2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

நவம்பர் -02 உள்ளிட்ட போராட்டங்கள் எதற்காக?

Johnsan Bastiampillai   / 2022 நவம்பர் 07 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

என்.கே அஷோக்பரன்

Twitter: @nkashokbharan

 

 

வரலாறு காணாத மக்கள் எழுச்சியை இலங்கை சந்தித்து, அதன் வாயிலாக, 2019 நவம்பரில் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்‌ஷ, வெறும் இரண்டரை ஆண்டு பதவிக்காலத்துக்குள் பதவி விலகியமை, பெரும் வரலாற்று நிகழ்வு. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. 

இந்த மக்கள் எழுச்சிக்கான காரணம், இலங்கை சந்தித்து நின்ற வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியும் அதன் விளைவாக மக்களால் தம் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலை உருவானதுமாகும். 

எரிபொருள் பற்றாக்குறை; அதன் விளைவாக மின்சாரத் தடைகள் எனபன, இலங்கையை ஸ்தம்பிக்கச் செய்திருந்தன. எதிர்காலம் பற்றிய அச்சம் ஒருபுறமும் நிகழ்கால வாழ்வைக் கொண்டு நடத்துவதற்கான சவால்கள் இன்னொருபுறமுமாக மக்கள் கலங்கிப்போயிருந்த நிலையில், பல மாதங்களாக எதுவித முன்னேற்றமும் இல்லாமையால், ‘இது போதும்’ என மக்கள் தொடர் போராட்டங்களில், தாமாக முன்வந்து, அதாவது அரசியல் கட்சிகள், அமைப்புகளின் அழைப்புகள்  இல்லாமல், வீதிக்கு இறங்கி, மிக அமைதியான முறையில் கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கத்துக்கு எதிரான தமது எதிர்ப்பை, தொடர்ந்து பதிவு செய்தனர்.

இந்த மக்கள் எழுச்சியை, தமக்கு சாதகமாக்கிக்கொள்ள முனைந்த, அதுவரை காலமும் வங்குரோத்து அரசியலை முன்னெடுத்து வந்த இடதுசாரி அரசியல் கட்சிகள், மக்கள் போராட்டத்துக்கு உரிமை கோரத்தொடங்கினார்கள். அதுவரை காலமும் மிக அமைதியான முறையில் இடம்பெற்று வந்த மக்கள் பேராட்டங்களுக்குள் வன்முறையைக் கொண்டு வந்தவர்கள், இந்த இடதுசாரி மாக்ஸிஸவாத சக்திகள்தான். 

எது எவ்வாறாயினும், மக்கள் எழுச்சி என்பது கோட்டாவின் பதவி விலகலை வேண்டியே இடம்பெற்றது. அதற்குள் ‘சிஸ்டம் சேன்ஞ்’ என்று, தமது நிகழ்ச்சி நிரலை நுழைக்க, இடதுசாரிகள் பகீரதப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் கோட்டா பதவி விலகியபின், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியவுடன், அவருக்கு கால அவகாசம் தந்து, அவராவது இந்த நிலையிலிருந்து இலங்கையை மீட்பாரா என்று மக்கள் காத்திருக்க விரும்பினாலும், இந்த இடதுசாரிகளுக்கு எண்ணம் அதில் இல்லை. 

அவர்களைப் பொறுத்தவரையில், அவர்களது சுயநல அரசியலுக்கு நாடு இதைவிட மோசமான நிலையை அடையவேண்டும். நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்தே கிடக்க வேண்டும்; அதனை எவரும் மீட்டுவிடக் கூடாது. அப்படியானால்தான் அடுத்த தேர்தலில் தாம் இன்னும் கொஞ்ச ஆசனங்களையேனும் வெல்ல முடியும். இதுதான் இந்த இடதுசாரி சக்திகளின் கணக்கு!

இதற்கு அழகான வார்த்தைகளில், நிறைய வியாக்கியானங்களை அவர்கள் முன்வைப்பார்கள். இடதுசாரிகளின் இந்தப் போலி முகத்துக்கு மிகப் பெரிய உதாரணம், வருமான வரி அதிகரிப்புக்கு இன்று அவர்கள் காட்டும் எதிர்ப்பு. இவ்வளவு காலமும், வருமான வரி அதிகரிக்கப்பட வேண்டும்; இலங்கையில் வருமான வரி அறவீடு குறைவாக இருக்கிறது என்று குரல் கொடுத்து வந்தவர்கள், இன்று ரணில் விக்கிரமசிங்க வருமான வரிகளை அதிகரித்த பின்னர், அதற்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள். 

மறுபுறத்தில், இலங்கையை இந்தப் பொருளாதார சரிவிலிருந்து மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியத்தின் பொறிமுறையை நாடுவதையும் இடதுசாரிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் பொறிமுறையை நாடக்கூடாது என்ற கொள்கையைக் கொண்டிருந்து, அதனால் நாட்டை மிக மோசமான பொருளாதார நிலைக்குத் தள்ளிய கோட்டாவையும் அவரது அரசாங்கத்தையும் இதே இடதுசாரிகள் எதிர்க்கிறார்கள். யோசித்துப் பார்த்தால் எதிர்ப்பது மட்டும்தான் ஜே.வி.பி உள்ளிட்ட இந்த இடதுசாரிகள் வேலையாக இருந்திருக்கிறது.

ஜே.வி.பி என்பது 2001-2003 காலப்பகுதியில் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக, மிகப்பெரும் இனவாதப் பிரசாரத்தை முன்னெடுத்து, சமாதான முயற்சிகளைச் சீரழித்தது. வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிராக உயர்நீதிமன்றம் சென்று, வடக்கு-கிழக்கை பிரித்ததும் இதே ஜே.வி.பிதான். தமது இனவெறிப் பிரசாரத்தால், மஹிந்த ராஜபக்‌ஷவைப் பதவிக்கு கொண்டு வந்துவிட்டு, பிறகு மஹிந்த ராஜபக்‌ஷவோடு முரண்பட்டு, பிரிந்து வந்தார்கள். இவர்ளைப் பொறுத்தவரையில், கொள்கை என்று பேசுவதில், ‘வாய்ச்சொல் வீரர்’களேயன்றி, இவர்கள் மிகப்பெரும் சந்தர்ப்பவாதிகள். 

மனித உரிமை என்று பேசுவார்கள்; பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் உயிர்களைப் பறிக்கும் காட்டுமிராண்டி நடவடிக்கையான பகிடிவதைக்கு எதிராக ஒருவார்த்தை கூடப் பேச மாட்டார்கள். ஏனென்றால், பகிடிவதைதான் இடதுசாரிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான வழிகளில் முக்கியமானது. இலங்கையின் பல்கலைக்கழகங்களைச் சீரழித்தவர்கள் இந்த இடதுசாரிகள்தான். 

இலங்கையின் ஆடைத் தொழிற்றுறையையும் அழித்தவர்கள் இவர்கள்தான். இலங்கையின் முன்னணி ஆடை நிறுவனங்கள், தமது தொழிற்சாலைகளை இலங்கையிலிருந்து பங்களாதேஷ், வியட்நாம் என்று இடம்மாற்ற பிரதான காரணம் இந்த இடதுசாரி அரசியல்தான். கடைசியில் இழப்பு நாட்டுக்கானது. 

தொழிலாளர், தொழிற்றுறை பற்றி ஜே.வி.பி நிறையப் பேசினாலும், அது மலையக தோட்டத் தொழிலாளர் பற்றி எல்லாம் அதிகமாகப் பேசுவதில்லை. வடக்கு-கிழக்கு மக்கள், அவர்களின் நிலை பற்றிப் பேசுவதில்லை. ஏனென்றால் அடிப்படையில் ஜே.வி.பியின் அரசியல் என்பது பெருந்தேசியவாத, இனவாத அரசியல்; இதற்கு வரலாறு சாட்சி.

 மஹிந்த ராஜபக்‌ஷர்களைவிட மிகப்பெரிய இனவாதிகள் ஜே.வி.பியினர்தான் என்பதை 1990களின் பிற்பகுதியிலிருந்து தெற்கில் வசித்த தமிழர்கள் நன்கறிவர். 

இன்று இலங்கையில் இடம்பெற்ற பெரும் மக்கள் எழுச்சியை, தமக்கான அரசியலாக மாற்றிக்கொள்ளத்தான் இந்த இடதுசாரிக் கூட்டம் இன்றுவரை தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு தலைகால் புரியாத, தாம் எப்படியும் அடுத்த முறை ஆட்சியைப் பிடித்துவிட வேண்டுமென அங்கலாய்ப்பில் காத்திருக்கும் ‘பிரதான’ எதிர்க்கட்சிகள் ஆதரவு வேறு வழங்குகிறார்கள். 

ஆனால், தமது போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் ‘பிரதான’ எதிர்க்கட்சிகளுக்கு தாம் வழங்கும் மரியாதை என்ன என்பதை, ஜூலையில் சஜித் பிரேமதாஸ தாக்கப்பட்டதன் மூலமும், நவம்பர் இரண்டாம் திகதி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த சஜித் பிரேமதாஸ ‘ஹூ’ அடித்து விரட்டப்பட்டதன் மூலமும், இடதுசாரிகள் தெளிவாக உணர்த்தியிருக்கிறார்கள். 

ஆனால், சின்னப்பிள்ளைத்தனமான இந்தப் ‘பிரதான’ எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு, இது இன்னமும் விளங்கவில்லை. இதற்கு நடுவில், இந்தக் கட்சிகளின் சில கோமாளி அரசியல்வாதிகள், தம்மைப் பெரும் போராட்டக்காரர்களாகக் காட்ட முன்னரங்கில் இறங்கி, பொலிஸாருடன் சண்டையிட்டு, அதன்மூலம் அரசியல் இலாபம் காண விளைகிறார்கள்.
நவம்பர் - 02 போராட்டம் கூட, பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிரான போராட்டமாம். நல்லது! 

ஆனால், அவர்களது பிரதான கோரிக்கை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சில மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒன்பது வருடமாக பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்து கொண்டு, மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக்கொண்டிருக்கும் வசந்த முதலிகேயும், இடதுசாரிகளின் பிக்கு மாணவர் அமைப்பைச் சார்ந்த ஸ்ரீதம்ம தேரரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான். 

பல்லாண்டுகளாக இதே பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றி முன்னரங்கில் பேசமாட்டார்கள். இதுதான் இந்த இனவாத ஜே.வி.பி மற்றும் பெரடுகாமியின் உண்மை முகம். இதற்குத்தான் சில தமிழர்களும் பெரும் ஆதரவளித்து வருகிறார்கள்.

இதில் சிலர், தம்முடைய அரசியல் வாழ்வுக்கான ஓர் உந்து சக்தியாக, இந்தப் போராட்டங்களைப் பயன்படுத்த விரும்புகிறார்கள் என்பது அவர்களது நடவடிக்கைகளில் இருந்தே தெரிகிறது. இந்தப் போராட்டம் மூலம் கிடைக்கும் பிரபல்யத்தை, அரசியல் மூலம் அறுவடை செய்யலாம் என்பது அவர்கள் கணக்கு!

இப்படியாக எல்லாச் சுயநல கோஷ்டியும் ஒன்று சேர்ந்து, இலங்கையின் பொருளாதார மீட்சியை தடுப்பதற்காக பகீரதப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு, தாம் மக்கள் நலனில் பெரும் அக்கறையுள்ளவர்களாகக் காட்டிக்கொள்ளும் பேச்சுகள் வேறு!

நாட்டின் பொருளாதார மீட்சிதான், அனைவரையும் வாழவைக்கும். மீட்சிக்கான பயணம் கடினமானது. அதை இலங்கை சந்தித்தே ஆக வேண்டும். மந்திரத்தால் மாங்கனிகள் வீழ்வதில்லை. போராட்டங்களால் பொருளாதாரம் வளர்வதில்லை. இதனை இலங்கை மக்கள் புரிந்துகொண்டதால்தான், கோட்டாவை விரட்ட மக்கள் தாமாகவே திரண்டு வந்ததைப்போல, இந்த இடதுசாரிகளின் சுயநல போராட்டங்களுக்கும் மக்கள் வருவதில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X