2023 ஜூன் 10, சனிக்கிழமை

வருமான வரிக்கு எதிரான தொழிற்சங்கங்களின் போராட்டம்; சில கேள்விகள்

Johnsan Bastiampillai   / 2023 மார்ச் 26 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

என்.கே அஷோக்பரன்

Twitter: @nkashokbharan

 

 

இன்று வரும், நாளை வரும் என்று பல மாதங்களாய் காத்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிணையெடுப்பு உதவி, இலங்கையின் கைக்கெட்டும் நிலைக்கு வந்துள்ளது. 

‘இதிலிருந்து இனி இலங்கை மீள முடியாது’ என்ற நிலையிலிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துக்கொண்ட உறுதியான, அதேவேளை கடினமான, பிரபல்யமற்ற மீட்சிக்கான பல நடவடிக்கைகள் மூலம், இன்று பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்சி எனும் நீண்டகாலப் பயணத்தில், முதலடியை இலங்கை எடுத்து வைக்க எத்தனிக்கிறது. 

இந்த நிலையில்தான், இலங்கையின் பல தொழிற்சங்கங்களும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன. வரலாறு காணாத நாட்டின் மோசமான நிதி நெருக்கடிக்கு மத்தியில், சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புக்கான முன்நிபந்தனையாக விதிக்கப்பட்ட அதிகரித்த வரிகள் உட்பட, உயர் வாழ்க்கைச் செலவுகளுக்கு எதிராக இலங்கை முழுவதும் உள்ள வங்கிகள், மருத்துவமனைகள், பாடசாலைகள், ரயில் சேவை உள்ளிட்ட பல துறைகளிலுமுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஜனவரி முதல் வருமான வரி கடுமையாக உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தொழிற்சங்கங்களுடன் தொழில் வல்லுநர்களும் இணைந்துள்ளனர். தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தின் காலம் புதிய வரிகளைத் திரும்பப் பெறுவதற்கான அரசாங்கத்தின் பதிலைப் பொறுத்தது என்று கூறுகின்றன. அவை, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து $ 2.9 பில்லியன் டொலர் மீட்புப் பொதிக்கு தகுதி பெற எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அடங்கும். 

மேலும், அதிக வட்டி விகிதத்தை குறைக்கவும், மின் கட்டணத்தை குறைக்கவும், போராட்டக்காரர்கள் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அரசாங்க உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தின் பிரதான கோரிக்கையாக, வருமான வரி அளவு குறைக்கப்பட வேண்டும் என்பதாகத்தான் இருக்கின்றது.

2022ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டம், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான வரி முறையில் திருத்தங்களை உறுதிப்படுத்தும் வகையில், பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, 19 டிசெம்பர் 2022 அன்று சபாநாயகரால் சான்றளிக்கப்பட்டது. தனிநபர் வருமான வரி மீதான வரி விதிகள் தொடர்பான திருத்தங்கள், ஜனவரி முதலாம் திகதி முதல் அமலுக்கு வந்தன.

முதலாம் திகதி ஜனவரி 2023 முதல், தனிநபர் வருமான வரி அரங்கில் அறிமுகப்படுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றமாக, வருமான வரி வீத அதிகரிப்பையும் வருமான வரி விலக்கு அளவின் குறைவையும் குறிப்பிடலாம். 

வரிவிலக்குப் பெற்ற வருமான அளவாக இருந்த வருடத்துக்கு மூன்று மில்லியன் ரூபாய் (மாதத்துக்கு 2,50,000 ரூபாய்), வருடத்துக்கு 1.2 மில்லியன் ரூபாயாக (மாதத்துக்கு 1,00,000 ரூபாய்) குறைக்கப்பட்டது. இதன் அர்த்தம், முன்பு, மாதத்துக்கு 2,50,000 ரூபாய்க்கு அதிகமாக வருமானம் பெற்றவர்களே வரி செலுத்த வேண்டியதாக இருந்த நிலையில், தற்போது மாதம் 1,00,000 ரூபாய்க்கு அதிகமாக வருமானம் பெறுகின்றவர்கள் வரி செலுத்த வேண்டியதாக உள்ளது. 

வருமான வரி விகிதங்கள், ஆரோகண அடிப்படையில் ஒவ்வொரு ரூ. 5,00,000 வருமானக் கட்டங்களுக்கும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது. ஒவ்வொருவருக்கும் ரூ. 5,00,000 வருமானக் கட்டங்களுக்கும், தனிநபர் வருமான வரி விகிதம் 6%, 12%, 18%, 24%, 30%, 36% பொருந்தும். 

உதாரணமாக, வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.19,00,000 இருக்கும் ஒரு நபரை எடுத்துக் கொண்டால். ஆண்டுக்கு ரூ. 19,00,000 வருமானத்துக்கு வருமான வரி விலக்குள்ள வருமானம் 1,200,000 ஆகும். ஆகவே, வருமான வரி கட்ட வேண்டிய வருமானம் ரூ. 7,00,000 ஆகும். அதன்படி, வருமான வரி விகிதம் முதல் ரூ. 5,00,000 க்கு 6%; மற்றும் மிகுதி ரூ. 200,000 க்கு 12%. ஆகவே செலுத்த வேண்டிய மொத்த வரி ரூ. 54,000 ஆகும். 

2023 ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர், கோட்டாபய ராஜபக்‌ஷவின் நாட்டை வங்குரோத்தாக்கிய வரிக்கொள்கையின் கீழ், வருடத்துக்கு மூன்று மில்லியன் ரூபாய் வரை வருமான வரி கட்டத் தேவையில்லை. ஆகவே, மேற்சொன்ன நபர் முன்னர் எந்தவொரு வருமான வரியையும் கட்டியிருக்க மாட்டார். ஆனால் தற்போது, வருடத்துக்கு ரூ. 54,000 (மாதத்துக்கு ரூ.4,500) வருமான வரியாக செலுத்த வேண்டியதாக உள்ளது. 

ஆரோகண அடிப்படையில் வருமான வரி வீதங்கள் அமைந்திருப்பதால், வருமானம் அதிகரிக்க அதிகரிக்க, வரி வீதமும் அதிகரிக்கும். மாதம் ரூ. 1,00,000 அல்லது அதற்கு குறைவாக வருமானம் பெறுபவர் வருமான வரி செலுத்தத் தேவையில்லை. மாதம் ரூ.1,50,000 வருமானம் பெறுபவர் மாதம் ரூ 3,500 தான் வரியாக செலுத்த வேண்டும். மாதம் ரூ. 200,000 வருமானம் பெறுபவர் மாதம் ரூ.10,000 மும், மாதம் ரூ. 2,50,000 வருமானம் பெறுபவர் மாதம் ரூ.21,000 மும் வருமான வரி செலுத்த வேண்டும். மாதம் ரூ. 4,00,000 வருமானம் பெறுபவர் மாதம் ரூ.70,500 உம், மாதம் ரூ.10,00,000 வருமானம் பெறுபவர் மாதம் ரூ.2,86,500 உம் வருமான வரியாகச் செலுத்த வேண்டும். வருமான அளவு கூடக் கூட, ஒவ்வொரு 5,00,000 இற்கும் வரி வீதம் அதிகரிக்கும் ஆரோகண வரிவிதிப்பு முறை இதுவாகும்.

இந்த வரி முறையின் கீழ், மிக அதிகமாக வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வருமான வரி விதிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இதில் பாதிப்பு என்று பார்த்தால் கூட, அது அதிக வருமானம் பெறுபவர்களுக்குத்தான். இதற்காக ஏன் அரசாங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் செய்கிறார்கள்? ஆசிரியர்களில் எத்தனை பேர் ரூ 1,00,000 இற்கு மேல் சம்பளம் பெறுகிறார்கள்? அரசாங்க உத்தியோகத்தர்கள் எத்தனை பேர் ரூ 1,00,000 இற்கு மேல் சம்பளம் பெறுகிறார்கள்? 

ரூ 1,00,000 இற்கு குறைவாக சம்பளம் பெறுபவர்களுக்கு வருமான வரியே கிடையாது. ஆகவே இவர்கள் எதற்காக வருமான வரி விதிப்புக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்பது ஊன்றிக் கவனிக்க வேண்டிய கேள்வியாகவே இருக்கிறது. 

ஏறத்தாழ ரூ 5,00,000 அல்லது அதற்கு மேல் மாதச்சம்பளம் பெறுகிறவர்களைத்தான் இந்த வரிகள் அதிகமாகப் ‘பாதிக்கின்றன’ எனலாம். மாதச்சம்பளம் ரூ 5,00,000 இற்கு மாதந்தோறும் ரூ 1,06,500 வரியாகச் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்திய பின்னரும், அவர்களிடம் ரூ 3,93,500 வரிக்குப் பின்னரான வருமானம் இருக்கும். 

இலங்கை சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரவியல் துறையால் வெளியிடப்பட்ட குடும்ப வருமானம் மற்றும் செலவுக் கணக்கெடுப்பு 2019 தரவுகளின் படி, இலங்கையின் நகர்ப்புற குடும்பம் ஒன்றின் சராசரி மாத வருமானம் ரூ.1,16,670 ஆகும். கிராமப்புற குடும்பம் ஒன்றின் சராசரி மாத வருமானம் ரூ.69,517 ஆகும். பெருந்தோட்டத்துறை குடும்பம் ஒன்றின் சராசரி மாத வருமானம் ரூ.46,865 ஆகும். இது குடும்ப வருமானம்; தனிநபர் வருமானம் அல்ல! 

ஆகவே, பெரும்பாலான இலங்கையர்கள், (சில தரவுகளின் படி, 85%-90%- ஆன இலங்கையர்கள்) வருமான வரி செலுத்த வேண்டியதே இல்லை. உண்மை நிலைவரம் இப்படியாக இருக்கையில், தொழிற்சங்கங்கள் வருமான வரி அதிகரிப்பை எதிர்த்துப் போராடுவது அர்த்தமற்றதாக இருக்கிறது. “அதிக வருமானம் பெறுபவர்களிடம், அதிக வரி அறவிடுங்கள்” என்று உலகமெல்லாம் தொழிற்சங்கங்கள் போராடும் போது, இலங்கையில் அதற்கு நேரெதிராக வருமான வரியைக் குறையுங்கள் என்று தொழிற்சங்கங்கள் போராடுவது நகைமுரண். நிற்க!

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி நிலை பரந்துபட்டளவில் விலை உயர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட, மிக அடித்தட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் உதவி அவசியம். அப்படி அரசாங்கம் உதவி செய்ய, அரசாங்கத்துக்கு வருமானம் அவசியம். வரியும் விதிக்கக்கூடாது; உதவியும் செய்ய வேண்டும் என்றால், அரசாங்கம் அதை எப்படிச் செய்வது? கோட்டா செய்தது போல, பணத்தை அச்சிட்டு அச்சிட்டு செலவு செய்தால், இலங்கையில் பணவீக்கம் சிம்பாப்வேயைப் போலத்தான் இருக்கும். பிறகு, 100 மில்லியன் ரூபாய் கொடுத்து ஒரு பாணை வாங்க வேண்டிய நிலைதான் ஏற்படும். 

பொருளியல் சற்றே கடினமான விடயம்; சாதாரண மக்களுக்கு புரிவது கடினம் என்பதைப் புரிந்துகொண்ட சுயநல எண்ணம் கொண்ட தொழிற்சங்கத் தலைவர்கள், தமது அரசியலுக்காகவும், தமது அரசியல் முதலாளிகளுக்காகவும், நடத்தும் நாடகம்தான் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைகள் என்ற உண்மையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .