாழ வேண்டியுள்ளது.

இரசாயனங்கள் பூச்சிக் கொல்லிகள், களைநாசினிகள் கிருமி நாசினிகளைப் பாவிப்பதன்முலம் குறுகிய காலத்தில் அதிகமான விளைச்சலையும் அதன் மூலமாக கூடுதல் வருமானத்தையும் பெறமுடியும் என விவசாயிகள் நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

உண்மை நிலைமை அதுவல்ல; உண்மையில் இத்தகைய இரசாயனப் பாவனை என்பது ஒப்பீட்டளவில், எமது பாரம்பரிய விவசாயத்தின் மூலம் கிடைத்த பலாபலன்களைக் குறைத்திருக்கவே செய்துள்ளது.

ஒட்டுமொத்தத்தில் பார்த்தால், இரசாயன மற்றும் அசேதனப் பசளைப் பாவனையின் மூலம், நமது நாட்டின் மண்வளம் நாசம் செய்யப்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இதனுடன் இணைந்ததாக ஒட்டுமொத்த சூழல் மாசுபடுவதற்கும் காரணங்களாய் அமைந்து, உபாதைகளையும் ஆரோக்கியமற்ற உடல் உள நிலைமையையும் ஏற்படுத்தியுள்ளது.

இத்தகையதொரு சாபக்கேடான நிலைமைகளிலிருந்து மீள்வதற்கு எல்லாத்தரப்பினரும் தங்களாலான எல்லா நடவடிக்கைகளையும் இப்பொழுதிருந்தே எடுத்தாக வேண்டும். திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம் அதற்கு ஒரு திறவு கோலாகவும் தொடக்க புள்ளியாகவும் இருக்கட்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .